காங்கிரசுக்கு ஓட்டு கேட்க மாட்டேன்! திமுக கூட்டணி எம்எல்ஏ போட்ட குண்டு!

Author: Udayachandran RadhaKrishnan
8 February 2024, 9:12 pm
DMK
Quick Share

கடந்த நாடாளுமன்றத் தேர்தலில் திமுக கூட்டணியில் நாமக்கல் தொகுதியில் போட்டியிட்டு வெற்றி பெற்ற கொங்குநாடு மக்கள் தேசிய கட்சிக்கு எதிர்வரும் தேர்தலில் போட்டியிட வாய்ப்பு கிடைக்காது என்பது உறுதியாகத் தெரிகிறது. ஏனென்றால், தற்போதுவரை காங்கிரஸ், விசிக, மதிமுக, மார்க்சிஸ்ட், இந்திய கம்யூனிஸ்ட், முஸ்லிம் லீக் ஆகிய கட்சிகளுடன் மட்டுமே பேச்சு நடத்துவதற்கு திமுக ஒப்புக்கொண்டுள்ளது.

இவற்றில் விசிக, முஸ்லிம் லீக் தவிர மற்ற நான்கு கட்சிகளுடன் முதல் கட்ட தொகுதி பங்கீடு பேச்சு வார்த்தையை திமுக முடித்து விட்டது. எனினும் யார் யாருக்கு எத்தனை இடங்கள் என்பது பற்றி உறுதியான முடிவு எதுவும் எடுக்கப்படவில்லை.

இந்த இரு கட்சிகளுடனும் வரும் 12ம் தேதி பேச்சு நடத்த திமுகவின் தொகுதி பங்கீட்டு குழு அழைப்பு விடுத்துள்ளது. இது தவிர நடிகர் கமல்ஹாசனின் மக்கள் நீதி மய்யத்திற்கும் விரைவில் அழைப்பு விடுக்க படலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

இது ஒரு புறம் இருக்க, இந்த முறையும் திமுகவிடம் எப்படியாவது ஒரு எம்பி தொகுதியை கேட்டு பெற்று விடவேண்டும் என்பதற்காக ஈரோடு விஜயமங்கலத்தில் கொங்குநாடு மக்கள் தேசிய கட்சியின் தலைவர் ஈஸ்வரன் கடந்த 4ம் தேதி எழுச்சி மிக்கதொரு மாநாட்டையும் நடத்தி காட்டினார். அவருடைய கட்சிக்கு கொங்கு மண்டலத்தில் செல்வாக்கு இருக்கிறது என்பதைப் போல இந்த மாநாடு அமைந்திருந்தாலும், அதன் பிறகும் கூட திமுக தலைமை அவரைக் கண்டு கொண்ட மாதிரி தெரியவில்லை.

இந்த நிலையில்தான், திமுக கூட்டணியில் இடம் பிடித்துள்ள ஜவாஹிருல்லா எம்எல்ஏ தலைமையிலான மனிதநேய மக்கள் கட்சி திமுகவிடம் திடீரென்று தங்களுக்கும் ஒரு எம்பி சீட் வேண்டும் என்ற கோரிக்கையை முன் வைத்துள்ளது. இது தொடர்பாக சென்னையில் பிப்ரவரி 7ம் தேதி நடந்த அக்கட்சியின் பொதுக்குழு கூட்டத்தில் தீர்மானமும் நிறைவேற்றப்பட்டுள்ளது.

“மாநிலத்தில் உள்ள 39 நாடாளுமன்ற தொகுதிகளில் எந்த ஒன்றை திமுக தலைமை ஒதுக்கினாலும் அதில் நாங்கள் நிச்சயம் வெற்றி பெறுவோம். அதனால் குறிப்பிட்ட தொகுதிதான் வேண்டுமென்று கேட்க மாட்டோம்” என ஜவாஹிருல்லா தனது கட்சியின் நிலைப்பாட்டை கூறியிருக்கிறார்.

திமுக கூட்டணியில் மனிதநேய மக்கள் கட்சி 2021 தமிழக சட்டப்பேரவைத் தேர்தலில் பாபநாசம், மணப்பாறை என இரண்டு தொகுதிகளில் போட்டியிட்டு வெற்றி கண்டது. அதனால் தங்களது கட்சிக்கு மாநிலம் முழுவதும் வாக்கு வங்கி இருக்கிறது என்பதை நிரூபிப்பதற்காக அவர் இப்படி கேட்டிருக்க வாய்ப்புண்டு. ஆனால் இதற்கு முன்பு வரை, திமுகவிடம் இப்படியொரு கோரிக்கையை மனிதநேய மக்கள் கட்சி வைக்காத நிலையில் இப்போது மட்டும் ஏன் இதுபோல் கேட்கிறது என்னும் புதிரான கேள்வியும் அரசியல் வட்டாரத்தில் எழுந்துள்ளது.

