அரசியலுக்கு டிடிவி தினகரன் குட்பை….? அமலாக்கத்துறை வைத்த ஆப்பு… அமமுக அதிர்ச்சி!
Author: Babu Lakshmanan12 August 2023, 8:57 pm
அமலாக்கத்துறையின் பிடியில் சிக்கி திமுக அமைச்சர்கள் செந்தில் பாலாஜி, பொன்முடி இருவரும் திணறி வரும் நிலையில் அவர்களோடு இப்போது அமமுக பொதுச் செயலாளர் டிடிவி தினகரனும் இணைந்து இருக்கிறார்.
இதில் மிகுந்த ஆச்சரியம் அளிக்கும் விஷயம் என்னவென்றால் கால் நூற்றாண்டுக்கு முன்பு அமலாக்கத்துறை தொடர்ந்த வழக்கில் இப்போதுதான் டிடிவி தினகரனுக்கு கடும் நெருக்கடியே ஏற்பட்டு உள்ளது.
ஜெயலலிதா முதல் முறையாக முதலமைச்சராக பதவி வகித்த
1991 முதல் 1996 வரையிலான கால கட்டத்தில் போயஸ் தோட்டத்தில் அரசின் அதிகாரங்களை அதிக அளவில் தங்களது கைகளில் குவித்து வைத்திருந்ததாக அவருடைய தோழி சசிகலாவைவும், டிடிவி தினகரனையும் கூறுவார்கள்.
இதன் மூலம் இவர்கள் இருவரும் சம்பாதிக்காத பணமே இல்லை என்று கூறப்படுவதும் உண்டு.
இந்த நிலையில்தான் ஜெயலலிதாவின் ஆட்சி காலம் முடிந்ததும் அமலாக்கத்துறை டிடிவி தினகரன் மீது இரண்டு வழக்குகளை தொடுத்தது.
குறிப்பாக 1996ம் ஆண்டு இங்கிலாந்து நாட்டின் பார்க்லே வங்கியில் அன்றைய இந்திய பண மதிப்பில் சுமார் 40 கோடி ரூபாயை முறைகேடாக டெபாசிட் செய்ததாகவும், ரிசர்வ் வங்கியின் அனுமதியின்றி லண்டனில் ஓட்டல் கட்டுவதற்காக சுமார் 15 கோடி ரூபாய் முதலீடு செய்ததாகவும் அந்நிய செலாவணி மோசடி வழக்குகளை அமலாக்கத்துறை பதிவு செய்தது.
இதில் பெரும் மோசடி நடந்திருப்பது விசாரணையில் தெரிய வந்த நிலையில் அமலாக்கத்துறை 1998ம் ஆண்டு 31 கோடி ரூபாயை தினகரனுக்கு அபராதமாக விதித்தது.
அதன்பிறகு தன் மீதான வழக்கை ரத்து செய்யக்கோரி டிடிவி தினகரன் கோர்ட்டில் தொடர்ந்த வழக்குகள் மீது விசாரணை நடக்கும்போது மட்டும், இது பற்றிய செய்திகள் ஊடகங்களில் பரபரப்பாக வெளியாகும். அதன் பிறகு அப்படியே அடிபட்டு போய்விடும்.
இந்த நிலையில்தான் டிடிவி தினகரனுக்கு விதிக்கப்பட்ட அபராதத் தொகை 31 கோடி ரூபாயை அவர் செலுத்தி விட்டாரா என்ற கேள்வி சில மாதங்களுக்கு முன்பு
சைதாப்பேட்டையைச் சேர்ந்த பார்த்திபன் என்பவருக்கு எழுந்தது. இதுகுறித்து தகவல் அறியும் உரிமைச் சட்டத்தில் கேட்டுப் பார்த்தும் அவருக்கு எந்த விவரமும் கிடைக்கவில்லை.
இதனால் பார்த்திபன் சென்னை ஐகோர்ட்டில் ஒரு மனுவை தாக்கல் செய்தார். அதில்,”அமமுக பொதுச்செயலாளரான டிடிவி தினகரன், அந்நிய செலாவணி மோசடியில் ஈடுபட்டதாகக்கூறி அவருக்கு 31 கோடி ரூபாய் அபராதம் விதித்து அமலாக்கத்துறை கடந்த 1998-ம் ஆண்டு பிப்ரவரி 6-ம் தேதி உத்தரவிட்டது. அதை எதிர்த்து அந்நிய செலாவணி ஒழுங்குமுறை மேல்முறையீட்டு வாரியத்தில் தினகரன் தாக்கல் செய்திருந்த மேல்முறையீட்டு மனு தள்ளுபடி செய்யப்பட்டது.
