வெள்ள பாதிப்பை தேசிய பேரிடராக அறிவிக்க வேண்டும்.. பிரதமர் மோடியிடம் முதலமைச்சர் ஸ்டாலின் வலியுறுத்தல்!

Author: Udayachandran RadhaKrishnan
20 December 2023, 9:19 am

வெள்ள பாதிப்பை தேசிய பேரிடராக அறிவிக்க வேண்டும்.. பிரதமர் மோடியிடம் முதலமைச்சர் ஸ்டாலின் வலியுறுத்தல்!

சென்னையில் கடந்த 4-ந்தேதி சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர், செங்கல்பட்டு ஆகிய மாவட்டங்களில் பெய்த மிச்சாங் புயல் மழை பெரும் வெள்ள சேதத்தை ஏற்படுத்தியது.

இதையடுத்து தமிழக அரசின் மீட்பு நடவடிக்கைகளால் இயல்பு நிலை திரும்பியது. மத்திய மந்திரி ராஜ்நாத் சிங் சென்னைக்கு வந்து மழை சேதங்களை பார்வையிட்டார். அதேபோல் மத்திய குழுவும் சென்னை உள்ளிட்ட 4 மாவட்டங்களுக்கு வந்து மழை சேதங்களை பார்வையிட்டது. அப்போது தமிழக அரசு மேற்கொண்ட நடவடிக்கைகளை மத்தியக்குழுவினர் பாராட்டினர்.

இந்த நிலையில் நேற்று டெல்லிக்கு சென்றிருந்த முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் இந்தியா கூட்டணி கட்சி தலைவர்கள் கூட்டத்தில் பங்கேற்றார்.

அதைத்தொடர்ந்து நேற்று இரவு பிரதமர் இல்லத்தில் பிரதமர் மோடியை அவர் சந்தித்து பேசினார். 20 நிமிடம் நடந்த இந்த சந்திப்பில், மிக்ஜாம் புயல் காரணமாக சென்னை உள்பட 4 மாவட்டங்களில் சாலைகள், பாலங்கள், பள்ளிக்கட்டிடங்கள், அரசு மருத்துவமனைகள், மின்சார கட்டமைப்புகள், உள்ளாட்சி அமைப்புகளில் குடிநீர் கட்டமைப்புகள் போன்றவைகளுக்கு ஏற்பட்ட பாதிப்புகள் குறித்தும், மீட்பு மற்றும் நிவாரண நடவடிக்கைகளை போர்க்கால அடிப்படையில் மேற்கொண்டது பற்றியும் பிரதமரிடம் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் எடுத்துரைத்தார்.

மேலும் மத்திய அமைச்சர் ராஜ்நாத் சிங் மற்றும் மத்தியக் குழுவினர் வெள்ள பாதிப்புகளை ஆய்வு செய்து தன்னுடன் ஆலோசனை மேற்கொண்டது பற்றியும், நிவாரண பணிகளுக்காக மத்தியக்குழு பாராட்டியதையும் குறிப்பிட்டார்.

மேலும், மழை வெள்ள நிவாரண பணிகளை மேற்கொள்ள தற்காலிக நிவாரண தொகையாக ரூ.7 ஆயிரத்து 33 கோடி, நிரந்தர நிவாரண தொகையாக ரூ.12 ஆயிரத்து 659 கோடியையும் விரைந்து ஒதுக்கீடு செய்ய வேண்டும் என முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் பிரதமரிடம் வலியுறுத்தினார்.

அதுமட்டுமின்றி கடந்த 17, 18-ந்தேதிகளில் நெல்லை, தென்காசி, தூத்துக்குடி, கன்னியாகுமரி ஆகிய மாவட்டங்களில் பெய்த பெருமழையால் ஏற்பட்ட பாதிப்புகள் பற்றியும் விளக்கினார்.

மிச்சாங் புயல் மழையால் சென்னை மற்றும் சுற்றுப்புற மாவட்டங்களில் கடந்த 47 ஆண்டுகளில் இல்லாத கனமழை, தென் மாவட்டங்களில் 100 ஆண்டுகளில் இல்லாத கனமழை ஆகியவற்றால் ஏற்பட்ட பாதிப்புகளை கருத்தில் கொண்டு தேசிய பேரிடராக அறிவிக்க வேண்டும் என்றும் பிரதமர் மோடியிடம் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கேட்டுக்கொண்டார்.

எனவே பேரிடர் நிவாரண நிதியில் இருந்து ரூ.2,000 கோடியை அவசர நிவாரண நிதியாக வாழ்வாதார உதவிக்காகவும், நெல்லை, தென்காசி, தூத்துக்குடி, கன்னியாகுமரி ஆகிய மாவட்டங்களில் தற்காலிக சீரமைப்பு பணிகளுக்காகவும் வழங்க வேண்டும் என்றும் பிரதமரிடம் அவர் வலியுறுத்தினார்.

  • madhavan talks about ncert syllabus going controversial எங்க வரலாற்றை மறைக்கிறீங்க?- வம்பாக பேசி சர்ச்சையில் சிக்கிக்கொண்ட மாதவன்! ஏனப்பா இப்படி?