முதலமைச்சர் ஸ்டாலினை திருப்திப்படுத்த ஜால்ரா அடிக்கும் அமைச்சர் சேகர்பாபு ; முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் விமர்சனம்!!

Author: Babu Lakshmanan
3 November 2022, 4:18 pm
Quick Share

சென்னை : திமுக அரசின் பிடியில் இருந்து எப்பொழுது விடுதலை கிடைக்கும் என மக்கள் எதிர்பார்ப்பதாக அதிமுக முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் திமுகவை கடுமையாக சாடியுள்ளார்.

சென்னை திரு.வி.க நகர் சட்டமன்றத் தொகுதிக்கு உட்பட்ட புளியந்தோப்பு ஆடுதொட்டி பகுதியில் மழையால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு முன்னாள் அதிமுக அமைச்சர் ஜெயக்குமார் பிரியாணி வழங்கினார்.

அதனைத் தொடர்ந்து செய்தியாளர்களிடம் ஜெயக்குமார் கூறியதாவது:- கடந்த இரண்டு தினங்களாக பெய்த மழையால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு திமுக ஒன்றும் செய்யவில்லை. இரண்டு நாள் மழைக்கே திமுக கதறுகிறது. தண்ணீர் ஓரளவு வற்றி இருப்பதற்கு காரணமே அதிமுக எடுத்த நடவடிக்கை தான். மழையால் உயிரிழந்தவர்கள், காயமடைந்தவர்களுக்கு திமுக அரசு உரிய உதவிகளை செய்யவில்லை. மழை நவம்பர், டிசம்பர் மாதம் வரை இருக்கும்.

அறநிலைய துறை அமைச்சராக இருப்பதால் சேகர்பாபு முதலமைச்சருக்கு சிங்சாங் சிங்சாங் அடித்து திருப்திபடுத்த பேசி வருகிறார். முதலமைச்சர் திட்டங்களை நிறைவேற்றி விட்டதாக கூறி வருவது யாருடைய திட்டங்கள்? அதிமுக ஆட்சியில் போடப்பட்ட திட்டங்கள். 2 ஆயிரம் கி.மீ. மழை நீர் வடிகால்வாய் பணியை பாதிக்கும் மேல் அதிமுக ஆட்சியில் நிறைவேற்றப்பட்டது. மீதி பணியை தான் திமுக நிறைவேற்றியுள்ளது.

எடப்பாடி பழனிசாமி ஆட்சியில் அதி நவீன கருவிகள் கொண்டு தூர்வாரப்பட்டது. மழைக்காலத்தில் இலவசமாக உணவு வழங்கப்பட்டது. திமுக ஆட்சியில் இலவசமாக உணவு பொட்டலங்கள் வழங்கப்பட்டதா..?

கடந்த 10 ஆண்டுகளில் மேற்கொள்ளப்பட்ட நடவடிக்கைகளே திமுக அரசை காப்பாற்றியுள்ளது. சிங்கார சென்னையை வாந்தி பேதி, டெங்கு, மர்ம காய்ச்சல் என்ற நிலைக்கு தான் 2006 – 11ல் சென்னையை வைத்திருந்தனர். வாய்ச்சொல் வீரர்களாக, விளம்பர பிரியராக முதலமைச்சர் செயல்படுகிறார்.

கன்னித்தீவா கொளத்தூர் தொகுதி? கொளத்தூர் இல்லை, குளம் ஊர் ஆக தான் உள்ளது. திமுக அரசின் பிடியில் இருந்து எப்பொழுது விடுதலை கிடைக்கும் என மக்கள் எதிர்பார்க்கின்றனர். விரைவில் நாடாளுமன்ற தேர்தலோடு, சட்டமன்ற தேர்தலும் கண்டிப்பாக வரும். அதில் அதிமுக வெற்றி பெறும்.
 

Views: - 184

0

0