அதை எதிர்த்து அவர் உயர் நீதிமன்றத்தில் தாக்கல் செய்த வழக்கு கடந்த 2017-ம் ஆண்டு தள்ளுபடி செய்யப்பட்டது. பின்னர் அவர் உச்ச நீதிமன்றத்தில் தாக்கல் செய்த மேல்முறையீட்டு மனுவும் தள்ளுபடியாகி விட்டது. ஆனால் இதுநாள் வரை டிடிவி.தினகரன் தனக்கு விதிக்கப்பட்ட 31 கோடி அபராதத்தை செலுத்தவில்லை. இதை வசூலிக்க அமலாக்கத்துறை இயக்குநரும் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. எனவே டிடிவி. தினகரனிடமிருந்து அந்த பணத்தை வசூலிக்க அமலாக்கத்துறை இயக்குநருக்கு உத்தரவிடவேண்டும்” என அந்த மனுவில் வலியுறுத்தி இருந்தார்.
இந்த வழக்கு தலைமை நீதிபதி எஸ்.வி.கங்கா புர்வாலா மற்றும் நீதிபதி பி.டி.ஆதிகேசவலு ஆகியோர் அடங்கிய அமர்வில் விசாரணைக்கு வந்தபோது மனுதாரர் தரப்பில் ஆஜராகி வாதிட்ட வழக்கறிஞர் இளையபெருமாள், “31 கோடி ரூபாயை அபராதமாக செலுத்த வேண்டுமென உத்தரவிட்டு 25 ஆண்டுகளாகிவிட்டது. இதற்கிடையே இந்த உத்தரவை அந்நிய செலாவணி ஒழுங்குமுறை மேல்முறையீட்டு வாரியம், சென்னை உயர் நீதிமன்றம் மற்றும் உச்ச நீதிமன்றமும் உறுதி செய்துவிட்டன.
ஆனால் இதுவரை அந்த தொகையை அமலாக்கத்துறை வசூலிக்க உரிய நடவடிக்கை எடுக்கவில்லை. இதுதொடர்பாக தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின் கீழ் கேட்கப்பட்ட கேள்விகளுக்கு அமலாக்கத்துறை இயக்குநர் பதிலளிக்க மறுத்துவிட்டார்” என்று குறிப்பிட்டார்.
அதற்கு டிடிவி. தினகரன் தரப்பில் ஆஜரான வழக்கறிஞர் குமார்
‘‘இந்த விவகாரம் தொடர்பாக தினகரன் சார்பில் கீழமை நீதிமன்றத்தில் தொடரப்பட்டுள்ள சிவில் வழக்கு நிலுவையில் உள்ளது. இந்நிலையில் அவரை திவாலானவர் என அறிவிக்க அமலாக்கத்துறை நடவடிக்கை எடுத்து வருகிறது” என்று ஒரு அதிர்ச்சி தரும் தகவலை வெளியிட்டார்.
அதனை பதிவு செய்துகொண்ட நீதிபதிகள், இந்த வழக்கை முடித்து வைத்து உத்தரவிட்டனர். இவ்வழக்கிற்கு ஐகோர்ட் முற்றுப்புள்ளி வைத்துவிட்டாலும்
கூட இன்னொரு பக்கம் அது தொடர்பான அனல் பறக்கும் விவாதங்கள் தொடங்கிவிட்டன.
இந்த வழக்கு கீழமை நீதிமன்றத்தில் நிலுவையில் இருப்பதை டிடிவி தினகரன் காரணமாக கூறினாலும் சட்டத்தின் சந்து பொந்துகளை கெட்டியாக பிடித்துக் கொண்டு 25 ஆண்டுகளாக அமலாக்கத்துறைக்கு 31 கோடி ரூபாய் அபராதத்தை செலுத்தாமல் அவர் அல்வா கொடுத்து வருவது தமிழக அரசியலில் பெரும் பேசு பொருளாகவும் மாறி இருக்கிறது.
அரசியலில் நேர்மை, நியாயம், தூய்மை பற்றி பேசும் டிடிவி தினகரனா அபராதத்தை கட்டாமல் இழுத்தடித்து வருகிறார்?..என்ற விமர்சனங்களும் பலரால் முன்வைக்கப்படுகின்றன.
“25 ஆண்டுகளாக 31 கோடியை கட்டவில்லை என்றால் அதற்கான ஆண்டு வட்டி குறைந்தபட்சம் 2 கோடி ரூபாய் என்று வைத்துக் கொண்டாலும் கூட 25 ஆண்டுகளில் அந்தத் தொகைக்கு வங்கியில் 50 கோடி ரூபாய்க்கும் குறையாமல் வட்டி கிடைத்திருக்கும். இதனால் அபராத்துடன் வட்டியையும் சேர்த்து கட்டச் சொன்னால் டிடிவி தினகரனின் நிலைமை படு திண்டாட்டமாகி விடும்.
