அதிமுகவும் இல்ல… பாஜகவும் இல்ல… திமுக கூட்டணிக்கு தாவ காய் நகர்த்துகிறாரா ஜான் பாண்டியன்..? அவரே சொன்ன சூசகத் தகவல்….!!

Author: Babu Lakshmanan
16 November 2023, 12:47 pm

தமிழக மக்கள் முன்னேற்றக் கழகம் தேசிய ஜனநாயக கூட்டணியில் இல்லை என்றும், அதிமுக கூட்டணியிலும் இல்லை என்று அக்கட்சியின் தலைவர் ஜான் பாண்டியன் தெரிவித்துள்ளார்.

தமிழக மக்கள் முன்னேற்ற கழகத்தின் செயற்குழு கூட்டம் திருநெல்வேலி உள்ள தென் தலைமை அலுவலகத்தில் நடைபெற்றது. கட்சியின் தலைவர் ஜான்பாண்டியன் தலைமையில் நடைபெற்ற கூட்டத்திற்கு பிறகு அவர் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறியதாவது:- தென் மாவட்டங்களில் நடைபெறும் கொலைகள், ஜாதிய கொலைகள் அல்ல. இரு வேறு சமுதாயத்திற்கு இடையே நேரடி பகைமை இல்லை, கஞ்சா உள்ளிட்ட போதை வஸ்துகள் காரணமாகவே கொலை சம்பவங்கள் நடைபெறுகிறது.

பட்டியலினத்திலிருந்து வெளியேற வேண்டும் என நாங்கள் விரும்புகிறோம். அதை தடுக்கும் வகையில் இது போன்ற கொலை சம்பவங்கள் நடக்கிறதா..? என்ற சந்தேகம் எழுகிறது. இதுகுறித்து அரசு முறையான விசாரணை நடத்த வேண்டும். பிசிஆர் என்பது கண் துடைப்பு இதுவரை அதை வைத்து எந்த தண்டனையும் வழங்கப்படவில்லை.

பாராளுமன்றத் தேர்தலில் கூட்டணி குறித்து தேர்தல் நேரத்தில் முடிவு செய்வோம். தேசிய ஜனநாயக கூட்டணியில் இருந்து அதிமுக வெளியேறிவிட்டது. அதன் காரணமாக நாங்கள் தற்போது எந்த கூட்டணியிலும் இல்லை. அதிமுகவும், பாரதிய ஜனதா கட்சியும் கூட்டணி அமைந்தால் மகிழ்ச்சி. அவர்கள் ஒருவரை ஒருவர் விமர்சிக்கவில்லை, என்றார்.

திராவிட முன்னேற்றக் கழக கூட்டணிக்கு நீங்கள் செல்ல வாய்ப்பு இல்லையே என எழுப்பப்பட்ட கேள்விக்கு, அரசியலில் எதுவும் நடக்கலாம். நாங்கள் திமுக கூட்டணியில் சேர மாட்டோம் என யார் சொன்னது? என ஜான் பாண்டியன் பதில் அளித்தார்.

நீட் தேர்வை வைத்து திமுக நாடகமாடுகிறது. மக்களை ஏமாற்றி வருகிறது. நீட் தேர்வு நீதிமன்ற உத்தரவு படி நடத்தப்படுகிறது. அதனை நிறுத்துவதற்கான வாய்ப்பு இல்லை. மதுபானத்தை அரசு நினைத்தால் ஒழித்து விடலாம்.

தமிழகத்தில் சட்டம் ஒழுங்கு சீர்குலைந்து போய் உள்ளது. எங்கு பார்த்தாலும் கொலை சம்பவங்கள் நடைபெறுகிறது . காவிரி டெல்டா மாவட்டங்களில் விவசாயிகள் வறுமை நிலைக்கும் கீழ் சென்றுள்ளனர். அவர்களுக்கு உரிய இழப்பீட்டை அரசு வழங்க வேண்டும் என்று தெரிவித்தார்.

  • tourist family negative review from valaipechu team படம் வர்ரதுக்கு முன்னாடியே நெகட்டிவ் விமர்சனம்; டூரிஸ்ட் ஃபேமிலி குறித்து வாய்விட்ட பிரபலம்!