அதேநேரம் தமிழக வாழ்வுரிமை கட்சியின் தலைவர் வேல்முருகன் எம்எல்ஏவோ திமுக தலைமை அதிர்ச்சி அடையும் விதமாக ஒரு குண்டைத் தூக்கி போட்டு இருக்கிறார். இரு தினங்களுக்கு முன்பு சென்னையில் செய்தியாளர்களை சந்தித்த அவர் “எனக்கு பல கட்சிகளிலும் நண்பர்கள் இருக்கிறார்கள். திமுகவிடம் இப்படி ஏன் ஒரு தொகுதிக்காக கெஞ்சி கொண்டிருக்கிறீர்கள், நாங்கள் தருகிறோம் வாருங்கள் என்று அதிமுக, பாஜக கட்சிகளிடமிருந்து எனக்கு அழைப்பு வருகிறது.

ஒரு சீட்டுக்காக ஒரு கூட்டணி இருந்து இன்னொரு கூட்டணிக்கு செல்லக்கூடாது என்று நான் கருதுகிறேன்” என்று கூறியவர் அத்துடன் நின்று கொண்டிருந்தால் பரவாயில்லை.

“எனக்கு காங்கிரஸ் கட்சியுடன் மாற்று கருத்து இருக்கிறது. எனவே இண்டியா கூட்டணியில் தமிழக வாழ்வுரிமைக் கட்சி, இடம்பெறவில்லை. நான் காங்கிரஸ் கட்சிக்கு ஆதரவாக எப்போதும் பிரச்சாரமே செய்ததில்லை. தவிர திமுகவுடன் மட்டுமே நான் கூட்டணி அமைத்திருக்கிறேன்” என்று அதிரடி காட்டியிருக்கிறார்.

எதிர்வரும் தேர்தலில் கடலூர் தொகுதியை காங்கிரசுக்கு ஒதுக்கிட திமுக திட்டமிட்டு இருப்பதாக கூறப்படும் நிலையில் கடலூர் மாவட்டத்தில் ஓரளவு செல்வாக்குள்ள தமிழக வாழ்வுரிமைக் கட்சியின் தலைவர் வேல்முருகன் இப்படி கூறியிருப்பது காங்கிரசை பலத்த அதிர்ச்சிக்கு உள்ளாக்கி இருக்கிறது.

ஏனென்றால் கடலூர், பண்ருட்டி, நெய்வேலி ஆகிய மூன்று சட்டப்பேரவை தொகுதிகளிலும் தமிழக வாழ்வுரிமைக் கட்சிக்கு ஓரளவு வாக்கு வங்கியும் உண்டு. அதனால் அந்தக் கட்சியினர் காங்கிரசுக்கு வாக்களிக்காவிட்டால் அக்கட்சியின் வேட்பாளருக்கு தோல்வி நிச்சயம் என்பதை யூகிக்க முடிகிறது.

“திமுக கூட்டணியில் அதிக சலசலப்பும், முணுமுணுப்பும் ஏற்பட்டிருப்பது, வெளிப்படையாகவே தெரிகிறது. இது நாடாளுமன்றத் தேர்தலில் திமுக கூட்டணிக்கு பாதிப்பை ஏற்படுத்தலாம்”என்று அரசியல் விமர்சகர்கள் கூறுகின்றனர்.

“தமிழக வாழ்வுரிமைக் கட்சி தலைவர் வேல்முருகனை பொறுத்தவரை எதிர்வரும் நாடாளுமன்றத் தேர்தலில் போட்டியிட ஆர்வம் காட்டவில்லை. அதில் அவருக்கு விருப்பம் இருப்பதாகவும் தெரியவில்லை.

ஆனால் 2026 தமிழக தேர்தலில் குறைந்தபட்சம் நான்கு தொகுதிகளை அவர் திமுகவிடம் கேட்பதற்கு வாய்ப்பு உண்டு. அதற்கு அடிப்போடுவதற்காகத்தான் அதிமுக, பாஜக கட்சிகள் என்னை அழைக்கின்றன. நான்தான் ஒரு எம்பி சீட்டுக்காக அணி மாறுவது தவறு என நினைக்கிறேன் என்று அவர் பந்தா காட்டுகிறார்.