அதுவும் தினகரனை திவாலானவர் என்று அறிவிப்பதற்கான நடவடிக்கையை அமலாக்கத்துறை எடுத்து வருவதாக டிடிவி தினகரனின் வழக்கறிஞர் தெரிவிக்கிறார் என்றால் இவர்களே திட்டமிட்டு அதை நோக்கி நகர்கிறார்களோ என்ற சந்தேகத்தையும் ஏற்படுத்துகிறது” என்று அரசியல் விமர்சகர்கள் கூறுகின்றனர்.
“ஏனென்றால் ஜெயலலிதா தலைமையிலான அதிமுக அரசுக்கு களங்கத்தை ஏற்படுத்தியதே சசிகலாவும் அவருடைய அக்காள் மகன் டிடிவி தினகரனும்தான். அவர்கள் அடித்த கொள்ளைக்கு 31 கோடி ரூபாய் அபராதம் என்பதெல்லாம் வெறும் ஜூஜூபி.
தினகரன் கைதேர்ந்த அரசியல்வாதி. குறுக்கு வழியில் சம்பாதித்த பணத்தை எப்படி பாதுகாப்பாக பதுக்கி வைப்பது என்பதை அவரிடம்தான் அரசியல்வாதிகள் அனைவரும் கற்றுக் கொள்ளவேண்டும். செந்தில் பாலாஜி, பொன்முடி போன்றோர் தங்களது பினாமிகள் மூலம் சொத்துக்களை பதுக்கி வைத்திருக்கலாம் என்ற சிந்தனை அமலாக்கத்துறைக்கு வந்தது போல் தினகரன் மீது வராமல் போனது ஏன் என்ற கேள்வியும் எழுகிறது.
தவிர 2018ல் அம்மா மக்கள் முன்னேற்ற கழகம் என்ற தனிக்கட்சியைச் தொடங்கி பல தேர்தல்களையும் டிடிவி தினகரன் சந்தித்து விட்டார்.
2019 நாடாளுமன்றத் தேர்தல், அதனுடன் சேர்த்து நடத்தப்பட்ட 22 தொகுதிகளுக்கான சட்டப்பேரவை இடைத்தேர்தல், 2021 தமிழகத் தேர்தல், 2019, 2021 மற்றும் 2022 ஆண்டுகளில் நடந்த உள்ளாட்சித் தேர்தல்கள் போன்றவற்றிற்காக அமமுக செலவிட்ட தொகை நிச்சயம் பல நூறு கோடிகள் இருக்கும் என்று சொல்லலாம்.
இதுதவிர 2017 டிசம்பரில் நடந்த ஆர் கே நகர் இடைத்தேர்தலில் சுயேச்சையாக போட்டியிட்டபோது டிடிவி தினகரனுடன் துணையாக இருந்தவர்கள் வாக்காளர்களுக்கு குக்கருடன் சேர்த்து, இருபது ரூபாய் டோக்கனுக்காக கொடுத்த பணம் என்று கணக்கு பார்த்தால் அது 70 கோடி ரூபாய் வரை தேறும்.
இப்படிப்பட்டவரிடம் அமலாக்கத்துறை அபராத தொகையை செலுத்துங்கள் என்ற
கால் நூற்றாண்டு காலமாக ஏன் கெஞ்சிக் கொண்டிருக்கிறது என்றுதான் தெரியவில்லை. அவருக்கு நெருக்கமானவர்களிடம் அமலாக்கத்துறை அதிரடி ரெய்டு நடத்தினாலே இப்பிரச்சனைக்கு எளிதில் தீர்வு கண்டு விடலாம்.
அதேநேரம் என்னிடம் பணம்,சொத்து எதுவும் கிடையாது. நான் திவாலாகி விட்டேன் என்று டிடிவி தினகரனே கோர்ட்டில் ஒப்புக்கொண்டு விட்டால் அது அவருடைய அரசியல் எதிர்காலத்தையே கேள்விக்குறியாக்கி விடும். திவாலான ஒருவரை தலைவராக கொண்ட கட்சிக்கு ஓட்டு போட விரும்பாமல் அவருடைய கட்சியினரே ஒதுங்கிக் கொள்ளும் நிலையும் ஏற்படும்.
அதனால்தான் சமீபகாலமாக அரசியல் மேடைகளில் டிடிவி தினகரன் கோபம் கொப்பளிக்க பேசுகிறாரோ என்ற எண்ணமும் ஏற்படுகிறது” என்று அந்த அரசியல் விமர்சகர்கள் கூறுகிறார்கள்.
இது உண்மையாக இருக்கலாம் என்றே கருதத் தோன்றுகிறது.
0
0