களத்தில் இருந்து முற்றிலும் வெளியேற்றப்பட்ட ஓபிஎஸ்.. நினைத்ததை நடத்தி முடித்தாரா இபிஎஸ்? ஷாக் கொடுத்த தேர்தல் ஆணையம்!!

Author: Babu Lakshmanan
8 February 2023, 12:43 pm
Quick Share

ஈரோடு இடைத்தேர்தலில் தேர்தல் ஆணையம் மேற்கொண்ட நடவடிக்கை எடப்பாடி பழனிசாமி தரப்புக்கு ஆதரவாக மாறியிருப்பது ஓ.பன்னீர்செல்வம் தரப்பினரை அதிர்ச்சிக்குள்ளாக்கியுள்ளது.

உச்சநீதிமன்றத்தில் இரட்டை இலை தொடர்பாக தொடரப்பட்ட வழக்கில், அதிமுக பொதுக்குழுவை கூட்டி வேட்பாளரை தேர்ந்தெடுக்க வேண்டும் என்றும், அதில் கட்சியில் இருந்து நீக்கப்பட்ட ஓ.பன்னீர்செல்வம் உள்ளிட்டோருக்கும் வாக்களிக்க வாய்ப்பு வழங்கவேண்டும் என்றும் உத்தரவிடப்பட்டது.

இதனால், ஓபிஎஸ் மற்றும் இபிஎஸ் தரப்பினர் இணைந்து பொது வேட்பாளரை அறிவிக்க வேண்டிய நிலை ஏற்பட்டது. எனவே, ஓபிஎஸ் தரப்பில் அறிவிக்கப்பட்ட வேட்பாளர் செந்தில்முருகன் தனது வேட்புமனுவை திரும்பப் பெற்றார். தொடர்ந்து, தென்னரசுவை வேட்பாளராக முன்னிறுத்தி அதிமுக உறுப்பினர்களிடம் இருந்து பெறப்பட்ட படிவங்களை தமிழ் மகன் உசேன் நேற்று தேர்தல் ஆணையத்திடம் சமர்பித்தார். இதனால், இரட்டை இலை சின்னம் கிடைப்பது உறுதியானது.

இதையடுத்து, எடப்பாடி பழனிசாமியுடன் இணைய ஓ.பன்னீர்செல்வம் மற்றும் அவரது ஆதரவாளர்கள் பல்வேறு முயற்சிகளை மேற்கொண்டு வருகின்றனர்.

இதனிடையே, ஈரோடு இடைத்தேர்தலுக்கான பொறுப்பாளர்கள் பட்டியலை அதிமுக மற்றும் திமுகவினர் வெளியிட்டுள்ளனர். இந்நிலையில், அதிமுகவில் நட்சத்திர பேச்சாளர்கள் பட்டியலை ஓபிஎஸ், இபிஎஸ் என இருதரப்பிலும் தமிழ்நாடு தலைமை தேர்தல் அலுவலரிடம் நட்சத்திர பேச்சாளர் பட்டியல் அளிக்கப்பட்டிருந்தது.

ஆனால், ஓபிஎஸ் தரப்புக்கு மறுப்பு தெரிவித்து, இபிஎஸ் தரப்புக்கு மட்டும் தேர்தல் ஆணையம் அனுமதி வழங்கியுள்ளது. தேர்தல் ஆணையம் வெளியிட்ட பட்டியலில் எடப்பாடி பழனிசாமி, செங்கோட்டையன், தமிழ் மகன் உசேன், முனுசாமி உள்ளிட்ட 40 பேர் பட்டியல் இடம்பெற்றுள்ளனர்.

ஆக மொத்தம் வேட்பாளர் தேர்வு, சின்னம் ஒதுக்கீடு என அனைத்தும் எடப்பாடி பழனிசாமி தரப்பினருக்கு சாதகமாகவே அமைந்துள்ள நிலையில், ஓபிஎஸ் தரப்பினர் இந்தத் தேர்தல் களத்தில் முற்றிலுமாக வெளியேற்றப்பட்ட நிலையே ஏற்பட்டுள்ளது.

Views: - 160

0

0