பொங்கல் பரிசுத் தொகுப்பு இருக்கா? இல்லையா? புத்தாண்டே வந்தாச்சு.. அறிவிப்பு எங்கே? ராமதாஸ் கேள்வி!!

Author: Udayachandran RadhaKrishnan
31 December 2023, 4:11 pm

பொங்கல் பரிசுத் தொகுப்பு இருக்கா? இல்லையா? புத்தாண்டே வந்தாச்சு.. அறிவிப்பு எங்கே? ராமதாஸ் கேள்வி!!

பாமக நிறுவனம் டாக்டர் ராமதாஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில், “ஆங்கிலப் புத்தாண்டு நாளை பிறக்கவிருக்கும் நிலையில், அடுத்த இரு வாரங்களில் கொண்டாடப்பட உள்ள பொங்கல் திருநாளுக்கான பரிசுத் தொகுப்பு குறித்து தமிழக அரசின் சார்பில் இதுவரை எந்த அறிவிப்பும் வெளியாகவில்லை.

போதிய வாழ்வாதாரம் இல்லாமல் அரசின் உதவியை நம்பியிருக்கும் மக்களுக்கும், கரும்பு சாகுபடி செய்துள்ள உழவர்களுக்கும் அரசின் தாமதம் கவலையை ஏற்படுத்தி உள்ளது.

தமிழ்நாட்டு மக்கள் தமிழர் திருநாளாம் பொங்கல் திருநாளை சிறப்பாக கொண்டாட வசதியாக, கடந்த சில ஆண்டுகளாக ஒவ்வொரு பொங்கல் திருநாளுக்கும் அரிசி வாங்குவதற்கான குடும்ப அட்டை வைத்திருக்கும் குடும்பங்களுக்கு, பொங்கல் பரிசுத் தொகுப்பு இலவசமாக வழங்கப்பட்டு வருகிறது.
ஒவ்வொரு குடும்பத்திற்கும் தலா 1 கிலோ அரிசி, 1 கிலோ சர்க்கரை, 1 முழு கரும்பு, ரூ.1000 ரொக்கம் ஆகியவை வழங்கப்படும்.

ஏழை மக்களுக்கு உதவி வழங்க வேண்டும் என்பது தான் இத்திட்டத்தின் முதன்மை நோக்கம் என்றாலும், பொங்கலுக்கு படைக்கப் பயன்படும் செங்கரும்பை சாகுபடி செய்யும் உழவர்களுக்கு நல்ல விலை கொடுத்து அதை கொள்முதல் செய்ய வேண்டும் என்பதும் காரணமாகும். பொங்கல் திருநாளுக்கு ஒரு மாதம் முன்பாகவே பொங்கல் பரிசுத் தொகுப்பு வழங்குவது தொடர்பாக அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியிடப்படும்.

ஜனவரி முதல் வாரத்தில் பரிசுத் தொகுப்பை வழங்கும் பணி தொடங்கி விடும். கடந்த ஆண்டு திசம்பர் 22 ஆம் நாள் பொங்கல் பரிசுத் தொகுப்பு தொடர்பான அறிவிப்பு வெளியிடப்பட்டது.

ஜனவரி 2 ஆம் நாள் அனைத்து மாவட்டங்களிலும் பொங்கல் பரிசுத் தொகுப்பு வழங்கும் பணி முதலமைச்சர் மற்றும் அமைச்சர்களால் தொடங்கி வைக்கப்பட்டது. ஆனால், நடப்பாண்டில் புத்தாண்டு பிறக்கவிருக்கும் நிலையில் பரிசுத் தொகுப்பு குறித்து எந்த அறிவிப்பும் இல்லை.

தமிழ்நாட்டில் கடந்த சில ஆண்டுகளாகவே பொங்கல் பரிசுத் தொகுப்பில் கரும்பு வழங்கப்பட்டு வருகிறது. கடந்த ஆண்டு பொங்கலுக்கு முதலில் அறிவிக்கப்பட்ட பரிசுத் தொகுப்பில் கரும்பு இடம்பெற வில்லை.

அதைக் கண்டித்து தமிழகத்தின் பல இடங்களில் உழவர்கள் போராட்டம் நடத்தியதைத் தொடர்ந்து தான் பொங்கல் பரிசுத் தொகுப்பில் கரும்பு சேர்க்கப்பட்டது. அப்போதும் கூட செங்கரும்பு கொள்முதலுக்கு நடைமுறைக்கு சாத்தியமற்ற நிபந்தனைகள் விதிக்கப்பட்டதால், உழவர்கள் தாங்கள் விளைவித்த கரும்புகளை முழுமையாக விற்பனை செய்ய முடியாமல் பெரும் இழப்புக்கு ஆளாயினர்.

நடப்பாண்டில் பொங்கலுக்கு இன்னும் பரிசுத் தொகுப்பு அறிவிக்கப்படாததால், பரிசுத் தொகுப்பு வழங்கும் திட்டம் கைவிடப்பட்டு விடுமோ? என்ற அச்சமும், கவலையும் உழவர்களுக்கு ஏற்பட்டிருக்கிறது. கடந்த சில ஆண்டுகளாக பொங்கல் பரிசுத் தொகுப்பை நம்பித் தான் பொங்கல் கரும்பை சாகுபடி செய்கின்றனர்.
நடப்பாண்டில் கடலூர், விழுப்புரம், நாகப்பட்டினம், மயிலாடுதுறை, சேலம், தருமபுரி, மதுரை உள்ளிட்ட மாவட்டங்களில் லட்சக்கணக்கான ஏக்கர் பரப்பளவில் பொங்கல் கரும்பு சாகுபடி செய்யப்பட்டு உள்ளது. இது வழக்கமாக பொங்கல் சந்தைக்கு தேவைப்படும் கரும்பை விட இரு மடங்குக்கும் கூடுதல் ஆகும்.

என்றால், விளைவிக்கப்பட்ட கரும்புகளில் சந்தையின் தேவைக்கு போக மீதமுள்ளதை எதற்கும் பயன்படுத்த முடியாது.பொங்கலுக்கு இன்னும் 2 வாரங்களே உள்ள நிலையில் அரசு கொள்முதல் செய்யவில்லை என்றால், வெளிச்சந்தையில் கரும்பு விலை வீழ்ச்சியடையும். அந்த விலைக்கு விற்றால் உற்பத்திச் செலவைக் கூட உழவர்களால் ஈடு செய்ய முடியாது.

அப்படி ஒரு நிலை ஏற்பட்டால் அதை தமிழ்நாட்டு உழவர்களால் தாங்க முடியாது. எனவே, தமிழ்நாட்டு மக்களுக்கான பொங்கல் பரிசுத் தொகுப்பை உடனடியாக தமிழக அரசு அறிவிக்க வேண்டும்; அதில் கரும்பு இருப்பதை உறுதி செய்ய வேண்டும். உயரம் தொடர்பாக எந்த நிபந்தனையும் விதிக்காமல் முழுக் கரும்பு என்ற அடிப்படையில், தமிழ்நாட்டு உழவர்களிடமிருந்து மட்டுமே கொள்முதல் செய்ய வேண்டும். ஒரு கரும்புக்கு ரூ.50 வீதம் விலை வழங்கவும் தமிழக அரசு முன்வர வேண்டும்.” என்று குறிப்பிட்டு உள்ளார்.

  • sasikumar freedom movie postponed due to financial issues ஃப்ரீடம்க்கு Freedom இல்லையா? சசிகுமார் திரைப்படம் வெளியாகாததற்கு இதுதான் காரணமா?