விஸ்வரூபம் எடுத்த குண்டர் சட்டம்…? ‘U Turn’ போட்ட CM ஸ்டாலின்!

Author: Babu Lakshmanan
18 November 2023, 10:12 pm
Quick Share

தமிழக பொதுப்பணித்துறை அமைச்சர் எ.வ. வேலுவின் வீடுகள், அவருக்கு சொந்தமான மருத்துவ மற்றும் பொறியியல் கல்வி நிறுவனங்கள் என நூற்றுக்கும் மேற்பட்ட இடங்களில் இரண்டு வாரங்களுக்கு முன்பு வருமான வரித்துறை திடீர் ரெய்ட் நடத்திய அதிர்ச்சியில் இருந்தே இன்னும் முழுமையாக அவர் மீளாத நிலையில், அவருடைய சொந்த மாவட்டமான திருவண்ணாமலையில் இன்னொரு புதிய தலைவலியும் உருவாகி இருக்கிறது.

அந்த மாவட்டத்தின் செய்யாறு சட்டமன்றத் தொகுதி, அனக்காவூர் ஒன்றியத்திற்கு உட்பட்ட மேல்மா, தேத்துறை, குறும்பூர், நர்மாபள்ளம், நெடுங்கல், அத்தி, வட ஆளப்பிறந்தான், இளநீர்குன்றம், வீரம்பாக்கம் ஆகிய 9 ஊராட்சிகளைச் சேர்ந்த சுமார் 3,300 ஏக்கர் பரப்பளவு கொண்ட விவசாய விளைநிலங்களை ‘சிப்காட் தொழிற்பூங்கா விரிவாக்கம் 2023’ என்ற பெயரில் கையகப்படுத்துவதற்கான அரசாணையை திமுக அரசு வெளியிட்டது.

இதற்கு எதிராக கடந்த ஜூலை மாதம் முதல் அப்பகுதியை சேர்ந்த 1000-க்கும் மேற்பட்ட விவசாயிகள் தொடர் காத்திருப்பு போராட்டத்திலும் ஈடுபட்டு வருகின்றனர். இந்த நிலையில் கடந்த நான்காம் தேதி போலீசார் 19 விவசாயிகள் மீது வழக்குப்பதிவும் செய்தனர். அவர்களில் கிருஷ்ணகிரி மாவட்டத்தைச் சேர்ந்த அருள் ஆறுமுகம் மற்றும் செய்யாறு தொகுதிக்கு உட்பட்ட பச்சையப்பன், தேவன், சோழன், திருமால், மாசிலாமணி, பாக்கியராஜ் ஆகிய 7 பேரையும் குண்டர் சட்டத்தின் கீழ் கைது செய்யும்படி திருவண்ணாமலை மாவட்ட கலெக்டர் முருகேஷ் அண்மையில் உத்தரவிட்டார். அதன்படி அவர்கள் அனைவரும் கைது செய்யப்பட்டு பாளையங்கோட்டை, கோவை, மதுரை, கடலூர், வேலூர் மத்திய சிறைகளில் அடைக்கப்பட்டனர்.

தமிழகத்தில் இதற்கு முன்பு எந்தவொரு அரசும் குண்டர் சட்டத்தை பயன்படுத்தி அறவழியில் போராட்டம் நடத்திய விவசாயிகளை கைது செய்ததும் இல்லை, கொடும் குற்றம் புரிந்தவர்களைபோல இப்படி வெவ்வேறு சிறைகளில் அடைக்கப்பட்டதும் கிடையாது என்று கூறப்படுவதால் இப் பிரச்சனை பூதாகரமாக வெடித்தது.

விவசாயிகள் மீது வழக்கு பதிவு செய்தபோதே அதற்கு கண்டனம் தெரிவிக்கும் விதமாக அதிமுக சார்பில் கடந்த 4-ம் தேதி திருவண்ணாமலையில் கண்டன ஆர்ப்பாட்டமும் நடத்தப்பட்டது. தவிர குண்டர் சட்டத்தில் விவசாயிகள் கைது செய்யப்பட்ட பின்பு அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி, தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை, பாமக நிறுவனர் டாக்டர் ராமதாஸ் உள்ளிட்ட பல தலைவர்கள் திமுக அரசுக்கு கண்டனமும் தெரிவித்துள்ளனர்.

அரசியல் கட்சிகளை கடந்து தமிழ்நாடு அனைத்து விவசாயிகள் சங்கங்களின் ஒருங்கிணைப்பு குழுவும், அறப்போர் இயக்கமும் 7 விவசாயிகளை குண்டர் சட்டத்தில் கைது செய்ததை வன்மையாக கண்டித்தன.

