இந்தியாவுக்கு ஆபத்து இல்ல… I.N.D.I.A. கூட்டணிக்கு தான் ஆபத்து ; திமுகவுக்கு சவால் விட்ட ஆர்.பி. உதயகுமார்…!!

Author: Babu Lakshmanan
9 September 2023, 1:06 pm
Quick Share

மதுரை ; மாணவர்களின் அறிவு பசியை போக்க தொலைநோக்கு சிந்தனையுடன் வழங்கிய மடிக்கணினி  திட்டத்தை குழி தோண்டி புதைத்து விட்டார் ஸ்டாலின் என்று சட்டமன்ற எதிர்க்கட்சித் துணைத் தலைவர் ஆர்.பி.உதயகுமார் குற்றம்சாட்டியுள்ளார்.

இது தொடர்பாக அவர் கூறியதாவது :- இன்றைக்கு செயல்படாத அரசின் முதலமைச்சராக உள்ள ஸ்டாலின் சமீப காலங்களில் நாடாளுமன்றத் தேர்தலை நோக்கி அவருடைய பேச்சுகளும், பேட்டிகளும் அமைந்திருக்கிறது. ஸ்டாலின எந்த விழாவில் பேசினாலும், இந்தியாவுக்கு பேராபத்து என்று ஒரு பொய்யான செய்தியை தொடர்ந்து அவதூறு செய்தியாக இந்த மக்கள் மத்தியில் ஒரு அச்சத்தை ஏற்படுத்துகிறார்.

 சமூக நீதிக்கு ஆபத்து என்கிறார். இன்றைக்கு இருக்கக்கூடிய நிலையிலே, இந்தியா கூட்டணிக்கு வேண்டுமானால் ஆபத்து இருக்கலாமே தவிர, இந்தியாவிற்கு எந்த ஆபத்தும் இல்லை. இன்றைக்கு ராணுவ வீரர்கள் எல்லையில் இருந்து சிறப்பாக பணியாற்றி 120 கோடி மக்களை காத்து வருகிறார்கள்.

இந்தியாவிற்கு ஆபத்து வெளிநாட்டின் தாக்குதல் அல்ல, இங்கே உள்நாட்டுடன் தாக்குதல் என்று அவதூறு செய்திகளை தொடர்ந்து கூறும் ஸ்டாலின் அவர்களே, பால்விலை உயர்ந்து விட்டது, பச்சிளம் குழந்தைகள் பால் கிடைக்காமல் உங்கள் ஆட்சியில் தவித்து கொண்டிருக்கிறார்களே? பால் விலையை குறைக்க என்ன நடவடிக்கை எடுக்க போகிறீர்கள் என்று தமிழ்நாட்டு மக்கள் எதிர்பார்க்கிறார்கள்.

உயர்த்திய சொத்து வரியை நீங்கள் திரும்ப பெறுவதற்கு முன் வருவீர்களா? ரத்து செய்வதற்கு முன்வருவீர்களா என்று கேட்கிறார்கள். மின்சார கட்டணத்தை ரத்து செய்வதற்கு முன் வருவீர்களா? என்று கேட்கிறீர்கள்.

இன்றைக்கு மக்களிடத்திலே மிகப்பெரிய வரவேற்பை பெற்றிருக்கிற தாலிக்கு தங்கம் திட்டம், மாணவர்களுக்கு மடிக்கணினி வழங்கும் திட்டம்,  இருசக்கர வாகன திட்டம், கறவை பசுக்கள் ஆடுகள் வழங்கும் திட்டம், குடிமராமத்து திட்டம் என்று மிகப்பெரிய வரவேற்பு திட்டங்களை எல்லாம் இன்றைக்கு கைவிட்டு, அம்மாவின் திருப்பெயரிலே மக்களிடத்தில் மிகப்பெரிய வரவேற்பை பெற்று இருக்கிற அம்மா உணவகத்தை இன்றைக்கு சின்னாபின்னமாக சீர் அழித்திருக்கிறீர்களே ?அதை சீர்படுத்துவதற்கு நீங்கள் முன் வருவீர்களா?

