சுடுதண்ணீரை ஊற்றி சித்ரவதை… அரசு மருத்துவமனையில் முதியவர் பட்டபாடு : கொதிக்கும் சமூக ஆர்வலர்கள்..!!

Author: Babu Lakshmanan
31 January 2022, 11:33 am
Quick Share

கரூர் : கரூரில் உள்ள அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சையில் உள்ள உள்நோயாளியான முதியவர் ஒருவருக்கு அந்த மருத்துவமனையின் ஒப்பந்த பணியாளர் ஒருவர் குளிக்க சுடுநீரை அதிக சூடாக ஊற்றிய வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

கரூர் மாநகராட்சிக்கு உட்பட்ட காந்திகிராமத்தில் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைஒன்று தமிழக அளவில் சிறப்பாக செயல்பட்டு வருகிறது. இந்த கல்லூரி மருத்துவமனையானது 7 தளங்களை கொண்டதும், பல்வேறு நோய்களுக்கு என்று தனித்தனியாக பல வார்டுகள் உள்ளன. இந்த நிலையில், நேற்று காலை 9.30 மணியளவில் 3 வது தளத்தில் உள்ள எம்.எம். வார்டு ஆண்கள் பிரிவில் சிகிச்சையில் இருந்த முதியவரை அங்கு பணியாற்றும் ஒப்பந்த ஊழியர் ஒருவர் சக்கர நாற்காலியில் அருகில் உள்ள கழிவறைக்கு அழைத்துச் சென்றுள்ளார். அங்கு குளியலறையில் குளிப்பாட்டுவதற்கு பதில் சிறுநீர் கழிக்கும் இடத்திலேயே அந்த முதியவரை குளிப்பாட்டியுள்ளார்.

அதுமட்டுமில்லாமல், ஆடு, மாடுகளை போல் நினைத்து ஒரு மனிதர் என்ற நினைப்பு கூட இல்லாமல், அவரை வா, போ என்றும், முதியவர் என்று பார்க்காமல் ஒருமையிலேயே பேசி சிறுநீர் கழிக்குமிடத்தின் அருகிலேயே, அந்த முதியவரை அமரவைத்து அதிக அளவில் சூடுபடுத்தப்பட்ட நீரினை ஊற்றியுள்ளார். இதனால், சூடு தாங்காமல், சிறுநீர் கழிக்கும் பேசன் மீது, தடுமாறி விழுந்து அடுத்தடுத்து கீழே விழுந்துள்ளார்.

இந்நிலையில், அடுத்து மீண்டும் அதே சிறுநீர் கழிக்கும் இடத்தில் உட்கார வைத்து, மீண்டும் அதே செயலை செய்ய அந்த முதியவர் சூடு தாங்க முடியால் கத்தியுள்ளார். இதனை யாரோ சமூக நல ஆர்வலர்கள் இன்ஸ்டாகிராம் மற்றும் டிவிட்டர் பக்கத்தில் பதிவு செய்து வெளியிட்டுள்ளனர். இதனையடுத்து கரூர் மாவட்ட ஆட்சியர் பிரபுசங்கரின் தனிப்பட்ட கணக்கிற்கு #டேக் செய்து அனுப்பிய அந்த நபருக்கு, கரூர் மாவட்ட ஆட்சியர், அவரது முகத்தினை மறைத்து, அவர் நல்லபடியாக உள்ளார். அவர் ஒரு மனநலம் பாதிக்கப்பட்டவர் என்றும், அவர் மேல் ஊற்றியது குளிர்ந்தநீர் என்றும் கூறி பதிலளித்துள்ளார்.

மேலும், பக்கவாதம் மற்றும் மனநோய் சிகிச்சை பெற்று வருகின்றார் என்று கூறிய மாவட்ட ஆட்சியர் பிரபுசங்கரும் ஒரு மருத்துவரே. பக்கவாதம் பாதிக்கப்பட்டவர்கள் யாராக இருந்தாலும் குளிர்ந்த நீராக இருந்தால், அவர் நடுங்கியிருப்பாரே தவிர, அலறியிருக்க மாட்டார்கள். சுடு தண்ணீர் என்பதால்தான் வழி தாங்க முடியாமல், அந்த முதியவர் அலறியுள்ளார். அதுமட்டுமில்லாமல் எந்த நோயாளியாக இருந்தாலும், சிறுநீர் கழிக்குமிடத்திலா ? குளிப்பாட்டுவார்கள் என்கின்றனர் சமூக நல ஆர்வலர்கள்.

இதுமட்டுமில்லாமல், அந்த வீடியோ காட்சிகளில் எந்த துன்புறுத்தலும் இல்லை என்றும், வீடியோ காட்சிகள் திரிக்கப்பட்டுள்ளதாக டிவிட் செய்துள்ளதாக தெரிவிக்கும் மாவட்ட ஆட்சியருக்கு பல்வேறு விமர்சனங்கள் எழுந்து வருகின்றது.

கரூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் ஒப்பந்த பணியாளர்களுக்கு 50 ரூபாய் லஞ்சம் கொடுத்தால் மட்டுமே கனிவாக நடந்து கொள்வதாகவும், இல்லை என்றால் இது போன்று கடினமாக நடந்து கொள்வதாகவும், இவற்றை வெளியில் சொன்னால் சிகிச்சையில் உள்ள நோயாளிகளுக்கு பல பிரச்சினைகள் வரும் என்பதால் பலரும் சொல்வதில்லை என்கின்றார் அங்கு சிகிச்சை பெறுபவர்களும், அவர்களது உறவினர்களும்…

Views: - 1342

0

1