ஆளுநர் ஆர்என் ரவி உண்மைக்கு புறம்பாக பேசுகிறார்… இரவோடு இரவாக அமைச்சர் தங்கம் தென்னரசு விளக்கம்!

Author: Udayachandran RadhaKrishnan
20 December 2023, 8:34 am
Rn Ravi Thangam - Updatenews360
Quick Share

ஆளுநர் ஆர்என் ரவி உண்மைக்கு புறம்பாக பேசுகிறார்… இரவேடு இரவாக அமைச்சர் தங்கம் தென்னரசு விளக்கம்!

தமிழ்நாடு ஆளுநர் மாளிகையில், மழை மற்றும் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட தென் மாவட்டங்களில் மத்திய அரசுத்துறைகள் மற்றும் பாதுகாப்புப்படைகள் மேற்கொண்டு வரும் மீட்பு நிவாரண பணிகளை ஆளுநர் ஆர்.என்.ரவி நேற்று ஆய்வு செய்தார்.

இந்த கூட்டத்தில் இந்திய ராணுவம், கடற்படை, கடலோர காவல் படை, விமானப்படை, தேசிய பேரிடர் மீட்புப்படை (என்.டி.ஆர்.எஃப்), ரயில்வே, பிஎஸ்என்எல், இந்திய வானிலை மையம் (ஐஎம்டி), இந்திய விமான போக்குவரத்துத்துறை ஆணையம் (ஏஏஐ) மற்றும் இந்திய செஞ்சிலுவை சங்கம் ஆகியவற்றின் பிரதிநிதிகள் பங்கேற்றனர்.

இந்த கூட்டத்தில் பங்கேற்ற சில அமைப்புகள், போதிய ஒருங்கிணைப்பு இல்லாதது மற்றும் பாதிக்கப்பட்ட மாவட்டங்களின் ஒட்டுமொத்த நிலைமையை போதிய வகையில் மதிப்பிடாதது போன்ற காரணங்களால் எத்தனை வளங்கள் சரியாக தேவை மற்றும் எங்கெல்லாம் படையினரை அனுப்ப முன்னுரிமை தர வேண்டும் என்பது தெளிவற்று உள்ளதாக கவலை தெரிவித்தன என தமிழ்நாடு ஆளுநர் மாளிகை செய்திக் குறிப்பில் தமிழ்நாடு அரசு மீது புகார் தெரிவிக்கப்பட்டிருந்தது.

இதற்கு தமிழ்நாடு நிதி அமைச்சர் தங்கம் தென்னரசு கடும் கண்டனம் தெரிவித்துள்ளார். திருநெல்வேலியில் நேற்று செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர் தங்கம் தென்னரசு, மத்திய அரசின் பல்வேறு அமைப்புகளுடன் ஆளுநர் ஆலோசனை நடத்தி அதில் தமிழ்நாடு அரசு ஒருங்கிணைப்புடன் செயல்படவில்லை என குற்றம்சாட்டி இருப்பது கவனத்துக்கு வந்துள்ளது. பெருமழை வெள்ளம் தொடங்கியது முதலே அனைத்து துறைகளுடனும் தமிழ்நாடு அரசு நல்ல ஒருங்கிணைப்பில் இருந்து வந்தது. வானிலை ஆய்வு மையத்தினருடன் தொடர்பில் இருந்தோம். 1.14 கோடி பேருக்கு முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக எஸ்.எம்.எஸ். மூலம் தகவல் அனுப்பி வைக்கப்பட்டது.

வெள்ளம் பாதித்த பகுதிகளில் முப்படையினருடன் தொடர்பில் இருந்து தேவையான உதவிகளைப் பெற்றுள்ளோம். திருவனந்தபுரம், உதகையில் இருந்து 108 ராணுவ வீரர்கள் வருகை தந்துள்ளனர். தேசிய பேரிடர் மீட்பு குழுவினர் 250 பேர் அர்ப்பணிப்புடன் பணியாற்றுகின்றனர். இது எல்லாம் தமிழ்நாடு அரசு ஒருங்கிணைப்புடன் இருந்ததற்கு எடுத்துக் காட்டு. விமானப் படை ஹெலிகாப்டர்கள் மூலம் 7 டன் உணவுப் பொருட்கள் விநியோகம் செய்யப்பட்டுள்ளது என விளக்கம் அளித்தார்.

Views: - 205

0

0