தேர்தல் பத்திரம் ஊழலை மறைக்கவே கச்சத்தீவு பிரச்சினை… பாஜக மீது கி.வீரமணி குற்றச்சாட்டு..!!

Author: Babu Lakshmanan
5 April 2024, 11:28 am
Quick Share

தேர்தல் பத்திரம் ஊழலை மறைக்கவே கச்சத்தீவு பிரச்சினையை பாஜக அரசு கிளறுவதாக திராவிட கழக தலைவர் கி வீரமணி குற்றம்சாட்டியுள்ளார்.

மதுரையில் தி.மு.க. கூட்டணி சார்பில் போட்டியிடும் கம்யூனிஸ்டு கட்சி வேட்பாளர் சு.வெங்கடேசனை ஆதரித்து திராவிட கழகத்தின் தலைவர் கி வீரமணி பிரச்சாரம் மேற்கொண்டார்.

மேலும் படிக்க: பிரபல நடிகர் பாஜகவில் ஐக்கியம்? காட்டுத்தீ போல பரவிய தகவல் : ஒரே வார்த்தையில் அவரே போட்ட X பதிவு!

அதில் அவர் பேசியதாவது :- இதுவரை இந்தியாவில் 18  பொதுத் தேர்தல் நடந்திருக்கின்றன. 19 தேர்தல்களை நான் பார்த்துள்ளேன். மிக மிக முக்கியமான தேர்தல் இது. அறிவிக்கப்படும் நெருக்கடி ஆட்சி மிசா காலத்தில் நடந்தது. மோடி ஆட்சி தற்போது அறிவிக்கப்படாத நெருக்கடி ஆட்சி. உச்சநீதிமன்றம் தான் மக்களின் கடைசி நம்பிக்கை, தேர்தலில் தனி மனித அதிகாரம் இருக்கக் கூடாது.

அதிகார ஆணவம், அதிகார அடக்கு முறை அதுதான் மோடி அரசாங்கம். தேரதல் தேதி அறிவிக்கும் முன்னே நாங்கள் 400  தொகுதிகளில் வெற்றி பெறுவோம் என்று மோடி சொல்கிறார். மோடியின் திரிசூல வியூகம் சி.பி.ஐ, வருமானவரித்துறை, அமலாக்கத்துறை. அதை நம்பி இந்த தேர்தலை பாஜக அரசு சந்திக்க இருக்கிறது. 140 கோடி மக்களின் பிரதமராக இருக்கும் மோடி, மணிப்பூர் கலவரம் பற்றி வாய் திறக்கவில்லை.

ஆர்எஸ்எஸ் காரர்களால் மணிப்பூரில் பெண்கள் நிர்வாணப்படுத்தப்பட்டார்கள். அப்போது அமைதியாக இருந்தார் மோடி. தமிழ் மொழி தான் உயர்ந்தது என்று நிரூபித்தாலும், அவர்களுக்கு பிடித்த சமஸ்கிருதத்தையே நிலைநாட்ட துடிக்கிறார். தூத்துக்குடி, திருநெல்வேலியில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்ட போது மோடி வரவில்லை. வராவிட்டாலும் பரவாயில்லை, மக்களுக்கு ஒரு ஆறுதல் கூட சொல்லவில்லை.

140 கோடி எனது குடும்பம் என்று கூறும் மோடி, திருநெல்வேலி, தூத்துக்குடி வெள்ளத்தில் பாதிக்கப்பட்ட நமது தமிழக மக்களுக்கு பேரிடர் காலத்தில் நிதி வழங்கவில்லை என்றாலும் கூட பரவாயில்லை, ஆனால் ஆறுதல் கூட சொல்லவில்லை.

மேலும் படிக்க: ஆதிதிராவிடர் நலவிடுதியின் மேற்கூரை இடிந்து விழுந்து விபத்து ; 5 பள்ளி மாணவிகள் படுகாயம்…!!!

இது  பெரியார் மண். வாடிய பயிரை கண்ட போதெல்லாம் வாடினேன்  என்று வள்ளலார் வாழ்ந்த மண். இந்தியா கூட்டணி பதவிக்கான கூட்டணியல்ல. மக்களின் உதவிக்கான கொள்கை கூட்டணி. கடந்த 10 ஆண்டுகளில், மாற்றம் கிடைக்கும் என நம்பிய மக்களுக்கு, மோடி ஆட்சியில் ஏமாற்றம் மட்டுமே கிடைத்துள்ளது.

ஊழலுக்கு பிரிபெய்டு ஊழல், போஸ்ட் பெய்டு ஊழல் என்றுள்ளது. தேர்தல் பத்திரம் ஊழலை  மறைப்பதற்குத்தான் கச்சத்தீவு பிரச்சினையை எழுப்புகின்றனர்.  மீண்டும் மோடி வருவாரானால் மீண்டும் ஜனநாயகம் பிழைக்காது. மக்கள் இந்தியா கூட்டணியை வெற்றி பெறச் செய்ய வேண்டும் அப்போதுதான் ஜனநாயகம் வெல்லும், எனக் கூறினார்.

Views: - 102

0

0