பாராட்டில் ஆளுநர் வைத்த பலத்த குட்டு.. திகைப்பில் திணறும் திமுக… கூட்டணி கட்சிகள் ‘கப்சிப்’..!!

Author: Babu Lakshmanan
18 October 2022, 7:37 pm
Quick Share

கருத்தும்.. எதிர்ப்பும்..

தமிழக ஆளுநர் ரவி பொதுவெளியில் எந்தவொரு கருத்தை தெரிவித்தாலும், அதற்கு உடனுக்குடன் திமுகவோ அல்லது அதன் கூட்டணி கட்சிகளோ எதிர்வினை ஆற்றுவதையும், அதை மிகப் பெரிய சர்ச்சைக்குரிய விஷயமாக மாற்றுவதையும் கடந்த ஓராண்டாக பார்க்க முடிகிறது.

அதற்கு காரணம் முந்தைய ஆளுநர்களை போல் இல்லாமல் மாநிலத்தில் நிலவும் சூழ்நிலைக்கு ஏற்ப அவருடைய செயல்பாடுகளும், பேச்சும் அமைந்திருப்பதுதான்.

Governor Ravi - Updatenews360

தேசிய கல்விக் கொள்கை, சனாதன தர்மம், ஆங்கிலேயர்களால் திணிக்கப்பட்ட சமய சார்பின்மை வாதம், இந்துக்களின் ஆன்மிக நம்பிக்கை, ஜி.யு.போப்பின் தவறான திருக்குறள் ஆங்கில மொழிபெயர்ப்பு என்று எதுவாக இருந்தாலும் சரி, ஆளுநர் ரவி பேசிய அடுத்த சில மணி நேரங்களிலேயே திருமாவளவன், வைகோ, மார்க்சிஸ்ட் மாநில செயலாளர் பாலகிருஷ்ணன், இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயலாளர் முத்தரசன், தமிழக காங்கிரஸ் தலைவர் கே எஸ் அழகிரி, மக்கள் நீதி மய்யத்தின் தலைவர் கமலஹாசன், நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் உள்ளிட்ட பலரும் கொந்தளித்துப் போய் கண்டன அறிக்கை வெளியிடுவது வழக்கம்.
அல்லது இவர்களின் கட்சியில் இருந்து வேறு யாராவது ஒரு தலைவர் ஆளுநரை மிகக் கடுமையாக விமர்சிப்பார்.

தீண்டாமை கொடுமை

ஆனால் ஆளுநர் தமிழகத்தின் தற்போதைய நிலைமை குறித்து புள்ளி விவரங்களுடன்
சென்னையில் நேற்று மனம் நொந்து பேசிய சில விஷயங்களுக்கு, இதுவரை திமுகவோ அதன் கூட்டணி கட்சி தலைவர்களோ எந்த விமர்சனமும் வைக்கவில்லை. வாய் திறக்கவும் இல்லை.

இந்தியாவின் 75-ம் ஆண்டு சுதந்திர விழா மற்றும் மகாத்மா காந்தி பட்டியல் இன மக்களுக்காக தொடங்கிய சேவா சங்கத்தின் 90-ம் ஆண்டு விழாவில் பங்கேற்றுப் பேசிய தமிழக ஆளுநர் ரவி,” பிரிட்டிஷ்காரர்கள் நம் நாட்டை மதம், மொழி, நிறம், இடங்கள் அடிப்படையில் பிரித்தார்கள். மகாத்மா காந்தி ஒருவர் தான், இந்தியர்கள் அனைவரையும் ஒரே குடும்பமாக்கினார். அடித்தட்டு மக்களுக்கான வளர்ச்சியை கொண்டு வருவதிலேயே அவர் கூடுதல் கவனம் செலுத்தினார். ஆனால், காந்தியின் மரணத்திற்கு பிறகு மீண்டும் வசதி படைத்தவர்களுக்கும் கல்வி படைத்தவர்களுக்கும் அனைத்தும் என டார்வினிசம் போன்ற நிலையை நாடு எட்டியது.

TN Governor RN Ravi -Updatenews360

கல்வி, தொழில், உட்கட்டமைப்பு, சுகாதாரம் ஆகியவற்றில் இன்று தமிழகம் முன்னணியில் திகழ்வது மகிழ்ச்சிக்குரியது. இந்தியாவில் கல்வித்துறையில் 6 முதல் 18 வயதுக்குட்பட்ட குழந்தைகளில் 28 சதவீதம் பேர் பள்ளி செல்கின்றனர். மற்றவர்கள் பள்ளி செல்லவில்லை. ஆனால் தமிழகத்திலோ 51 சதவீத குழந்தைகள் பள்ளி செல்கின்றனர். இது சிறப்பாக விளங்குவதை காட்டுகிறது. இதற்கு நாம் பெருமை கொள்ள வேண்டும். எனினும் இதை இன்னும் உற்றுநோக்கினால் பட்டியல் இன குழந்தைளில் வெறும் 13 முதல் 14 சதவீத குழந்தைகளே பள்ளி செல்கின்றனர். இந்த மாநில மக்கள் தொகையில் 24 சதவீத பட்டியல் இன மக்கள் வசிக்கின்றனர். அப்படியானால் சில சமூகத்தினர் மட்டுமே 70 முதல் 75 சதவீத கல்வி வளர்ச்சி பெறுகின்றனர். இந்த சதவீதங்களுக்கு இடையிலான இடைவெளியை நாம் பார்க்க வேண்டும். யாருக்கு கல்வியும், அக்கறையும் கொடுக்க வேண்டுமோ அவர்களை நாம் மறந்துவிட்டோம்.

