தமிழகத்தில் நடைபெறுவது ஆட்சியா? காட்சியா? விடியா அரசு ஆட்சிக்கு வந்தது முதல் சட்டம் ஒழுங்கு அழிந்துள்ளது : இபிஎஸ் காட்டம்!!

Author: Udayachandran RadhaKrishnan
14 August 2022, 1:14 pm
Eps Condemned - Updatenews360
Quick Share

அ.தி.மு.க. இடைக்கால பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது: வெளி மாநிலங்களில் இருந்து கொள்ளையர்கள் சர்வ சாதாரணமாக சென்னை மற்றும் முக்கிய நகரங்களுக்கு வந்து கொள்ளை அடித்துவிட்டு தப்பிச் செல்கின்றனர் என்று, ஏற்கெனவே நான் எனது அறிக்கையில் தெளிவாகக் குறிப்பிட்டு, குற்றவாளிகளை இரும்புக் கரம் கொண்டு அடக்க வேண்டும் என்று வலியுறுத்தி இருந்தேன்.

இந்த விடியா திமுக அரசு பதவியேற்பதில் இருந்தே தமிழகத்தில் சட்டம்-ஒழுங்கு அழிந்துள்ளது என்று நான் பலமுறை சட்டமன்றத்திலும் அறிக்கைகள் மற்றும் பேட்டிகள் வாயிலாகவும் தொடர்ந்து கூறி வந்தேன்.
மேலும், காவல்துறையை சுதந்திரமாக செயல்பட அனுமதிக்கவேண்டும் என்றும் தொடர்ந்து முதல்-அமைச்சரை வலியுறுத்தி வந்தேன். ஆனால் தொடர்ந்து காவல் துறையை சட்டப்படி நடக்க அனுமதிக்காமல், தங்களின் ஏவல் துறையாகவே பயன்படுத்தி வருகிறது.

இந்த நிலையில் நேற்று பகல் 2.30 மணி அளவில் 3 பேர் கொண்ட கும்பல், சென்னையில் மக்கள் நடமாட்டம் அதிகம் இருக்கும் அரும்பாக்கம், ரசாக் கார்டன் சாலையில் உள்ள ஒரு தனியார் வங்கியின் உள்ளே நுழைந்து, காவலாளிக்கு மயக்க மருந்து கொடுத்து, ஊழியர்களை கத்தியைக் காட்டி மிரட்டி கட்டிப் போட்டுவிட்டு வங்கியில் இருந்த லாக்கரை உடைத்து அதில் இருந்த சுமார் 20 கோடி ரூபாய் மதிப்பிலான தங்க நகைகளை கொள்ளையடித்துவிட்டுத் தப்பிச் சென்ற செய்தி தமிழக மக்களை மிகுந்த அதிர்ச்சிக்கு உள்ளாக்கி இருக்கிறது.

கடந்த 14 மாத கால ஆட்சியில் ஆளும் கட்சியினர், சமூக விரோதிகள், ஒருசில காவல் துறையினர் கூட்டு சேர்ந்து பல்வேறு சமூக விரோத செயல்களில் ஈடுபட்டு வருவதாக சமூக வலைதளங்களில் செய்திகள் வருகின்றன.

தி.மு.க. அரசின் காவல் துறையில் இதயம், ஈரல் முதல் அனைத்து பாகங்களும் செயலற்றுக் கிடக்கிறது. இந்தியாவிலேயே சிறந்த முதலமைச்சர் என்று விளம்பரங்கள் மூலம் தன்னைத்தானே மார்தட்டிக் கொள்ளும், நிர்வாகத் திறமை இல்லாத முதல்-அமைச்சர் தலைமையிலான ஆட்சியில், சென்னை மாநகரில், பட்டப் பகலில் நடைபெற்ற இந்த கொள்ளைச் சம்பவத்தில் ஈடுபட்ட உண்மையான சூத்திரதாரிகளையும், உண்மையான கொள்ளையர்களையும் காவல் துறை கண்டுபிடிக்கும் என்ற நம்பிக்கை அற்றுப் போய்விட்டது.

எனவே, இனியாவது முதலமைச்சர் , தமிழகக் காவல் துறையினை சுதந்திரமாக, சட்டப்படி செயல்பட அனுமதித்து, தமிழகத்தில் சட்டம்-ஒழுங்கைக் காப்பாற்ற வேண்டும். இவ்வாறு அந்த அறிக்கையில் அவர் கூறியுள்ளார்.

Views: - 444

0

0