ரஜினி நடந்தால் சரக்.. சரக்… இபிஎஸ் பேசினால் கணீர்.. கணீர்… அதிமுகவுக்கு கிடைத்த ‘இதயக்கனி’ இபிஎஸ் ; செல்லூர் ராஜு பரபர புகழாரம்..!!

Author: Babu Lakshmanan
25 August 2023, 2:43 pm
Quick Share

வடிவேலு பாணியில் கட்டத்துரைக்கு கட்டம் சரியில்லை என்பது போல திமுகவிற்கு கட்டம் சரியில்லை முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜு தெரிவித்துள்ளார்.

அதிமுக பொதுக்குழு தீர்ப்பை வரவேற்று மதுரை கோரிப்பாளையத்தில் அதிமுக அலுவலகத்தில் முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜூ இனிப்புகள் வழங்கினார். பின்னர் செய்தியாளர்களை சந்தித்த அவர் பேசியதாவது:- மதுரை மண்ணை மிதித்தாலே வெற்றி தான். இனி அனைத்து தேர்தல்களிலும் அதிமுக வெற்றி பெறும்.

கட்டதுரைக்கு கட்டம் சரியில்லை என்பது போல திமுகவுக்கு கட்டம் சரியில்லை. எங்கே போனாலும் அவர்களுக்கு இடிக்கிறது.
திமுக அமைச்சர்களின் தில்லு முல்லுகளை தோலுரித்து காட்டியுள்ளார் உயர்நீதிமன்ற நீதிபதி. அதற்காகவே திமுக ராஜினாமா செய்திருக்க வேண்டும். இதுக்கு மேலும் தேவையா இந்த பதவி? கேவலம்.

ஆட்சிக்கு வந்தவுடன் நீட் தேர்வு ரத்துசெய்ய முதல் கையெழுத்து போடுவோம் என்றார்கள். இப்போது என்ன செய்து விட்டார்கள்? உள்ளதும் போச்சுடா நொல்லை கண்ணா என்பது போல, நகைக்கடன் தள்ளுபடியாகும் என நினைத்து நகைகளை அடகு வைத்த மக்கள் ஏமாற்றப்பட்டு விட்டார்கள். மதுவால் தமிழகம் சீரழிந்து வருகிறது. கிழவி கூட மது குடிக்கிறது. மது கிழவியை கூட கிளப்பி விட்டு விடுகிறது.

கவர்னர் எந்த கோப்பையும் தன்னிச்சையாக முடிவெடுத்து அனுப்ப முடியாது. அதில் எழுத்து, அச்சு பிழைகள் இருந்திருக்கலாம்.
அதனால் கூட அவர் கோப்புகளை திருப்பி அனுப்பியிருக்கலாம். மதுரை அதிமுக மாநாட்டுக்கு எம்.ஜி.ஆர், ஜெயலலிதாவுக்கு கூடாத கூட்டம் கூடியுள்ளது. வாழ்க்கையில் இப்படி ஒரு கூட்டத்தை நான் பார்த்தே இல்லை. 108 டிகிரி வெயிலிலும் தொண்டர்கள் அமர்ந்திருந்தனர். இது தானா சேர்ந்த கூட்டம். அதிமுகவுக்கு கிடைத்த இதயக்கனி எடப்பாடி பழனிச்சாமி.

நீட் தேர்வு ரத்து செய்ய முடியாது என தெரிந்திருந்தும் திமுக நாடகம் ஆடுகிறது. நீட் தேர்வுக்கு எதிராக நாங்கள் சட்டமன்றத்திலேயே தீர்மானம் நிறைவேற்றி அனுப்பி இருக்கிறோம். அப்படியிருக்க அதிமுக மாநாட்டில் ஏன் தீர்மானம் போடவில்லை என கேட்க வேண்டியதில்லை. அரைத்த மாவை அரைத்து மக்களை ஏமாற்றுபவர்கள் நாங்கள் அல்ல. ரஜினி நடக்கும் போது காலில் சரக் சரக் என தீ பரவுவது போல, எடப்பாடி பழனிச்சாமி மைக்கில் பேசுகையில் கணீர் கணீர் என பேசி பின்னி எடுத்து விட்டார்,” என கூறினார்.

Views: - 222

0

0