குறிப்பாக, தமிழ்நாடு அனைத்து விவசாயிகள் சங்கங்களின் ஒருங்கிணைப்பு குழுவின் தலைவர் பி ஆர் பாண்டியன் முதலமைச்சர் ஸ்டாலினை கடுமையாக சாடினார்.
அவர் கூறுகையில், “தமிழகத்தில் விவசாயிகள் ஒப்புதல் இன்றி நிலங்களை கையகப்படுத்தவும், இடையூறாக இருக்கும் ஏரி,குளம், குட்டை ,ஆறுகள் உள்ளிட்ட நீர்வழி பாதைகளை அபகரித்துக் கொள்ளவும் தமிழ்நாடு அரசு நில ஒருங்கிணைப்பு சட்டம்- 2023 என்கிற கருப்பு சட்டத்தை கொண்டு வந்துள்ளனர்.

2021 தேர்தலில் மேல்மா கிராமத்து விவசாயிகளிடம் வாக்கு கேட்க சென்ற இந்நாள் முதலமைச்சர் அன்று எதிர்க்கட்சித் தலைவரான ஸ்டாலின், நான் ஆட்சிக்கு வந்தால் இந்த சிப்காட் திட்டத்தை கைவிடுவேன் என்று வாக்குறுதி கொடுத்துவிட்டு ஆட்சிக்கு வந்தார். இன்றைக்கு காவல்துறையை வைத்து கொடுமையான அடக்குமுறைகளை ஏவி விட்டு விவசாய நிலத்தை அபகரிக்க கார்ப்பரேட்டுகளுக்கு துணை போவது விவசாயிகளுக்கு செய்யும் நம்பிக்கை துரோகமாகும்” என்று போட்டு தாக்கினார்.

அதே நேரம் சமூக நல போராளிகள் என்று தங்களை அடையாளப்படுத்திக் கொண்டு முந்தைய அதிமுக ஆட்சியில் கொதிப்படைந்து ட்விட்டரில் பதிவுகளை வெளியிட்ட நடிகர்கள் சூர்யா, கார்த்தி, சித்தார்த், இயக்குனர் ரஞ்சித், பியூஷ் மானுஷ் போன்றோர் இதற்கு கொந்தளித்ததாக தெரியவில்லை.

அது மட்டுமல்லாமல் விவசாயிகளை பாதிக்கும் எந்த நடவடிக்கை என்றாலும் உடனடியாக உணர்ச்சி பொங்க ஒரு முழ நீளத்துக்கு கண்டன அறிக்கை வெளியிடும் மார்க்சிஸ்ட், இந்திய கம்யூனிஸ்ட் விசிக கட்சிகளின் மாநில தலைவர்கள் இந்த விவகாரத்தை கண்டுகொண்டதாகவே தெரியவில்லை. நடப்பது தாங்கள் ஆதரிக்கும் திமுக ஆட்சி என்பதால் என்னவோ கப்சிப் ஆகிவிட்டன.

தமிழக காங்கிரஸோ பாஜக ஆளும் மாநிலங்களில் இது போன்றதொரு அநீதி நடந்திருந்தால் இந்நேரம் பொங்கியெழுந்து வானத்துக்கும், பூமிக்குமாக குதித்து இருக்கும். ஆனால் நாடாளுமன்றத் தேர்தலில் திமுகவிடம் எம்பி சீட்டுக்கு கையேந்த வேண்டிய நிலையில் அக்கட்சி இருப்பதால் மறந்தும் கூட இது
பற்றி வாயே திறக்கவில்லை.

அதேபோல் மோடி அரசு கொண்டுவந்த வேளாண் சட்டங்களுக்கு எதிராக 2020 டிசம்பர் மாதம் தமிழகத்தில் எலிக்கறி சாப்பிடும் போராட்டம் நடத்தி பெரும் பரபரப்பை ஏற்படுத்திய தென்னிந்திய நதிகள் இணைப்பு விவசாயிகள் சங்க தலைவர் அய்யாக்கண்ணு என்ன ஆனார் என்பதும் தெரியவில்லை.

7 விவசாயிகளை திமுக அரசு குண்டர் சட்டத்தில் கைது செய்ததால், அது மாநில முழுவதும் விவசாயிகளிடம் மட்டுமின்றி பொது மக்களிடமும் பெரும் அதிர்வலையை ஏற்படுத்தியது. இதனால் விவசாயிகளுக்கு ஆதரவாக தமிழகத்தில் பெரிய அளவில் போராட்டம் வெடிக்கும் நிலையும் உருவானது.

