பலவீனமாகிப் போன திமுக அரசு… கருணாநிதி ஃபார்முலாவை கையில் எடுத்த ஸ்டாலின்; திமுக மீது ஆர்பி உதயகுமார் பாய்ச்சல்!!

Author: Babu Lakshmanan
7 November 2023, 11:51 am
Quick Share

திமுக அரசு பலவீனமாக உள்ளதை மறைக்க கருணாநிதி பார்முலாவை ஸ்டாலின் எடுத்து உள்ளார் என்று சட்டமன்ற எதிர்க்கட்சி துணை தலைவர் ஆர்.பி.உதயகுமார் குற்றம்சாட்டியுள்ளார்.

இது தொடர்பாக அவர் கூறியதாவது :- ராமநாதபுரம் மாவட்டத்தில் 20 இடங்களிலே ஹைட்ரோ கார்பன் சோதனை கிணறுகளை அமைக்க சுற்றுச்சூழல் அனுமதி கோரி ஓஎன்ஜிசி நிறுவனம் கேட்டுள்ளது. இதை உடனடியாக திமுக அரசு நிராகரிக்க வேண்டும் என்று எடப்பாடியார் வலியுறுத்தியுள்ளார். தமிழகத்தில் ஏற்கனவே கருணாநிதி ஆட்சியின் போது மீத்தேன் மற்றும் ஹைட்ரோ கார்பன் திட்டங்களுக்கு ஒப்புதல் போடப்பட்டது.

இதன் மூலம், நிலத்தடி நீரும், விவசாய நிலங்களும் பாதிப்பை முற்றிலும் தடுக்கும் வகையில், திமுக அரசு போட்ட ஒப்பந்தத்தை ரத்து செய்து, காவிரி டெல்டா பகுதிகளை பாதுகாக்கப்பட்ட சிறப்பு வேளாண் மண்டலமாக எடப்பாடியார் அறிவித்தார். 

அதேபோல், ராமநாதபுரம் மாவட்டத்தை பொன்விளையும் பூமியாக மாற்ற காவிரி வைகை குண்டாறு என்ற திட்டத்தை 14,400 கோடி அளவில் செயல்படுத்தி, இதன் மூலம் சிவகங்கை, இராமநாதபுரம், புதுக்கோட்டை, விருதுநகர் போன்ற மாவட்டங்கள் எல்லாம் வறட்சியான கந்தக பூமியாக இருக்கிற இந்த மாவட்டத்தை, பொன்விளையும் பூமியாக மாற்றுவதற்கு அடிக்கல் நாட்டி, அந்த திட்டத்தை தொடங்கி வைக்க சென்ற போது, நான் இந்த திட்டத்தை தொடங்கி வைப்பதன் மூலம் பிறவி பயன் அடைந்தேன்  என்று சொன்னார். 

இன்றைக்கு இந்த அரசு எடுத்தேன், கவிழ்த்தேன் என்று எதையோ ஆலோசிக்காமல் 37 குழுக்கள் அமைத்து இருப்பதாக சொல்லுகிறார். அந்த குழு என்ன ஆலோசனையை சொல்லுகிறது என யாருக்கும் தெரியாது. இன்றைக்கு மக்கள் என்ன சொல்லுகிறார்கள் என்பதை கூட  காது கொடுத்து கேட்பதற்கு முதலமைச்சர் முத்துவேல் கருணாநிதி ஸ்டாலின் தயாராக இல்லை?  ஆய்வுக் கூட்டத்தில் நடத்துகிறபோது அதிகாரிகள் கொடுக்கிற புள்ளி விவரங்களை உள்வாங்கி செயல்படுத்தாமல் உள்ளதால் நிர்வாகம் முடங்கி போய் உள்ளது.

முக்கிய பிரச்சினைகளுக்கு தீர்வு காண்பதற்கு நடவடிக்கை எடுக்காமல், அதை திசை திருப்புவதற்காக வாய் துடுக்காக, நான்கு வார்த்தைகளை கொட்டுவது பின்னால்நான் சொல்லவில்லை என்று சொல்கிறார்கள். நீதிமன்றமே இன்றைக்கு கண்டனம் தெரிவிக்கிற வகையில் உதயநிதி ஸ்டாலின் பேசியிருக்கிறார் என்று சொன்னால், இந்திய அரசியலமைப்பு சட்டத்தில் எடுத்த ரகசிய காப்புகளுக்கு உறுதி அளித்துள்ளாரே அதற்கு அர்த்தம் என்ன?

