இந்தியை ஒருபோதும் ஏற்க மாட்டோம்.. தமிழ்தான் இந்தியாவின் இணைப்பு மொழி.. திராவிடர்கள் கைகோர்க்க வேண்டும் : இயக்குநர் பா.ரஞ்சித் பேச்சு!!

Author: Babu Lakshmanan
29 April 2022, 12:52 pm

இந்தியை ஒருபோதும் ஏற்க மாட்டோம் என்றும், இந்தியாவில் தமிழ் தான் இணைப்பு மொழியாக இருக்க வேண்டும் என இயக்குநர் பா.ரஞ்சித் தெரிவித்துள்ளார்.

டாக்டர்.அம்பேத்கர் பிறந்தநாளை முன்னிட்டு தலித் இலக்கிய மாதம் என ஏப்ரல் மாதத்தை முன்னிறுத்தி வானம் கலைத் திருவிழா எனும் தலைப்பில் கலை மற்றும் இலக்கியம் சார்ந்த பல்வேறு செயல்பாடுகளை நீலம் பண்பாட்டு மையம் மேற்கொண்டு வருகிறது.

ஏற்கனவே, சென்னை மற்றும் புதுவையில் திரைப்பட விழா மற்றும் ஓவிய, சிற்ப கண்காட்சிகள் நடைபெற்ற நிலையில், அதன் நிறைவாக மதுரையில் “தலித் இலக்கிய கூடுகை” நிகழ்வு துவங்கியது.

உலக தமிழ்ச்சங்க அரங்கில் ஏப்ரல் 29, 30 ஆகிய இரண்டு நாட்கள் நடைபெறும் இந்நிகழ்வில் 30க்கும் மேற்பட்ட இலக்கியவாதிகள், எழுத்தாளர்கள், ஆராய்ச்சியாளர்கள், விமர்சகர்கள், கவிஞர்கள் பங்கேற்று பல்வேறு தலைப்புகளின் கீழ் உரை, விவாதம் நிகழ்த்த உள்ளனர்.

இதன் துவக்க நிகழ்வில் பங்கேற்ற இயக்குநர் பா.ரஞ்சித் அளித்த பேட்டியில் கூறியிருப்பதாவது :- அரசியலுக்கான முக்கியமான வடிவம் கலையும், இலக்கியமும். அதற்காகவே வானம் கலை திருவிழா நடத்தப்பட்டு வருகிறது. இலக்கிய கூடுகையின் நிறைவில் எழுத்தாளர் ராஜ் கௌதமனுக்கு விருது அளித்து கவுரவிக்க உள்ளோம்.

தமிழ் இலக்கிய சூழலுக்கும், பொது மக்களுக்கும் பெரிய இடைவெளி இருக்கிறது. பொது சமூகம் இலக்கியத்தை கொண்டாடுவது மிக குறைவு. ஆனால், இன்று எழுத்தை வாசிக்கிற இளைஞர்கள் அதிகரித்து உள்ளார்கள். தலித் இலக்கிய வகைமை என ஒன்று இருப்பதை எல்லோரும் புரிந்து கொள்ள வேண்டும். இது ஒரு சாதிக்கான கூடுகை கிடையாது. இது தமிழகத்தில், இந்தியாவில் மறுக்கப்பட்ட எழுத்துக்களை பேசுவதற்கான களம். இது பெரிய ஜனநாயக வடிவம்.

அமெரிக்க, ஆப்ரிக்க கறுப்பர்கள் மற்றும் அரபி இலக்கியங்கள் கொண்டாடப்படும் அதே அளவுக்கு தமிழ், இந்திய சூழலில் தலித் இலக்கியமும் கொண்டாடப்பட்ட வேண்டும். இந்தியாவில் இந்தி ஆதிக்க மொழியாக இருக்கிறது. இந்தியாவை வட இந்தியா, தென் இந்தியா என பிரித்துப் பார்க்கிறார்கள். தென் இந்தியர்களை விட, வட இந்தியர்கள் உயர்ந்தவர்கள் என்ற எண்ணம் அவர்களுக்கு உள்ளது. எனவே, இந்தியை எப்போதும் ஏற்க மாட்டோம். இந்தியாவில் தமிழ் தான் இணைப்பு மொழியாக இருக்க வேண்டும்.

இந்தியாவில் திராவிடர்களுக்கான முக்கியத்துவம் அதிகரிக்க வேண்டும். திராவிடர்களாக நாம் ஒன்று சேர்ந்து நிற்க வேண்டியது மிக முக்கியம் என நினைக்கிறேன். இளையராஜாவின் செயலுக்கு எதிர்வினை ஆற்றிய நபர்களின் மன நிலையை தான் முதலில் புரிந்து கொள்ள வேண்டும். அந்த வகையில் அதை எதிர்க்கிறோம், எனக் கூறினார்.

  • madhavan talks about ncert syllabus going controversial எங்க வரலாற்றை மறைக்கிறீங்க?- வம்பாக பேசி சர்ச்சையில் சிக்கிக்கொண்ட மாதவன்! ஏனப்பா இப்படி?