தவிர நாலா பக்கமும் திமுக அரசு மீது கண்டனக் கணைகள் பாய்ந்ததால், இப்பிரச்சனையை தணிக்கும் விதமாக செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர் எ வ வேலு வேறு வழியின்றி பணிந்தார்.

“குண்டர் சட்டத்தில் கைது செய்யப்பட்டுள்ள விவசாயிகளின் குடும்பத்தினர் என்னிடம் மனு அளித்துள்ளனர். அதை நேரடியாக முதல்வரிடம் கொடுத்து, அவர்கள் மீதான குண்டர் சட்டத்தில் இருந்து விலக்கு பெறுவதற்கான நடவடிக்கைகளை இந்த
மாவட்டத்தைச் சேர்ந்த அமைச்சர் என்ற முறையில் மேற்கொள்வேன்” என தெரிவித்தார்.

அவர் இப்படிச் சொன்ன அடுத்த ஒரு சில மணி நேரங்களில், அதாவது நவம்பர் 17ம்தேதி இரவு 8.30 மணி அளவில் முதலமைச்சர் ஸ்டாலின் ஒரு உத்தரவை பிறப்பித்தார். அதில் திருவண்ணாமலை மாவட்டத்தில் குண்டர் சட்டத்தில் கைது செய்யப்பட்ட 7 விவசாயிகளில் அருள் என்பவர் தவிர மற்ற அனைவர் மீதான குண்டர் சட்டமும் ரத்து செய்யப்படுகிறது” என்று குறிப்பிட்டு இருந்தார்.

இந்த நடவடிக்கையும் கூட நானும் டெல்டாகாரன்தான், என்று அடிக்கடி பெருமை பேசும் முதலமைச்சர் ஸ்டாலின் மனம் உவந்து எடுத்தது போல் தெரியவில்லை. ஏனென்றால் குண்டர் சட்டத்தில் கைதான விவசாயிகள் மீதான நடவடிக்கையை ரத்து செய்து அவர் பிறப்பித்த உத்தரவில் காணப்பட்ட ஒரு தகவல்தான் இந்த விவகாரத்தில் மீண்டும் சலசலப்பை ஏற்படுத்தி உள்ளது.

அந்த உத்தரவில் ஸ்டாலின், “குண்டர் சட்டத்தின் கீழ் கைதான பச்சையப்பன், தேவன், சோழன், திருமால், மாசிலாமணி, பாக்கியராஜ் ஆகியோரின் குடும்பத்தினர் செய்யாறு சட்டமன்ற உறுப்பினருடன் பொதுப்பணித்துறை அமைச்சரை நேரில் சந்தித்து மேற்படி நபர்களை விடுவிக்கக் கோரிக்கை வைத்தனர்.

இவர்கள் அளித்த மனுக்களில், வரும் காலங்களில் இது போன்ற அரசு திட்டங்களை காரணம் இல்லாமல் எதிர்க்க மாட்டோம் என்றும், இத்தகைய தவறுகளை வெளி ஆட்களின் தூண்டுதலின் பேரில் செய்துவிட்டோம் என்றும், இனி வரும் காலங்களில் இது போன்ற தவறுகளை செய்ய மாட்டோம் எனவும் தெரிவித்து தங்களது குடும்ப உறுப்பினர்களை விடுவிக்க கோரி இருந்தனர்” என்று அவர் குறிப்பிட்டு இருந்ததுதான்.

“முதலமைச்சர் இப்படி கூறுவதை பார்த்தால், குண்டர் சட்டம் ரத்து செய்யப்பட்ட ஆறு பேரின் குடும்பத்தினரிடமும் உள்ளூர் திமுகவினர் மறைமுகமாக மிரட்டல் விடுத்து கோரிக்கை மனு வாங்கி இருப்பார்களோ என்ற பலத்த சந்தேகத்தை ஏற்படுத்துகிறது”
என அரசியல் விமர்சகர்கள் கூறுகின்றனர்.

