நீட் ரத்து விலக்கு மசோதாவை தொடர்ந்து ஆளுநர் ரவி எடுத்த அதிரடி முடிவு… திண்டாட்டத்தில் அரசு அதிகாரிகள்!!

Author: Babu Lakshmanan
9 February 2022, 7:59 pm
Governor - updatenews360
Quick Share

தமிழக ஆளுநராக கடந்த ஆண்டு செப்டம்பர் மாதம் 18-ம் தேதி, ஆர்.என். ரவியை மத்திய அரசு நியமித்தது. முன்னாள் ஐபிஎஸ் அதிகாரியான ரவி நியமிக்கப்பட்டபோதே அவரின் நியமனத்திற்கு திமுகவின் கூட்டணி கட்சிகளான காங்கிரஸ், விடுதலை சிறுத்தைகள், மதிமுக, கம்யூனிஸ்ட் உள்ளிட்டவை கடும் எதிர்ப்பு தெரிவித்தன.

ஆரம்பமே அதிரடி

காவல்துறையை பின்புலமாக கொண்ட ஒருவரை தமிழக ஆளுநராக நியமிப்பதற்கு காரணம் என்ன என்று கேள்வி எழுப்பியதுடன், முதலமைச்சர் ஸ்டாலினுக்கு இடையூறு செய்வதற்காவே ஆர்.என். ரவியை பாஜக அரசு நியமித்து இருக்கிறது. எனவே அவரை மத்திய அரசு உடனடியாக திரும்பப்பெற வேண்டும் என்று அந்தக் கட்சிகள் வலியுறுத்தவும் செய்தன.

ஆனால் ஆளுநராக பொறுப்பேற்ற அடுத்த இரண்டு நாட்களிலேயே, அவர் மாநில போலீஸ் டிஜிபி சைலேந்திரபாபுவை, கிண்டியில் உள்ள ஆளுநர் மாளிகைக்கு வரவழைத்து பேசினார். அப்போது சட்டம் ஒழுங்கை பராமரிக்க சில உடனடி நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் என்று ஆளுநர் ரவி அவரிடம் வலியுறுத்தியதாக கூறப்பட்டது. அதை உண்மை என்று நிரூபிப்பது போல அடுத்த சில நாட்களில் மாநிலம் முழுவதும் 3000 ரவுடிகள் கத்தி, அரிவாள் போன்ற ஆயுதங்களுடன் கைது செய்யப்பட்டனர்.

திமுக எரிச்சல்

அதைத்தொடர்ந்து மறைந்த முன்னாள் முதலமைச்சர் அண்ணா பிறந்த நாளையொட்டி, 700 கைதிகளை விடுதலை செய்ய திமுக அரசு முடிவு செய்தது. அந்த கைதிகளின் பின்னணி விவரங்களை ஆளுநர் கேட்க, அரசுக்கும், அவருக்கும் இடையேயான உறவில் விரிசல் ஏற்பட்டது.

ஏனென்றால் குண்டு வெடிப்பு சம்பவங்களில் தொடர்புடைய சில குற்றவாளிகளின் பெயர்களும் விடுதலை செய்யப்படுவோர் பட்டியலில் இருந்துள்ளது, என்கிறார்கள்.

அதேநேரம் ஆளுநர் ரவியை எதிர்க்கட்சி தலைவர்களான அதிமுக, பாஜகவினர் ஆளுநர் மாளிகைக்கே சென்று அவ்வப்போது சந்தித்து பேசுவது திமுகவுக்கும் அதன் கூட்டணிக் கட்சிகளுக்கும் எரிச்சலை ஏற்படுத்தி வருகிறது.

கடந்த மாதம் 5-ம் தேதி, தான் கலந்து கொண்ட தமிழக சட்டப்பேரவையின் முதல் கூட்டத்தில் பேசி உரையை நிறைவு செய்தபோது ஜெய் ஹிந்த் என்று வீர வணக்கம் கூறி ஆளுநர் ரவி தனது நாட்டுப் பற்றையும் வெளிப்பபடுத்தினார்.