மக்கள் உங்களுக்கு அதிகாரம் கொடுப்பது மக்களை வாழவைப்பதற்காக, மக்களுக்காக திட்டங்களை தருவதற்காக  தான். ஆனால், நீங்கள் செய்வதோ இன்றைக்கு, மக்கள் விரோத செயல்களில் தொடர்ந்து கோயம்பல்ஸ் பிரச்சாரத்தை முன்னெடுத்து, இந்த மக்களை வஞ்சித்து கொண்டிருக்கிறீர்கள்.  இதனால் மக்கள் உங்கள் மீது கடும் கோபத்தில் இருக்கிறார்கள். இந்த இரண்டரை ஆண்டுகளில் நீங்கள் செய்த திட்டங்களை பட்டியலிட்டு சொல்ல முடியுமா?

காலை உணவு திட்டம் என்பது உலகமே பாராட்டுவதாக நீங்களே தம்பட்டம் அளித்து கொண்டு, அரசு மூலம் விளம்பரத்தை பக்கம் பக்கமாக கொடுத்து வருகிறீர்கள். மாணவர் மீது அக்கறை இருந்திருந்தால் நீங்கள் தேர்தல் வாக்குறுதியில் கூறிய மாணவர் கல்வி கடனை ரத்து செய்யாதது ஏன்? 2011 ஆண்டு மடிக்கணினி திட்டத்தை  புரட்சித்தலைவி அம்மா  தீர்க்கதரிசனத்தோடு, தொலைநோக்கு பார்வையோடு தொடங்கி வைத்தார்கள். அதனை தொடர்ந்து, எடப்பாடியார் காலம் வரை 52 லட்சம் பேருக்கு வழங்கப்பட்டது.

அந்தத் திட்டத்தை நீங்கள் கிடப்பில் போட்டு, இரண்டு வருடமாக ஒரு மடிக்கணினி கூட ஒரு மாணவருக்கு நீங்கள் கொடுத்தது உண்டா? என சவால் விடுத்து கேட்கிறேன். மாணவர்களின் அறிவு பசியை தீர்க்க தொலைநோக்கு சிந்தனையுடன் வழங்கப்பட்ட மடிக்கணித்திட்டத்தை குழி தோண்டி புதைத்தது ஏன்?

திமுகவின் தோழமை கட்சி கூட வாய் திறக்கவில்லை. ஆனால் மாணவர்கள் நலனுக்காகவும், மக்களின் அடிப்படை திட்டங்களுக்காகவும், அம்மா ஆட்சியில் வழங்கப்பட்ட திட்டங்களை மீண்டும் வழங்க வேண்டும் என்று எடப்பாடியார் தொடர்ந்து குரல் கொடுத்து வருகிறார். 

தமிழகத்திற்கு உங்கள் ஆட்சியால் தான் இன்றைக்கு மிகப்பெரிய பேராபத்து சூழ்ந்திருக்கிறது என்று தமிழ்நாட்டு மக்கள் பேசிக் கொள்கிறார். இந்த ஆட்சி எப்போது முடிவுக்கு வரும், இதன் ஆயுட்காலம் எண்ணப்பட்டுக் கொண்டிருக்கிறது. மக்களின் கோபத்தை திசை திருப்ப நீங்கள் பேசி வருகிறீர்கள். கூரை ஏறி கோழி பிடிக்கமுடியாதவன்  வானம்  ஏறி வைகுண்டம் போகப் போறான் என்று சொன்னால் மக்கள் எப்படி நம்புவார்கள். ஆகவே தமிழ்நாட்டிற்கு சூழ்ந்து இருக்கிற பேராபத்தை முதலிலேயே ஆட்சி அதிகாரத்தில் இருக்கிற நீங்கள் அதை தீர்ப்பதற்கு முன் வருவீர்களா?, என கேள்வி எழுப்பினார். 

Views: - 208

0

0