அறநிலையத்துறை கட்டியதா? சிதம்பரம் கோவிலில் அமைச்சர் சேகர்பாபுவுக்கு என்ன வேலை? நடையைக் கட்டு : கொதித்த ஹெச் ராஜா!!

Author: Udayachandran RadhaKrishnan
10 November 2022, 2:40 pm
Sekar Babu - Updatenews360
Quick Share

சிதம்பரம் நடராஜர் கோவிலின் கணக்கு வழக்குகளை ஒப்படைக்க வேண்டும் என இந்து சமய அறநிலைத்துறை அக்கோவில் தீட்சதர்களுக்கு உத்தரவிட்டிருந்தது. இதற்கு தீட்சிதர்கள் தரப்பில் இருந்து எதிர்ப்பு கிளம்பியது.

இது தொடர்பான வழக்கு நீதிமன்றத்தில் நடந்து வருகிறது. இந்நிலையில், கோவில் ஒன்றும் தீட்சிதர்களுக்கு சொந்தமானதல்ல, அரசு கணக்கு கேட்டால் ஒப்படைப்பது அவர்களின் கடமை என இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் சேகர்பாபு தெரிவித்தார்.

இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் சேகர்பாபு நேற்று செய்தியாளர்களிடம் பேசுகையில், சிதம்பரம் கோவில் தீட்சதர்கள் அறநிலையத்துறை மீது நீதிமன்ற அவமதிப்பு வழக்கு தொடரப் போவதாக தெரிவித்துள்ளது குறித்து கேள்வி எழுப்பப்பட்டது.

அதற்கு பதிலளித்த அமைச்சர் சேகர்பாபு, நீதிமன்ற அவமதிப்பு வழக்கு தொடர யாரும் தடையாகவே இல்லை. இந்து சமய அறநிலையத்துறை செயல்பாடுகள் தவறு என்றால் அவர்கள் தாராளமாக நீதிமன்றத்திற்கு செல்லலாம் எனத் தெரிவித்தார்.

மேலும் பேசிய அமைச்சர் சேகர்பாபு, தவறுகள் எங்கு நடந்தாலும் அதை தட்டிக் கேட்கின்ற, சுட்டிக்காட்டுகின்ற கடமை இந்து சமய அறநிலையத் துறைக்கு உண்டு. சிதம்பரம் கோவில் ஒன்றும் தீட்சிதர்களால் உருவாக்கப்பட்ட கோயில் அல்ல, மன்னர்களால், நம்மை ஆண்ட முன்னோர்களால் உருவாக்கப்பட்ட கோயில். அந்த கோவிலில் வருகின்ற வருமானத்தை முறையாக கணக்கு கேட்டால் கணக்கு காட்டுவது தீட்சிதர்களின் கடமை.

அதேபோல் நிர்வாகத்தில் இருக்கின்ற குளறுபடிகளை கேள்விகளாக கேட்கின்றபோது அதற்கு பதில் சொல்வதும் அவருடைய கடமை. கோவில் உள்ளே அவர்கள் இஷ்டத்திற்கு கட்டிடங்களை எழுப்பி இருக்கின்றார்கள். இப்போது எழுப்பப்பட்ட கட்டிடங்கள் நிலை குறித்து கேள்வி கேட்பது இந்து சமய அறநிலையத்துறையின் கடமை.

அதேபோல கோயிலுக்கு மன்னர்களால் சேர்த்து வைக்கப்பட்ட, வழங்கப்பட்ட சொத்துக்கள், நகைகள், விலைமதிப்பற்ற பொருட்களுடைய நிலையை ஆய்வு செய்வது இந்து சமய அறநிலையத்துறையின் கடமை. இதற்கு முழுவதும் ஒத்துழைக்க வேண்டியது தீட்சிதர்களின் கடமை எனத் தெரிவித்தார்.

மேலும், சிதம்பரம் கோயில் தொடர்பாக அறநிலையத்துறைக்கு உரிமை கிடையாது, அறநிலையத்துறை அத்துமீறுகிறது என தீட்சிதர்கள் கூறி வருவது பற்றி பதிலளித்த அமைச்சர் சேகர்பாபு, சிதம்பரம் கோவில் அமைந்துள்ள இடம் அரசுக்கு சொந்தமானது.

எல்லை தாண்டி எப்பொழுதுமே நாங்கள் செல்வதற்கு எங்களுடைய முதலமைச்சர் ஸ்டாலின் அனுமதிக்க மாட்டார். இது சட்டத்தின் ஆட்சி நடைபெறுகின்ற மாநிலம். சட்டத்திற்குட்பட்டு தான் அனைத்து நடவடிக்கைகளையும் நாங்கள் மேற்கொள்வோம் எனத் தெரிவித்தார்.

இந்நிலையில், அறநிலையத்துறை அமைச்சர் சேகர்பாபுவின் கருத்துக்கு பதிலடி கொடுத்துள்ளார் பாஜக மூத்த தலைவர் எச்.ராஜா.

இதுகுறித்து எச்.ராஜா வெளியிட்டுள்ள ட்விட்டர் பதிவில், தீட்சிதர்கள் கட்டிய கோவில் இல்லையே என அமைச்சர் தெரிவித்ததைக் குறிப்பிட்டு, “அறநிலையத்துறை கட்டியதா ? பின் அத்துறைக்கும் அமைச்சருக்கும் அங்கு என்ன வேலை. நடையைக் கட்டு’ என்று அவர் தெரிவித்துள்ளார்.

Views: - 303

1

0