அரசு அதிகாரிகளின் கூட்டத்தில் அமைச்சரின் மகனுக்கு என்ன வேலை..? முன்னாள் மத்திய அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன் கேள்வி..?

Author: Babu Lakshmanan
10 November 2022, 2:52 pm

கன்னியாகுமரி மாவட்டத்தில் வளர்ச்சி பணிகள் குறித்து அதிகாரிகள் கலந்து கொள்ளும் கூட்டங்களில் அமைச்சர் மனோதங்கராஜின் மகனுக்கு என்ன வேலை என்று முன்னாள் மத்திய இணை அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன் கேள்வி எழுப்பியுள்ளார்.

கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவில் பாஜக அலுவலகத்தில் முன்னாள் மத்திய அமைச்சர் பொன் ராதாகிருஷ்ணன் மற்றும் நாகர்கோவில் தொகுதி பாஜக எம்எல்ஏ எம் ஆர் காந்தி ஆகிய கூட்டாக செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்தனர்.

அப்போது, முன்னாள் மத்திய அமைச்சர் பொன் ராதாகிருஷ்ணன் கூறும்போது ” கன்னியாகுமரி மாவட்டத்தில் மண்டைக்காடு கலவரத்திற்கு பின்னர் வேணுகோபால் கமிஷன் பரிந்துரை இதுவரை கடைபிடிக்கப்பட்டு வந்தது. அதன்படி புதிதாக வழிபாட்டு தலங்களுக்கு அனுமதி அளிக்கக்கூடாது என்ற விதி உள்ள நிலையில் மாவட்ட ஆட்சியர் மற்றும் மாவட்ட போலீஸ் கண்காணிப்பாளர் ஆகியோர் புதிய வழிபாட்டு தலங்களுக்கு கருத்து கேட்பு கூட்டம் நடத்தி வருவது பொது அமைதிக்கு பாதிப்பை ஏற்படுத்தும் வகையில் உள்ளது.

மேலும், அதிகாரிகளின் ஆலோசனை கூட்டங்களில் தகவல் தொழில்நுட்ப வியல் துறை அமைச்சர் மனோதங்கராஜின் மகனுக்கு என்ன வேலை என்பதை விளக்க வேண்டும். இதற்கு மாவட்ட ஆட்சியர் எப்படி அனுமதி அளித்தார் என்பது தெரியவில்லை, என்று கூறினார்.

இதனை அடுத்து, நாகர்கோவில் தொகுதி எம்.எல்.ஏ எம் .ஆர் காந்தி பேசும்போது :- கன்னியாகுமரி மாவட்டத்தில் புதிதாக வழிபாட்டுத் தலங்கள் அமைவதால் ஏற்படும் பிரச்சனை குறித்து தமிழக முதல்வரிடம் பேச நேரம் ஒதுக்க கேட்டு, 25 நாட்கள் ஆகியும் இன்னும் நேரம் ஒதுக்கப்படவில்லை. எனவே, முதல்வரின் கவனத்தை ஈர்க்கும் வகையில் டிசம்பர் 11ஆம் தேதி நாகர்கோவில் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் எதிரே உண்ணாவிரதம் இருக்க முடிவு செய்துள்ளோம், எனக் கூறினார்.

  • enforcement department raid on allu aravind house பண மோசடி புகார்! அல்லு அர்ஜூனின் தந்தை வீட்டில் அமலாக்கத்துறை தீடீர் சோதனை?