மனிதநேய மக்கள் கட்சியை பொறுத்த வரை, திமுக தலைமை தங்களுக்கு மிகுந்த முன்னுரிமை அளிக்கவேண்டும் என்று நினைக்கிறது. இதற்கு முக்கிய காரணம் 2021 தமிழக தேர்தலில் திமுக கூட்டணியில் அக்கட்சிக்கு ஒதுக்கப்பட்ட இரண்டு தொகுதிகளிலும் அது வெற்றி பெற்றுவிட்டது. அதேநேரம் மிகவும் பழமையான இந்திய யூனியன் முஸ்லிம் லீக் கட்சிக்கு திமுக மூன்று தொகுதிகளை ஒதுக்கியும் அதில் ஒன்றில் கூட அக் கட்சி வெற்றி பெறவில்லை. இதை உதாரணமாக காண்பித்து ஒரு நாடாளுமன்றத் தொகுதியை திமுக தலைமையிடம், ஜவாஹிருல்லா கேட்டிருக்க வாய்ப்பும் உள்ளது.

இது முஸ்லிம் லீக் கட்சிக்கு கொடுப்பதைப் போல எங்களுக்கும் ஒரு சீட் தாருங்கள் என்று மறைமுகமாக கேட்பது போல்தான் இருக்கிறது.

அதேநேரம் அதிமுக கூட்டணியில் எஸ் டி பி ஐ கட்சிக்கு எம்பி சீட் நிச்சயம் ஒதுக்கப்படும் என்று எடப்பாடி பழனிசாமி அக்கட்சி மதுரையில் நடத்திய மாநாட்டில் கலந்துகொண்டு பேசும்போது வாக்குறுதி அளித்திருக்கிறார்.

நமக்குப் பின்னால் அரசியலுக்கு வந்தவர்கள் கூட ஒரு பிரதான அணியில் சேர்ந்து நாடாளுமன்றத் தேர்தலில் போட்டியிடுவதற்கு வாய்ப்பு கிடைக்கும் நிலையில், நமக்கு இதுவரை அப்படி எதுவும் நடக்கவில்லையே என்ற ஆதங்கத்தில் கூட திமுகவிடம் மனிதநேய மக்கள் கட்சி இப்படி ஒரு எம்பி சீட் கேட்டிருக்கலாம்.

கொங்குநாடு மக்கள் தேசிய கட்சி தலைவர் ஈஸ்வரனின் நிலைதான் பரிதாபமாக உள்ளது. 2019 தேர்தலில் திமுக அக் கட்சிக்கு மிகுந்த மரியாதை அளித்து எம்பி சீட் தந்தது. 2021 தமிழக தேர்தலில் போட்டியிடுவதற்கு வாய்ப்பும் வழங்கியது. ஆனால் இப்போது அவருடைய கட்சியை திமுக கண்டு கொண்டதாகவே தெரியவில்லை.

மனிதநேய மக்கள் கட்சியும், கொங்குநாடு மக்கள் தேசிய கட்சியும் காங்கிரஸுக்கு சாதகமாகவே நடந்து கொள்ளும் என்பது வெளிப்படையாக தெரிந்த விஷயம். ஆனால் இதில் திமுகவுக்கும், காங்கிரசுக்கும் இடையே மோதலை உருவாக்கி விடும் விதமாக தமிழக வாழ்வுரிமை கட்சியின் தலைவர் வேல்முருகன், எங்கள் கட்சி இண்டியா கூட்டணியில் இல்லை என்று கூறியிருப்பதுதான் திமுக கூட்டணியில் சலசலப்பை ஏற்படுத்தி இருக்கிறது. இதை காங்கிரஸ் பெரிய விஷயம் எடுத்துக் கொண்டதாக தெரியவில்லை. திமுகவுடன் தொகுதி பங்கீடு பேச்சு வார்த்தை சுமுகமாக முடிந்த பிறகு பார்த்துக் கொள்ளலாம் என்று தமிழக காங்கிரஸ் தலைவர் கே எஸ் அழகிரி நினைத்திருக்கலாம்.

இதில் வேடிக்கையான விஷயம் என்னவென்றால் கே. எஸ் அழகிரி கடலூர் மாவட்டத்தை சேர்ந்தவர் என்பதும், 2009 நாடாளுமன்றத் தேர்தலில் கடலூர் தொகுதியில் போட்டியிட்டு வெற்றி பெற்றவர் என்பதும் குறிப்பிடத்தக்கது. திமுக கூட்டணியில் எப்படியாவது கடலூரை கேட்டு வாங்கி, போட்டியிடலாம் என்று அவர் நினைக்கும் நேரத்தில் அதற்கு ஆப்பு வைப்பது போல வேல்முருகன் பேசி இருப்பது தமிழக காங்கிரசுக்கு பெருத்த தலைவலியை கொடுத்திருக்கிறது” என்று அந்த அரசியல் விமர்சகர்கள் கூறுகின்றனர்.

அரசியலில் இப்படி எல்லாம் கூட வில்லங்கம் வருமா? என்பதுதான் ஆச்சரியமாக இருக்கிறது!

Views: - 222

1

0