பள்ளியின் மீது சந்தேகம் இருக்கு… விசாரணையை நடத்த விடாமல் அழுத்தம் தராங்க : கள்ளக்குறிச்சி மாணவியின் தாயார் பரபர குற்றச்சாட்டு..!!

Author: Babu Lakshmanan
27 August 2022, 1:08 pm
Quick Share

கள்ளக்குறிச்சி மாணவி உயிரிழந்த விவகாரத்தில் உரிய நீதி விசாரணை நடத்தி உண்மையை முதலமைச்சர் வெளி கொண்டு வருவார் என்ற முழு நம்பிக்கை உள்ளது என மாணவியின் தாயார் செல்வி தெரிவித்துள்ளார்.

சென்னை தலைமை செயலகத்தில் முதலமைச்சர் ஸ்டாலினை சந்தித்த மாணவியின் பெற்றோர், இந்த விவகாரத்தில் உரிய விசாரணை நடத்தப்பட வேண்டும் என்றும், குறுகிய காலத்தில் விசாரணை நடத்தி முடிக்கப்பட்டு, குற்றவாளிகள் தப்பிக்கப்படாமல் தண்டனை பெற்று தர வேண்டும், என கோரிக்கை விடுத்தனர்.

பின்னர் செய்தியாளர்களை சந்தித்த மாணவியின் தாயார் கூறியதாவது :- வழக்கு குறுகிய காலத்தில் விசாரிக்கப்பட்டு குற்றவாளிகள் யாரும் தப்பிக்க விடப்படாமல் உரிய நீதி விசாரணை நடத்தப்பட வேண்டும் என முதலமைச்சர் இடம் கோரிக்கை வைத்துள்ளேன். தனியார் பள்ளி நிர்வாகிகள் ஜாமினில் வெளிவந்துள்ளனர். அவர்களுக்கு உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்து ஜாமீன் ரத்து செய்ய வேண்டும் எனவும் கோரிக்கை வைத்துள்ளோம்.

குற்றவாளிகள் யாராக இருந்தாலும் நிச்சயமாக தப்பிக்க விடாமல் உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என முதலமைச்சர் நம்பிக்கை தெரிவித்துள்ளார். மகளின் உடற்கூறாய்வு பரிசோதனை நடைபெற்ற ஆவணம் மட்டுமே வழங்கப்பட்டது. ஆனால் வீடியோ ஆதாரங்கள் இதுவரை எங்களிடம் வழங்கப்படவில்லை.

ஜிப்மர் மருத்துவமனையின் அறிக்கைகள் விவகாரம் தொடர்பாக எந்த ஆவணம் எங்களிடம் வழங்கப்படவில்லை. மகளின் உடற்கூறாய்வு செய்யப்பட்ட விவகாரத்தில் எங்களுக்கு முழு திருப்தி இல்லை. நாங்கள் கேட்ட மருத்துவர்கள் வைத்து உடற்கூறு ஆய்வு செய்து இருந்தால், நாங்கள் திருப்தி அடைந்து இருப்போம்.

பள்ளி நிர்வாகம் சிசிடிவி காட்சியை பெற்றோர் ஆகிய எங்களை அழைத்து ஏன் காட்டவில்லை. அதனால் தான் எங்களுக்கு இதுவரையில் சந்தேகம் தொடர்கிறது. பள்ளி நிர்வாகம் அனைத்து தரப்பினருக்கும் அழுத்தம் கொடுத்து விசாரணையை நடத்தி விடாமல் செய்கின்றனர்.

மகளின் விவகாரத்தில் முதலமைச்சர் உண்மையை வெளிக்கொண்டு வந்து நீதி நிலை நாட்டுவார் என்ற முழு நம்பிக்கை எங்களுக்கு உள்ளது. பள்ளி நிர்வாகிகள் தற்காலிகமாக தான் ஜாமினில் வெளிவந்துள்ளனர் நிச்சயம் அவர்களுக்கு உரிய தண்டனை கிடைக்கும்.

மகளின் மரணம் குறித்த விசாரணையை இன்னும் துரிதப்படுத்த வேண்டும் என முதலமைச்சர் இடம் கோரிக்கை வைத்துள்ளோம். மகளின் தோழிகள் என பள்ளி மாணவிகள் சிலர் ஆஜராகி இருப்பதாக கூறப்படுகிறது. அவர்கள் உண்மையில் எங்களின் மகளுடைய தோழிகள் தானா என்பது எனக்கு தெரியவில்லை. அவர்கள் யார் என்ற பெயர் பட்டியல் வெளியில் வந்தால் தான், அவர்கள் உண்மையிலேயே அவர்கள் தோழிகளா என்பதை நான் சொல்ல முடியும்.

பள்ளி அடித்து நொறுக்கப்பட்ட விவகாரத்தில் சில அப்பாவி பள்ளி மாணவர்களும் கைது செய்யப்பட்டு வருகிறார்கள். அவர்கள் உடனடியாக விரைந்து விடுவிக்கப்பட வேண்டும், எனக் கூறினர்.

Views: - 367

0

0