யாரையும் இழிவாக அமைச்சர்கள், சட்டமன்ற உறுப்பினர்கள், திமுக மாவட்ட செயலாளர்கள் பேசுகிறார்கள். முதலமைச்சரே ஒரு கூட்டத்திலே பொழுது விடிந்தால் என்ன வம்பு வழக்கு வருமோ?  உங்கள் அநாகரிகமான அபத்தமான பேச்சுகளால் எனக்கு தூக்கம் தொலைத்து விடுகிறது என்று கூறியுள்ளார். முத்துவேல் கருணாநிதி ஸ்டாலின் அலட்சிய போக்குடன் நடந்து கொள்ளாமல், தமிழகத்தில் வளத்தை பாதிக்கின்ற ஒஎன்ஜிசியின் செயலுக்கு துணை போகாமல் ஆரம்ப நிலையிலே உடனடியாக அனுமதி மறுக்க வேண்டும்.

பெண் உரிமை, தொழிலாளர் நலன் மாணவர் நலன், கல்வி உரிமை, மாநில உரிமைகளை பற்றி கருத்து சொல்ல வேண்டாம் என்று யாரும் சொல்லவில்லை. அதற்கு எப்போது பாதுகாப்பு தேவைப்படுகிறதோ, அப்போது பேசினால், மக்கள் ஏற்றுக் கொள்வார்கள்.
எப்படி கருணாநிதி ஆட்சி பலவீனமாக இருக்கிற போதெல்லாம், டேசோ மாநாடு, தமிழ் உரிமை என்று பேசி தனது ஆட்சி பலவீனத்தை திசை திருப்புவார். அதேபோல், தங்களது ஆட்சியின் பலவீனத்தை திசை திருப்புவதற்காக கருணாநிதி பார்முலாவை இப்போது ஸ்டாலினும், அவருடைய தவப்புதல் உதயநிதி ஸ்டாலினும் இந்த அரசினுடைய தோல்வியை மதிப்பதற்காக, நிர்வாக குளறுபடிகளை மறைப்பதற்காக தேவையில்லாமல் சித்தாந்தத்தை பேசி குழப்பி வருகிறார்கள். 

இன்றைக்கு மதுரையில் இரவு முழு மழை பெய்துள்ளது. மதுரையில் ரோட்டில் தண்ணீர் உள்ளதா..? அல்லது தண்ணீரில் ரோடு உள்ளதா என்ற நிலை உள்ளதால், பள்ளிகளுக்கு செல்ல முடியாமல் மாணவர்கள் தவித்து வருகிறார்கள். பள்ளிக்கு விடுமுறை கொடுத்து உரிய அறிவிப்பை மாவட்ட நிர்வாகம் வெளியிடவில்லை. இது போன்ற மழைக்காலங்களில்  விஷக்காய்ச்சல், வைரஸ் காய்ச்சல் போன்றவை வரும். ஆகவே மாவட்ட நிர்வாகம் உரிய நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும். 

இலங்கையில் நடைபெற்ற விழாவில் முதலமைச்சர் பேச்சை ஒளிபரப்ப வில்லை. அந்த விவாதத்துக்குள்ள நான் போகவில்லை. ஆனால் அந்த விழாவில் ஒரு அமைச்சரை கூட அனுப்ப முடியவில்லை. இந்த அரசு கையாளாகாத அடிமை அரசாக உள்ளது.
உங்களால் பக்கத்தில் இருக்கிற இலங்கை நாட்டுக்கு ஒரு அமைச்சரை  கூட அனுப்ப முடியவில்லை. ஒரு நிர்வாக திறமை அற்ற அரசாக உங்கள் அரசு உள்ளது. 

ஒரு முதலமைச்சரின் உரையை அங்கே ஒளிபரப்புவதற்கு உங்களுக்கு சத்து இல்லை. தகுதி இல்லை, திராணி இல்லை, நீங்க மற்றவர்களின் மீது பழி போட்டு உங்களை சத்தியவான் போல நீங்கள் காட்டி கொண்டு இருக்க கூடாது, ஒரு நாள் உண்மை உலகத்திற்கு தெரிய வரும், என கூறினார்.

Views: - 214

0

0