இன்னும் பல இடங்களில் பள்ளிகள், கோவில்களில் பட்டியல் இன மக்கள் தீண்டத்தகாதவர்களாக நடத்தப்படும் கொடுமை தமிழகத்தில் நிலவுகிறது. இந்த கொடுமை ஏன்? தீண்டாமை கொடுமை நிகழ்த்தும் பலர் இன்னும் இங்கு உள்ளனர்.

தீண்டாமையை கடைபிடிப்போருக்கு எதிராக கடுமையான சட்டங்கள் இருந்தும் இவை இன்னும் நடக்கின்றன. பட்டியல் இன மக்களுக்கு எதிராக நடக்கும் குற்றங்கள், அந்த வகுப்பு பெண்கள் மீது நடக்கும் பாலியல் வன்கொடுமைகளை சகித்துக் கொள்ள முடியாது.

இத்தகைய குற்றங்களில் ஈடுபடுவோரில் 86 சதவீதம் பேர் தண்டனைகளில் இருந்து தப்பித்து விடுகின்றனர். தண்டிக்கப்படுவதில்லை, என்பதே இக்குற்றங்கள் தொடர காரணம். பட்டியல் இன மக்கள் நம் மக்கள். அவர்களின் நிலை மேம்பட உறுதுணையாக நிற்க வேண்டியது நம் கடமை” என்று உருக்கமாக குறிப்பிட்டார்.

அறிவுரை

இதற்கு முன்பு ஆளுநர் பேசிய விஷயங்களை எல்லாம் சர்ச்சைக்குரிய விதமாக, பூதாகரமாக மாற்றிய சில அரசியல் கட்சிகள், இப்போது தமிழகத்தில் நிலவும் தீண்டாமை, பெண்களுக்கு எதிரான பாலியல் குற்றங்கள் போன்றவை குறித்து அவர் புள்ளிவிவரங்களுடன் குறிப்பிட்டு இருப்பதால் என்னவோ, திமுகவினரும் அதன் கூட்டணிக் கட்சித் தலைவர்களும் கப்சிப் ஆகி விட்டார்களோ?” என்று அரசியல் விமர்சகர்கள் கேள்வி எழுப்புகின்றனர்.

“சமூக நீதி, சமத்துவம், சகோதரத்துவம், மதச்சார்பின்மை பற்றி பேசும் திமுக ஆட்சியில் தீண்டாமை இருக்கிறது, பல ஊர்களில், பள்ளிகள், கோவில்களுக்குள் பட்டியல் இன மக்களை அனுமதிப்பதில்லை. இந்த இருபத்தியோராம் நூற்றாண்டிலும் இதுபோன்ற கொடுமை இருப்பது மிகவும் கொடூரமானது என்பதை ஆளுநர் ரவி நேரடியாகவே சுட்டிக் காண்பித்திருக்கிறார்.

இந்தியாவிலேயே தமிழகத்தில்தான் கல்வி பயில்வோர் எண்ணிக்கை அதிகம் என்று மார்தட்டிக் கொண்டாலும் கூட தீண்டாமை இன்னும் இங்கே இருக்கிறது. அதையும் இந்த அரசாங்கம் கவனிக்கவேண்டும் என்பதை ஆளுநர் வலியுறுத்துகிறார்.

அதேபோல தமிழகத்தில் பெண்கள், சிறுமிகளுக்கு எதிரான பாலியல் வன்கொடுமை அதிகரிப்பது வேதனைக்குரிய விஷயம். இந்த குற்றங்கள் மீது திமுக அரசு கடுமையான நடவடிக்கைகளை எடுக்க வேண்டும் என்பதையும் ஆளுநர் காட்டமாக வெளிப்படுத்தியிருக்கிறார்.

CM Stalin - Updatenews360

தமிழகத்தில் பாலியல் குற்றங்கள் தொடர்பாக கைதாகும் குற்றவாளிகளில் 86 சதவீத பேர் தண்டனையிலிருந்து தப்பித்து விடுவதால் காவல்துறையை தனது முழு கட்டுப்பாட்டில் வைத்திருக்கும் முதலமைச்சர் ஸ்டாலின் தீவிர கவனம் செலுத்தவேண்டும் என்பதை இலைமறைவு காய் போல் ஆளுநர் ரவி அறிவுரையாக கூறியிருக்கிறார் என்றே சொல்லவேண்டும்.

