படுகர் சமுதாயத்திற்கே பெருமை சேர்த்த இளம்பெண்.. முதல்முறையாக பெண் விமானி… மகிழ்ச்சியில் நீலகிரி…!!!

Author: Udayachandran RadhaKrishnan
7 September 2023, 1:49 pm
Woman Pilot- Updatenews360
Quick Share

நீலகிரி மாவட்டத்தில் படுகர் இன மக்கள் ஊட்டி, குன்னூர், கோத்தகிரி, கூடலூர் போன்ற நகர பகுதிகளிலும், கிராமங்களிலும் வாழ்ந்து வருகின்றனர்.

பொதுப்பிரிவு பட்டியலில் உள்ள இவர்கள் தங்களை பழங்குடியின பிரிவில் சேர்க்க வேண்டும் என்று நீண்ட நாட்களாக கோரிக்கை விடுத்து வருகிறார்கள்.

கடந்த சில வருடங்களாக இந்த சமுதாயத்தை சேர்ந்த பலர் கப்பல் படை, ராணுவம் உள்பட பல்வேறு துறைகளில் சேர்ந்து பணியாற்றியும் வருகிறார்கள்.

அந்த வகையில் நீலகிரி படுகர் சமுதாயத்தை சேர்ந்த இளம்பெண் ஒருவர் முதல் முறையாக விமானியாக தேர்வு செய்யப்பட்டிருப்பது பலருக்கும் மகிழ்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

நீலகிரி மாவட்டம் கோத்தகிரி நெடுகுளா குருக்கத்தியை சேர்ந்த கிராம நிர்வாக அலுவலராக பணியாற்றி ஓய்வு பெற்றவர் மணி. இவருடைய மனைவி மீரா. இவர்களுக்கு ஜெயஸ்ரீ என்ற மகள் உள்ளார். இந்த ஜெயஸ்ரீதான் நீலகிரி படுகர் சமுதாயத்தில் முதல் பெண் விமானியாக தேர்வாகியுள்ளார்.

ஜெயஸ்ரீ பள்ளிப்படிப்பை கோத்தகிரியில் முடித்தார். இதன்பின்னர் கோவையில் உள்ள தனியார் கல்லூரியில் இன்ஜினியரிங் முடித்த இவர் சில காலம் ஐடி துறையில் வேலை பார்த்து வந்தார்.

அதன் பின்னர் விமானியாக முடிவு செய்து பைலட் பயிற்சி முடித்து தற்போது விமானியாக சேர்ந்துள்ளார். இதற்காக தென்னாப்பிரிக்காவில் விமான பயிற்சி எடுத்து கொண்டார்.

நீலகிரியில் வாழும் படுகர் சமுதாயத்தில் முதல் பெண் விமானியாக தேர்வான கோத்தகிரி ஜெயஸ்ரீக்கு பலரும் வாழ்த்துக்களை தெரிவித்து வருகிறார்கள். ஜெயஸ்ரீயை அப்பகுதி மக்கள் கொண்டாடுகிறார்கள். தன்னம்பிக்கையும், கல்வியும், பெற்றோரின் அன்பான ஆதரவும் பெண்களுக்கு இருந்தால் அவர்கள் மிகப்பெரிய உயரத்தை அடைய முடியும் என்பதற்கு விமானி ஜெயஸ்ரீ மிகச்சிறந்த உதாரணமாவார்.

Views: - 1476

0

0