மறைமுக பாராட்டு

இந்த நிலையில்தான் தனது குடியரசு தின விழா வாழ்த்து செய்தியில் ஆளுநர் , ‘நீட் தேர்வுக்கு முன், தமிழகத்தில் அரசு பள்ளி மாணவர்கள் 1 சதவீதத்திற்கும் குறைவாகவே, அரசு மருத்துவ கல்லுாரிகளில் சேர்ந்தனர். நீட் தேர்வுக்கு பின், 7.5 சதவீத இட ஒதுக்கீடு காரணமாகவும், அரசு பள்ளி மாணவர்கள் மருத்துவக் கல்லுாரிகளில் சேர்வது அதிகரித்துள்ளது’ என்று குறிப்பிட்டிருந்தார்.

cm - eps - updatenews360

இது முந்தைய எடப்பாடி பழனிசாமி தலைமையிலான அதிமுக அரசை மனம்விட்டு அவர் பாராட்டுவது போலவும் அமைந்திருந்தது. மேலும், திமுக அரசின் கொள்கைக்கு எதிரான கருத்துகள், அதிக அளவில் அந்த வாழ்த்து செய்தியில் இடம் பெற்றிருந்தன. இதை தனிப்பட்ட முறையில் ஆளுநரே தயார் செய்து வெளியிட்டு இருக்கிறார்.

நீட் விலக்கு நிராகரிப்பு

இது திமுக தலைமையை கடுமையாக எரிச்சலடைய செய்தது. இதற்கு பதிலடி கொடுக்கும் விதமாகத்தான், திமுகவின் அதிகாரப்பூர்வ நாளேடான முரசொலியில் ஆளுநர் ரவியை மறைமுகமாக கண்டித்து ஒரு கட்டுரையும் எழுதப்பட்டிருந்தது.

அடுத்ததாக, கடந்த ஆண்டு செப்டம்பர் 13-ந் தேதி சட்டப் பேரவையில் நிறைவேற்றப்பட்டு, குடியரசுத் தலைவரின் ஒப்புதலுக்காக ஆளுநருக்கு அனுப்பி வைக்கப்பட்ட, நீட் விலக்கு கோரும் சட்ட மசோதாவை, மறு பரிசீலனை செய்யும்படி சபாநாயகருக்கு, ஆளுநர் அண்மையில் திருப்பி அனுப்பினார். அதற்கான காரணங்களை விளக்கி கடிதம் ஒன்றையும் இணைத்து இருந்தார். அதையும் கூட அவரே தயார் செய்துள்ளார்.

அந்த கடிதத்தில் நீட் தேர்வுக்கு விலக்கு கோரும் உயர்மட்டக்குழுவின் அறிக்கை ஏற்கத்தக்கது அல்ல. காமலைக் கண்ணால் பார்ப்பதுபோல ஒருதலைப் பட்சமாக உள்ளது. அதேபோல் மருத்துவ படிப்பு என்பது இயற்பியல், வேதியியல், உயிரியல் அறிவைக் கொண்ட விஞ்ஞானத்தை அடிப்படையாகக் கொண்டதுதான். ஆனால் அதை ஒரு குற்றமாக கூறுவதை ஏற்க முடியாது என்று சற்று காட்டமாகவே குறிப்பிட்டிருந்தார்.

இதற்கு எதிர்ப்பு தெரிவிக்கும் விதமாகவும், ஆளுநரின் வேண்டுகோளின்படியும் இரண்டாவது முறையாக தமிழக சட்டப்பேரவையில் நீட் தேர்வில் இருந்து விலக்கு கோரும் சட்ட மசோதா பிப்ரவரி 8-ந்தேதி நிறைவேற்றப்பட்டு உடனடியாக ஆளுநருக்கு அனுப்பியும் வைக்கப்பட்டது.