அதுமட்டுமல்ல பட்டியலின மக்களின் முன்னேற்றம் குறித்து தொடர்ந்து வாய் கிழிய பேசிக்கொண்டே இருக்கும் ஒரு சில அரசியல் கட்சித் தலைவர்களால் அவர்களுக்கு
இதுவரை எந்த நன்மையும் கிடைக்கவில்லை என்பதையும் ஆளுநர் போட்டு உடைத்திருக்கிறார்.

உயர்கல்வியில் நாட்டிலேயே முதலிடத்தில் இருப்பதாக பெருமைப்பட்டுக் கொள்ளும் ஆட்சியாளர்கள் இதுபோன்ற பிரச்சினைகளுக்கு முற்றுப்புள்ளி வைக்க வேண்டும் என்பதையும் ஆளுநர் ரவி மறைமுகமாக குறிப்பிட்டிருக்கிறார்.

மவுனம்

கடந்த வியாழக்கிழமை சென்னை பரங்கிமலையில் ஓடும் ரயிலில் சத்யா என்ற மாணவியை சதீஷ் என்ற இளைஞன் தள்ளிவிட்டு படுகொலை செய்த சம்பவத்தை கண்டித்து மார்க்சிஸ்ட் மாநிலச் செயலாளர் பாலகிருஷ்ணன், வெளியிட்ட அறிக்கையில் தமிழகத்தில் பெண்கள், சிறுமிகளுக்கு எதிரான பாலியல் குற்றங்கள் தொடர்ந்து அதிகரித்து வருவதாகவும் அதை திமுக அரசு தடுக்கவேண்டும் என்றும் அறிவுறுத்தி இருந்தார்.

அதனால்தான் என்னவோ தமிழகத்தில் பாலியல் வன்கொடுமையில் ஈடுபடும் குற்றவாளிகள் 86 சதவீதம் பேர் தண்டனையிலிருந்து தப்பி விடுகிறார்கள் என்று ஆளுநர் ரவி சொன்னது சரி என்று கருதி அவர் மீது எந்த விமர்சனத்தையும் திமுக கூட்டணி கட்சிகள் வைக்கவில்லை என்பதையும் புரிந்துகொள்ள முடிகிறது.

தவிர தமிழகம் வந்து ஓராண்டுக்கும் மேல் ஆகிவிட்டதால், தமிழை நன்கு பேசவும், எழுதவும் கற்றுக் கொண்டு வரும் ஆளுநர் ரவி, இங்குள்ள நிலைக்கு ஏற்ப ஆதாரங்களுடன் எப்படி பேசவேண்டும் என்ற கலையை நன்றாகவே படித்துக்கொண்டுவிட்டது போலவும் தெரிகிறது.

அதற்கு உதாரணமாக அண்மையில் திருக்குறள் பற்றி அவர் தெரிவித்த ஒரு புதிய தகவலை சொல்லலாம்.

கப்சிப்

திருக்குறளை ஆங்கிலத்தில் மொழி பெயர்த்த ஜி யு போப், திருவள்ளுவர் எழுதிய கடவுள் வாழ்த்து என்னும் தொடக்க அதிகாரத்தின் முதல் குறளில் ஆதிபகவன் என்ற வார்த்தையை வேண்டுமென்றே தவறாக மொழி பெயர்த்து அதை ஆன்மீகமற்றதாக ஆக்கியிருக்கிறார் என்று ஆதாரங்களுடன் ஆளுநர் ரவி விளக்கம் அளித்து இருந்தார்.

இதற்காக அவரை கண்டித்த பல்வேறு அரசியல் கட்சித் தலைவர்களாலும் ஜி யு போப் சரியாகத்தான் திருக்குறளை மொழிபெயர்த்துள்ளார் என்று சொல்ல முடிந்ததே தவிர, அவர் ஆதி பகவன் என்ற வார்த்தையின் அர்த்தத்தை மாற்றியது ஏன் என்பது பற்றி எந்தவொரு தெளிவான பதிலையும் தர முடியவில்லை.

Stalin Alliance- Updatenews360

அதே பாணியில்தான் தற்போது தமிழகத்தின் நிலைமையை தராசு போல ஆளுநர் ரவி எடைபோட்டு கூறியிருக்கிறார். அதில் தமிழகத்தின் வளர்ச்சியை பாராட்டுகிற போதே மாநிலத்தில் உள்ள குறைபாடுகளையும் அவர் வேதனையுடன் குறிப்பிட்டிருக்கிறார்.
அதனால்தான் திமுகவோ, அதன் கூட்டணிக் கட்சித் தலைவர்களோ உடனடியாக எதிர் விமர்சனம் வைக்க முடியவில்லை” என்று அந்த அரசியல் விமர்சகர்கள் கூறுகின்றனர்.

Views: - 314

0

0