இப்ப அறிவித்த திட்டங்களாவது செயலாகுமா..? இல்ல வழக்கம் போல சொல் மட்டும்தானா…? தமிழக பட்ஜெட் குறித்து கமல் கருத்து..!!

Author: Babu Lakshmanan
19 March 2022, 12:32 pm
Quick Share

சென்னை : தமிழக அரசின் நிதிநிலை அறிக்கை குறித்து மக்கள் நீதி மய்யத்தின் தலைவர் கமல்ஹாசன் கருத்து தெரிவித்துள்ளார்.

2022-23ம் ஆண்டுக்கான பட்ஜெட்டை நிதியமைச்சர் பழனிவேல் தியாகராஜன் சட்டப்பேரவையில் நேற்று தாக்கல் செய்தார். அதில் முக்கிய அறிவிப்புகள் இடம்பெற்றிருந்தன. அதாவது, தனியார் பள்ளிகளில் தமிழ் வழியில் பயிலும் 1 முதல் 10ம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு இலவச பாட புத்தகங்கள் வழங்கப்படும். சென்னையில் மழை, வெள்ளத் தடுப்பு பணிக்கு ரூ.500 கோடி ஒதுக்கிடு செய்யப்பட்டுள்ளது. பேரிடர் மேலாண்மைத்துறை ரூ.7,400 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டது. காவல்துறைக்கு ரூ.10,285 கோடி ஒதுக்கீடு செய்யப்படும்.

இல்லம் தேடி கல்வி திட்டத்திற்கு ரூ.200 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்படும். கல்வியில் பின்தங்கிய மாவட்டங்களில் முன்மாதி பள்ளிகள் அமைக்க ரூ.125 கோடி ஒதுக்கீடு. பள்ளிக்கல்வித்துறைக்கு வரும் நிதியாண்டில் ரூ.36 ஆயிரம் கோடி ஒதுக்கீடு. அரசு பள்ளி மாணவிகள், உயர்கல்வி பயில்வதற்கு மாதந்தோறும் ரூ.1,000 உதவித் தொகை வழங்கப்படும். பிற்படுத்தப்பட்ட, மிகவும் பிற்படுத்தப்பட்ட மாணவர்களின் உயர்கல்விக்கு ரூ.320 கோடி ஒதுக்கீடு. 1000 ஆண்டுகளுக்கு முற்பட்ட திருக்கோவில்களை புனரமைக்க ரூ.100 கோடி ஒதுக்கீடு உள்ளிட்ட பல்வேறு அறிவிப்புகள் இடம்பெற்றிருந்தன.

தமிழக அரசின் இந்த பட்ஜெட்டிற்கு பல்வேறு தரப்பினர் வரவேற்பும், விமர்சனங்களையும் முன்வைத்து வருகின்றனர். அதேவேளையில், மகளிருக்கான ரூ.1000 உரிமைத் தொகை உள்பட பல்வேறு தேர்தல் வாக்குறுதிகள் இடம்பெறாததற்கு எதிர்கட்சிகள் கேள்விகளை எழுப்பி வருகின்றனர்.

இந்த நிலையில், தமிழக பட்ஜெட் குறித்து மக்கள் நீதி மய்யம் தலைவர் கமல்ஹாசன் கருத்து தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள டுவிட்டரில் பதிவில் கூறியிருப்பதாவது :- ஆறுதலும் ஏமாற்றமும் கலந்ததாக அமைந்துள்ளது தமிழக பட்ஜெட். அரசுப் பள்ளி மாணவிகள் உயர்கல்வி பெறப் பண உதவி, பெரியார் சிந்தனைகளை மொழிபெயர்க்க நிதி, மாநிலம் முழுதும் நூல்களுக்கான திட்டம் போன்றவை நம்பிக்கை தருகின்றன.

அதே நேரத்தில் அழுத்தம் திருத்தமாக அளிக்கப்பட்ட வாக்குறுதி ஒன்றைப் பற்றிய பேச்சே இல்லை. குடும்பத் தலைவிகளுக்கு உதவித் தொகை வழங்குவதாகச் சொன்னதுதான் அது. மய்யத்தின் செயல் திட்டம், மாற்றுக்கட்சியின் வாக்குறுதியாக வந்தபோது வரவேற்றோம். அது வெறும்சொல்லாகப் போனதே ஆதங்கம்.

எரிவாயு விலையைக் குறைக்கும் அறிவிப்பிருக்குமென எதிர்பார்த்ததிலும் ஏமாற்றம். இப்போது தரப்பட்டிருக்கும் திட்டங்களேனும் நடைமுறைக்கு வருமா என்று சாமானிய மக்கள் சந்தேகம் கொண்டால் அது நியாயம்தானே? சொல் அல்ல, செயல் என்று காட்டும் அரசே மக்கள் நம்பிக்கையைப் பெறும், என தெரிவித்துள்ளார்.

Views: - 806

0

0