ஆளுநரின் அடுத்த அதிரடி

இதுபற்றி டெல்லியை சேர்ந்த அரசியல் நோக்கர்கள் கூறும்போது, “தமிழக ஆளுநர் ரவி தனது அதிகாரத்துக்கு உட்பட்டே நடந்து வருகிறார். மாநிலத்தை ஆளும் திமுக அரசை அவர் வெளிப்படையாக தனிப்பட்ட முறையில் விமர்சிப்பது இல்லை. அதேநேரம் சட்ட ரீதியாக பிரச்சினை ஏற்படலாம் என்று கருதும் விஷயங்களில் மிகுந்த கவனமாக இருக்கிறார்.

கடந்த அக்டோபர் மாத இறுதியில் ஆளுநர் ரவி, மாநில தலைமைச் செயலாளர் இறையன்புக்கு ஒரு கடிதம் எழுதினார். அதில் அனைத்து துறைகளிலும் செயல்படுத்தப்படும் மத்திய, மாநில அரசுகளின் திட்டங்கள் குறித்து விரிவான அறிக்கையை சமர்ப்பிக்குமாறு உத்தரவிட்டு இருந்தார்.

இந்த நிகழ்வு அரசியல் வட்டாரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்த இறையன்பு, “இது நடைமுறையில் உள்ள ஒன்றுதான். நிர்வாக ரீதியான இந்த கடிதத்தை பிரச்சனை ஆக்குவது சரியல்ல” என்று விளக்கமளிக்கவும் நேர்ந்தது.

இப்படி ஒவ்வொரு விஷயத்திலும், சட்ட விதிகளை ஆய்வு செய்து, விதிமுறைகளின்படி செயல்படுவதால், ஆளுநர் ரவி என்ன முடிவெடுக்கிறார் என்பது, கிண்டியில் உள்ள ஆளுநர் அலுவலக அதிகாரிகளுக்கே தெரியாத நிலைதான் உள்ளது என்பதே உண்மை.

ஆளுநர் ரவி முன்னாள் போலீஸ் அதிகாரி என்பதால் டெல்லியில் தனக்கு நெருக்கமாக உள்ள உளவுத்துறை அதிகாரிகள், அரசியல் சட்ட வல்லுநர்களுடன் தொடர்பு கொண்டு சட்டரீதியான விவகாரங்களை அலசி ஆராய்கிறார். எனவேதான் ஆளுநர் மாளிகையில் பணிபுரியும் அதிகாரிகளுக்கு கூட எதுவும் தெரியாமல் போய்விடுகிறது. அதனால் இதுபோன்ற அதிரடி நடவடிக்கைகள் இனியும் தொடரும் வாய்ப்புகளே அதிகம்.

நீட் விலக்கு கேட்டு சட்டபேரவையில் திமுக அரசு 2-வது முறையாக தீர்மானம் நிறைவேற்றி இருந்தாலும் கூட அது உச்ச நீதிமன்றத்திற்கு போனால் சட்டத்திற்கு விரோதமானது என்று நிராகரித்து விடும் வாய்ப்புகளே அதிகம்.

இதில் திமுக முழுக்க முழுக்க அரசியல் செய்து கொண்டிருக்கிறது. நீட் மசோதவை வைத்துக்கொண்டு ஆளுநரை விமர்சிப்பது, சமூகநீதி என்று பேசுவது, பல மாநில அரசுகளுக்கு கடிதம் எழுதுவது போன்ற அனைத்துமே அரசியல்தான். அதனால்தான் திமுக கொடுத்த வாக்குறுதி உண்மைக்குப் புறம்பானது என்பதை தனது கடிதங்களில் தமிழக ஆளுநர் ரவி மறைமுகமாக சுட்டிக்காட்டி உள்ளார்.

அடுத்து இதில் என்ன நடக்கப் போகிறது என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்”
என்று அந்த அரசியல் நோக்கர்கள் குறிப்பிட்டனர்.

Views: - 563

0

0