தமிழ்நாடு விவகாரம்… ஆளுநர் அப்படி பேசியது ஏன் தெரியுமா..? புதுச்சேரி ஆளுநர் தமிழிசை சவுந்தரராஜன் சொன்ன விளக்கம்!!

Author: Babu Lakshmanan
6 January 2023, 5:44 pm

தஞ்சை ; அண்ணாமலை, உதயநிதி போன்ற யாருக்கும் நான் ரிப்போர்ட் கார்டு கொடுக்க முடியாது என்று புதுவை ஆளுநர் தமிழிசை சௌந்தரராஜன் தெரிவித்துள்ளார்.

திருவையாறில் நடைபெற உள்ள தியாகராஜ ஆராதனை தொடக்க விழாவிற்கு செல்ல புதுச்சேரி ஆளுநர் தமிழிசை செளந்தரராஜன் விமானம் மூலம் திருச்சி வந்தார். அவருக்கு திருச்சி மாவட்ட கலெக்டர் பிரதீப் குமார் பூங்கொத்து கொடுத்து வரவேற்றார்.

இதனைத் தொடர்ந்து செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த அவர் கூறியதாவது :- தமிழ்நாடு ஆளுநர் ஆர்.என்.ரவி தமிழ்நாட்டை தமிழகம் என அழைக்க வேண்டும் எனக் கூறியிருக்கும் கருத்தின் உட்பொருளை நாம் புரிந்து கொள்ள வேண்டும். பிரிவினை வாத கருத்துக்கள் தமிழ்நாட்டில் அதிகமாக தற்பொழுது வர ஆரம்பித்துள்ள நேரத்தில் அதை அவர் கூறியுள்ளார்.

தமிழ்நாட்டை தனி நாடு என எடுத்துக்கொள்ள கூடாது என்கிற அர்த்தத்தில் அதை அவர் கூறியுள்ளார். நான் தமிழ்நாட்டை சார்ந்தவள் தான். என் மொழி தமிழ் மொழி, என் மாநிலம் தமிழ்நாடு, என் நாடு பாரத தேசம்.

ஆளுநர் அவரின் கருத்துக்களை கூறக்கூடாது என்பது இல்லை. அவர் தமிழ்நாட்டின் சில நிகழ்வுகளை பார்த்துவிட்டு தன்னுடைய கருத்துக்களை தெரிவிக்கிறார். மேலும் நான் பாஜகவில் இல்லை ஆளுநராக இருக்கிறேன், அதனால் அரசியல் பேச முடியாது.

அண்ணாமலை,உதயநிதி உள்ளிட்ட யாருக்கும் நான் ரிப்போர்ட் கார்டு கொடுக்க முடியாது, என தெரிவித்தார்.

  • madhavan talks about ncert syllabus going controversial எங்க வரலாற்றை மறைக்கிறீங்க?- வம்பாக பேசி சர்ச்சையில் சிக்கிக்கொண்ட மாதவன்! ஏனப்பா இப்படி?