“ஏனென்றால் குண்டர் சட்டத்தில் கைதான விவசாயிகள் ஏழு பேரும் சட்டவிரோத குற்றச் செயல்கள் எதிலும் ஈடுபட்டதாக தெரியவில்லை. அப்படி இருக்கும்போது, எதற்காக எதிர்காலத்தில் இதுபோன்ற தவறுகளை நாங்கள் செய்ய மாட்டோம், இப்போது நாங்கள் சிலரின் தூண்டுதலால்தான் தவறு செய்து விட்டோம் என்று அவர்கள் உறுதிமொழி கொடுக்கவேண்டும்?…

இரண்டாவதாக கிராமத்தில் இருக்கும் விவசாயிகளுக்கு இது போன்ற சட்ட நுணுக்கங்கள் எல்லாம் தெரிந்திருக்க வாய்ப்பே இல்லை. தவிர நாம் குண்டர் சட்டத்தில் கைதாவோம் என்று ஒருபோதும் அவர்கள் நினைத்திருக்கவும் மாட்டார்கள்.
ஒரு வருடம் சிறையில் இருக்க நேர்ந்தால் உங்கள் குடும்பம் நடுத்தெருவுக்கு வந்துவிடும் அதை நினைவில் கொள்ளுங்கள் என்று உள்ளூர் திமுகவினர் எச்சரிக்கை விடுத்து விடுதலை செய்யுமாறு கோரிக்கை மனு எழுதி வாங்கி இருக்கும் வாய்ப்புகளே அதிகம்.

அதனால்தான் அதிமுக தகவல் தொழில்நுட்ப பிரிவின் இணைச் செயலாளர்களில் ஒருவரான C.T.R.நிர்மல்குமார் இதனைக் கண்டிக்கும் விதமாக தனது X சமூக
வலைத்தள பக்கத்தில், “திமிரின் உச்சத்தில் ஒரு அறிக்கை. அதையும் முதல்வரே வெளியிட்டு இருக்கிறார்: “வருங்காலங்களில் விவசாயி தவறு செய்ய மாட்டோம்” என கடிதம் எழுதி வாங்க விவசாயிகள் என்ன செய்யக்கூடாத குற்றத்தையா செய்தார்கள்?” என்று மிக காட்டமாக ஒரு கிடுக்குப்பிடி கேள்வியையும் எழுப்பி இருக்கிறார்.

சென்னை-சேலம் எட்டு வழிச் சாலை திட்டத்துக்கு விவசாயிகளின் நிலங்களை முந்தைய அதிமுக அரசு கையகப்படுத்த முயன்றபோது அப்போது எதிர்க்கட்சியாக இருந்த திமுக விவசாயிகளுக்கு ஆதரவாக செயல்பட்டது. ஆனால் ஆட்சிக்கு வந்தவுடன் இப்போது விவசாயிகளை துச்சமாக பார்க்கிறது. இவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுத்தால் கேட்பதற்கு யாரும் இல்லை என்ற மமதையில் திமுக அரசு செயல்படுவதாகவே தோன்றுகிறது.

கட்சி நிர்வாகிகள் ஒழுங்காக பணியாற்றவில்லை என்றால் திமுக அரசுக்கு மக்களிடம் கெட்ட பெயர்தான் ஏற்படும். அதனால் நான் சர்வாதிகாரியாக மாறக்கூட தயங்க மாட்டேன் என்று முதலமைச்சர் ஸ்டாலின் அவ்வப்போது கூறி வருகிறார். ஆனால் இதுவரை அவர் திமுக நிர்வாகிகள் யாரிடமும் தனது சர்வாதிகாரத்தை காட்டியதாக தெரியவில்லை. மாறாக நாட்டு மக்களுக்கு உணவு அளிக்கும் விவசாயிகள் மீது காட்டுகிறார்.

இதேபோல்தான் காஞ்சிபுரம் மாவட்டம் பரனூரில் புதிய சர்வதேச விமான நிலைய அமைக்க தங்களது சுமார் 3 ஆயிரம் ஏக்கர் விவசாய நிலங்களை கையகப்படுத்தக் கூடாது என்று ஏகனாபுரம் உள்ளிட்ட 13 கிராமங்களைச் சேர்ந்த விவசாயிகள் 475 நாட்களைக் கடந்து தொடர் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். ஆனால் திமுக அரசோ விவசாயிகளின் போராட்டத்தை நீர்த்துப் போக வைத்து விளை நிலங்களை கையகப்படுத்தி விடலாம் என்று கணக்கு போடுவது போல் தெரிகிறது.

விவசாயிகளை அனாதைகள் என்று நினைத்து அவர்கள் மீது அடக்கு முறையை கையாளுவது எந்த அரசுக்கும் அவர்களிடம் அவப்பெயரையே ஏற்படுத்தும். இதை திமுக அரசும், முதலமைச்சர் ஸ்டாலினும் புரிந்து கொண்டால் சரி!” என்று அந்த அரசியல் விமர்சகர்கள் கூறுகின்றனர்.

இவர்கள் சொல்வதும் சிந்திக்க கூடிய ஒன்றாகத்தான் இருக்கிறது!

Views: - 224

0

0