லட்சக்கணக்கான மக்கள் முன் பேசிய புடின்: திடீரென நேரலையை நிறுத்திய ரஷ்ய தொலைக்காட்சி…அப்படி என்ன பேசினார் தெரியுமா?

Author: Rajesh
19 March 2022, 1:08 pm
Quick Share

மாஸ்கோ: ரஷ்ய அதிபர் புதின் லட்சக்கணக்கான மக்கள் முன் உரையாற்றிக் கொண்டிருக்கும் போது ரஷ்ய தொலைக்காட்சி நேரடி ஒளிபரப்பை திடீரென நிறுத்தியதால் பரபரப்பு ஏற்பட்டது.

உக்ரைன் மீது ரஷ்ய படைகள் 24 நாட்களாக தீவிர தாக்குதல் நடத்தி வருகிறது. இந்நிலையில், ரஷ்யா கடந்த 2014ம் ஆண்டு கிரிமியாவை தனது நாட்டுடன் இணைத்தது மற்றும் உக்ரைனில் ரஷ்ய ராணுவம் மேற்கொண்டு வரும் நடவடிக்கை ஆகியவற்றுக்கு ஆதரவாக ரஷ்ய அதிபர் புதின் நாட்டு மக்கள் முன் உரையாற்றினார்.

அந்நாட்டின் தலைநகர் மாஸ்கோவில் நடைபெற்ற பிரமாண்ட பொதுக்கூட்டம் ஒன்றில் அவர் கலந்து கொண்டார். லுஸ்னிகி மைதானத்தில் நடந்த இந்த பொதுக்கூட்டத்தில், மைதானத்துக்கு உள்ளேயும், வெளியேயும் 2 லட்சத்துக்கு மேற்பட்டோர் திரண்டிருந்தனர். மேலும், சில கலை நிகழ்ச்சிகளும் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.

அத்துடன் இசை நிகழ்ச்சியும் நடந்தது. பிரபல பாடகர் ஒலெக் காஸ்மனோவ் பங்கேற்று பாடினார். இதில் கலந்து கொண்ட புதினை, உக்ரைனில் காணப்படும் நாசிசத்துக்கு எதிராக புதின் போராடுகிறார் என்று பலரும் பாராட்டி பேசினர். லட்சக்கணக்கான ஆதரவாளர்கள் முன் புதின் உரையாற்றிய நிகழ்ச்சியை ரஷ்ய நாட்டின் தொலைக்காட்சி ஒளிபரப்பு செய்தது.

இந்நிலையில், அவர் பேசியபோது, திடீரென இடையூறு ஏற்பட்டது. இதனை தொடர்ந்து, அந்நாட்டின் நாட்டுப்பற்றுக்கான இசை ஒலிக்கப்பட்டது. ரஷ்ய நாட்டு தொலைக்காட்சி மிக தீவிர கட்டுப்பாட்டுடன் செயல்படுவது வழக்கம். இதுபோன்ற இடையூறுகள் ஏற்படுவது அரிது. எனினும், செர்வரில் ஏற்பட்ட தொழில்நுட்ப கோளாறால் ஒளிபரப்பில் தடங்கலானது என கிரெம்ளின் மாளிகை விளக்கம் அளித்துள்ளது.

இதன்பின்பு 10 நிமிடங்கள் கழித்து, தொடக்கம் முதல் மேடையில் இருந்து புதின் செல்லும் இறுதி வரையிலான அவரது பேச்சு தொலைக்காட்சியில் ஒளிபரப்பப்பட்டது. இருப்பினும், நேரலை திடீரென நிறுத்தப்பட்டதால் சற்று நேரம் பரபரப்பு ஏற்பட்டது.

Views: - 1356

0

0