உணவு பொருட்கள் மீது ஜிஎஸ்டி விதித்தது மத்திய அரசு அல்ல : பாஜக எம்எல்ஏ வானதி சீனிவாசன் விளக்கம்!!

Author: Udayachandran RadhaKrishnan
14 August 2022, 4:04 pm
Vanathi - Updatenews360
Quick Share

கோத்தகிரியில் நாட்டின் 75 வது சுதந்திர தின விழாவையொட்டி பாஜக மற்றும் மகளிர் அணி சார்பில் 200 மீட்டர் நீளமுள்ள தேசியக் கொடியை ஏந்தியவாறு வந்தே மாதர பேரணி நடைபெற்றது.

பேரணியை தேசிய மகளிர் அணி தலைவியும், எம்.எல்.ஏ வுமான வானதி சீனிவாசன் துவக்கி வைத்தார்.

அதன் பின்னர் எம்.எல்.ஏ வானதி சீனிவாசன் நிருபர்களுக்கு அளித்த பேட்டியின் போது கூறியதாவது, பாரத பிரதமர் மோடி 75-வது சுதந்திர தினத்தை சிறப்பாக கொண்டாடும் வகையில் வீடு தோறும் கொடியேற்ற வேண்டும் என்ற கோரிக்கையை ஏற்று அனைத்து பகுதிகளிலும் உள்ள பொதுமக்கள் தேசியக்கொடியை ஏற்றி கொண்டாடி மகிழ்ந்து வருகின்றனர்.
சுதந்திரப் போராட்டத்தில் ஏராளமான தமிழக சுதந்திரப் போராட்ட வீரர்கள் தங்களை அர்ப்பணித்துள்ளனர். சுதந்திர தினம் என்பது ஜாதி, மத பாகுபாடு இல்லாத கட்சி சார்பற்ற நிகழ்வு ஆகும். அனைத்து கட்சி தலைவர்களும் தங்களது வீடுகளில் தேசியக்கொடி ஏற்றியுள்ளதுடன், பொதுமக்கள் அனைவரும் தங்கள் வீடுகள், கடைகளில் கொடியேற்றி உள்ளதால் தேசம் கொண்டாடும் திருவிழாவாக சுதந்திர தினம் மாறி உள்ளது.

ஒரே நாடு, ஒரே தேர்தல் என்பது தேர்தல் ஆணையத்தின் சீர்திருத்த நடவடிக்கையாகும். அனைத்து அரசியல் கட்சிகளும் இதில் கருத்துகள் தெரிவித்து ஒருமித்த கருத்தை உருவாக்க பாஜக முயற்சி செய்து வருகிறது.
மிக மோசமான நிலையில் உள்ள நலிவடைந்த பொதுத்துறை நிறுவனங்களின் பங்குகளை பொது சந்தையில் விற்று அதன் மூலமாக நல்ல முறையில் நடத்த முடியுமா? என முயற்சி செய்கிறோம்.

பொதுத்துறை நிறுவனங்கள் நஷ்டத்தில் செல்லும்போது மக்களின் வரிப்பணம் வீணாகிறது. எனவே பொதுத்துறை நிறுவனங்களில் தனித்தன்மையை மாற்றாமல் தொடர்ந்து மக்களுக்கு அளிக்கும் சேவையை வழங்க இவ்வித நடவடிக்கைகள் எடுக்கப்படுகிறது.

உணவுப் பொருட்களுக்கு மீதான ஜிஎஸ்டி வரி விதிப்பு என்பது மத்திய அரசின் முடிவு இல்லை. அது ஜிஎஸ்டி கவுன்சில் எடுக்கும் முடிவாகும். மாநில அரசும் ஒத்துக்கொண்டால் மட்டுமே ஜி.எஸ்.டி யில் மாற்றங்கள் கொண்டுவர முடியும். இவ்வாறு அவர் தெரிவித்தார்.

Views: - 467

0

0