ஏழைகளின் ஓலை குடிசைகளுக்கு மத்தியில் விலையுயர்ந்த நினைவு சின்னக் கட்டிடமா..? இது அவமானம்… மீண்டும் சீண்டும் ஆளுநர்…!!

Author: Babu Lakshmanan
29 January 2024, 10:06 am
Quick Share

ஏழைகளின் ஓலை குடிசைகளுக்கு மத்தியில் விலையுயர்ந்த நினைவு சின்னக் கட்டிடமா..? என்று ஆளுநர் ஆர்என் ரவி விமர்சனம் தெரிவித்துள்ளார்.

பல்வேறு நிகழ்ச்சிகளில் பங்கேற்பதற்காக ஆளுநர் ஆர்என் ரவி நாகை மாவட்டத்திற்கு நேற்று வருகை புரிந்திருந்தார். கீழ்வேளூர் ஒன்றியம் கீழவெண்மணியில் உள்ள தியாகிகள் நினைவு இல்லத்துக்குச் சென்றார். அங்கு, 1968ல் நடந்த படுகொலையின்போது, துப்பாக்கி குண்டுபட்டு காயமடைந்து, உயிர்பிழைத்த மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி உறுப்பினர் தியாகி ஜி.பழனிவேலை சந்தித்து நலம் விசாரித்தார். மேலும், அவரிடம் கீழ்வெண்மணி சம்பவம் குறித்து கேட்டறிந்தார்.

இந்த நிலையில், கீழ்வெண்மணி கிராமத்தில் ஏழை மக்களின் ஓலை குடிசைகளுக்கு மத்தியில் விலையுயர்ந்த கான்கிரீட் கட்டிட நினைவுச் சின்னம் அமைக்கப்பட்டிருப்பதற்கு பாமகவுக்கு மறைமுகமாக ஆளுநர் ஆர்என் ரவி கண்டனம் தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக ஆளுநர் மாளிகை வெளியிட்ட X தளப்பதிவில் கூறியிருப்பதாவது :- நிர்வாக அக்கறையின்மை மற்றும் ஊழல் குற்றச்சாட்டால் நாகப்பட்டினம் மாவட்டத்தில் தகுதிவாய்ந்த ஏழை கிராமத்தினர் பிரதமரின் வீடு கட்டும் திட்டத்தின் பலனைப் பெற முடியாமல் போனது வருத்தமளிக்கிறது.

பாட்டாளி வர்க்க சாம்பியனாக அழைத்துக்கொள்ளும் ஓர் அரசியல் கட்சியால் கீழ்வெண்மணி கிராமத்தில் சுற்றிலும் ஏழைகளின் ஓலை குடிசைகளுக்கு மத்தியில், படுகொலை செய்யப்பட்ட 44 ஏழைத் தொழிலாளர்களை நினைவுகூரும் வகையில், விலையுயர்ந்த கான்கிரீட் கட்டுமானம் ஒரு நினைவுச்சின்னமாக அமைந்திருப்பது முரணானது மட்டுமின்றி தியாகிகள் மற்றும் ஏழைகளுக்கு இழைக்கப்பட்ட கேலிக்குரிய அவமானமும் கூட – ஆளுநர் ஆர்என் ரவி,” என தெரிவிக்கப்பட்டுள்ளது.

Views: - 362

0

0