வாரிசு படத்தில் விஜய்க்கு பதிலாக உதயநிதி தான் பொருத்தமானவர்… கதை, திரைக்கதை கூட இவங்கதான்…? முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜூ கிண்டல்!

Author: Babu Lakshmanan
27 October 2022, 12:39 pm

நடிகர் விஜய்யின் வாரிசு திரைப்படத்தில் உதயநிதி ஸ்டாலின் தான் நடிக்க வேண்டும் என்றும், அதற்கு கதை கலைஞர் கருணாநிதியும், திரைக்கதை ஸ்டாலினாக தான் இருக்க வேண்டும் என்று முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜு கிண்டலடித்துள்ளார்.

அதிமுகவின் பொன் விழா மற்றும் 51வது ஆண்டு துவக்க விழாவை முன்னிட்டு மதுரை TM கோர்ட் பகுதியில் மதுரை மாநகர் மாவட்ட கழகம் சார்பில் பொதுக்கூட்டம் நடைபெற்றது. இக்கூட்டத்தில் முன்னாள் அமைச்சர் செல்லூர் K ராஜு சிறப்புரை ஆற்றினார்.

பொதுக்கூட்டத்தில் முன்னாள் அமைச்சர் செல்லூர் K ராஜு பேசும்போது;- எம்ஜிஆர் கட்சியில் இருந்து நீக்கப்பட்ட பின்னர் அதிமுக உருவான வரலாறு அனைவருக்கும் தெரிந்ததே. 50 ஆண்டுகளில் 31 ஆண்டுகள் ஆட்சியில் இருந்த கட்சியாக அதிமுக திகழ்கிறது. மக்களுக்கான இயக்கம் அதிமுக, திமுகவிற்கு செல்வங்களை அள்ளிக்கொடுத்தும், மறையும் தருவாயில் தொழிலாளிகளுக்கு சொத்தை கொடுத்தவர் எம்ஜிஆர், அவர் அவதார புருஷர்.

எம்ஜிஆர்-க்கு பிறகு அதிமுக அழிந்து விடும் என்று கலைஞர் உள்பட அனைவரும் நினைத்தார்கள். பலமுறை பிரிந்து பலமுறை இணைந்தும் இருக்கிறது அதிமுக. இன்றைக்கும் அத்தகைய சோதனை தான் நடக்கிறது. எப்போ ஸ்டலின் போவார், எடப்பாடி எப்போ வருவார் விடியல் தருவார் என மக்கள் எதிர்ப்பார்த்து வருகிறார்கள்.

ஜாதிக்குறித்து ஆர் எஸ் பாரதி அவதூறாக பேசியுள்ளார். ஓசி ஓசி என்று பேசும் திமுக அமைச்சர் பயன்படுத்தும் அனைத்தும் ஓசிதான்… அவர்தம் மனைவி மார்களை தவிர மற்றவைகள் ஓசித்தான். நிதி அமைச்சர் டான் என்றால் நாங்கள் சூப்பர் டான்.. தாலிக்கு தங்கம் திட்டத்தை நிறுத்தி விட்டு காரணம் சொல்லுகிறார்.. அதற்கு நிதிஅமைச்சர் தேவை இல்லையே, அதிகாரி போதும்.

முதல் கையழுத்தே நீட் ரத்து என்று சொன்னீர்கள், இதுவரையில் ரத்து செய்யவில்லை. உதயநிதி ஸ்டாலின் என்றைக்கு செங்கலை தூக்கினாரோ அன்றில் இருந்து செங்கல், கம்பி உள்ளிட்ட அனைத்து விலையும் உயர்ந்து விட்டது. எம்ஜிஆர் உடன் தன்னை ஒப்பிடுவதை முதல்வரே ஒத்துகொள்ள மாட்டார். நிதி அமைச்சர் நீண்ட காலம் பதவியில் இருக்க வேண்டும், திமுக ஆட்சி க்கு டான் (நிதிஅமைச்சர்) தான் ஆபத்து.

டாஸ்மாக் விற்பனையில் இலக்கு விற்க முயற்சி செய்யும் அவல நிலையில் தான் திமுக ஆட்சி நடக்கிறது. திமுக ஆட்சியில் சமூக விரோதிகள் ஒன்று கூடி விட்டனர். கடந்த ஆண்டு பெட்ரோல் குண்டு வெடிப்பை போல் தற்போது கார் வெடித்து உயிர் சேதத்தை ஏற்படுத்தி உள்ளது. சட்ட ஒழுங்கு எப்படி இருக்கிறது…!

புதிய வாகன சட்டம் அமலுக்கு வந்துள்ளது. லஞ்சத்திற்கு வழிவகுக்கும் சூழல் ஏற்படுகிறது. இதான் துக்ளக் ஆட்சி. அபராதம் விதிப்பதை விட விதி மீறல்களில் ஈடுபடுவோர்கள் மீது சட்ட ரீதியாக அணுக வேண்டும். நடிகர் விஜய் நடிப்பில் பொங்கலுக்கு வர உள்ள வாரிசு படத்தில் உண்மையில் உதயநிதி ஸ்டாலின் தான் நடிக்க வேண்டும்.. கதை கலைஞர், திரைக்கதை ஸ்டாலினாக தான் இருக்க வேண்டும்.

மேயரை எதிர்த்து அமைச்சரே உண்ணாவிரதம் இருப்பேன் என்று கூறுவது உலகத்திலேயே எங்கும் நடைபெறாதது. நிர்வாகம் எப்படி இருக்கிறது என்பதற்கு உதாரணம் தான் திமுக ஆட்சி. தற்போது மக்கள் அதிமுக ஆட்சியை எதிர்பார்த்து கொண்டு இருக்கிறார்கள், எனக் கூறினார்.

  • G.V. Prakash understood Sainthavi at the time of separation.. Affection blossomed during the divorce case பிரியும் நேரத்தில் சைந்தவியை புரிந்து கொண்ட ஜி.வி பிரகாஷ்.. விவாகரத்து வழக்கில் மலர்ந்த பாசம்!