தமிழக விவசாயிகளை வஞ்சிக்கும் கேரள அரசு… அமைச்சரின் அலட்சியத்தால் பறிபோகும் நீர் ஆதாரம்…!!

Author: Babu Lakshmanan
26 April 2024, 9:38 am
Quick Share

கேரள அரசு அளித்த உத்திரவாதத்தை மீறி, பெரிய குழாய்களுக்கு பதிலாக, கான்கிரீட்டால் வாய்க்கால் கட்டப்பட்டு வருவது தமிழக விவசாயிகளிடம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

கேரள மாநிலம் பாலக்காடு மாவட்டம் சித்தூர் தாலுக்காவில் 8 கிராம பஞ்சாயத்துகளும், சித்தூர் தத்தமங்கலம் உள்ளிட்ட இரண்டு நகராட்சிகள் இருக்கின்றன. இதில் எருத்தேன் பதி, கொழிஞ்சாம்பாறை, வடகரப்பதி ஆகிய பஞ்சாயத்துகளில், தமிழர்கள் பெரும்பான்மையாக வசிக்கின்றனர்.

சித்தூர் சட்டமன்ற தொகுதியில் மட்டும் ஒரு லட்சத்திற்கும் மேலான தமிழர்கள் வாக்காளர்களாக இருக்கிறார்கள். இவர்களின் பிரதான தொழிலாக விவசாயமே இருக்கிறது. இங்கு குறைந்தளவே நிலத்தடி நீர் இருப்பதால் அதைப்பயன்படுத்தி பந்தல் காய்கறிகள், கத்தரிக்காய், தென்னை, வாழை உள்ளிட்ட பயிர்களை உற்பத்தி செய்து வருகின்றனர். இவற்றில் 90% தென்னை மற்றும் வாழை பயிர்களாகும்.

மேலும் படிக்க: கோவில் நகையை திருடிவிட்டு நாடகம்… மருதமலை உப கோவிலின் அர்ச்சகர் கைது..!!!

இப்பகுதியில் விவசாயத்திற்கு அதிகப்படியான நீர் தேவைப்படுகிறது. இதை கருத்தில் கொண்டு கடந்த 50 ஆண்டுகளுக்கு முன்பு மூலத்துறை அணைக்கட்டில் இருந்து வலது வாய்க்கல் திட்டம் போடப்பட்டது. தொடர்ந்து, பல்வேறு காரணங்களால் இந்த மூலத்துறை வலது வாய்க்கல் திட்டப் பணிகள் தொடங்கப்படாமலே இருக்கிறது.

பாலக்காடு மாவட்டத்தில் 11 அணைகள் இருந்தாலும், நிலத்தடி நீர் மட்டம் மிக மோசமாகவே இருப்பதாக, கேரள அரசின் நீர்வளத்துறை ஆய்வறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது. பாலக்காட்டு கணுவாயின் மழை நிழல் பகுதி என்று சொல்லப்படும் இப்பகுதி, கோயம்புத்தூர் மாவட்டத்தின் எல்லையை ஒட்டி அமைந்துள்ளது. 1956ல் மொழிவாரி அடிப்படையில் மாநிலங்கள் பிரிக்கப்பட்ட போது, இவர்கள் வசிக்கும் பகுதி கேரள மாநிலத்தோடு இணைக்கப்பட்டது.

தமிழக அரசு இங்குள்ள தமிழர்களுக்காக வழங்கும் 7.2 டிஎம்சி தண்ணீரை தற்போது கேரள மக்கள் வசிக்கும் பகுதிகளிலேயே அதிகம் பயன்படுத்துகின்றனர். தமிழர்கள் வசிக்கும் பகுதியில், கோடை காலங்களில் வாகனங்களில் தண்ணீர் கொண்டு சென்று விநியோகிக்கும் நிலையில் உள்ளது. ஆழியார் அணையிலிருந்து வரும் தண்ணீர், மூலத்துறை அணைக்கட்டில் சேகரிக்கப்பட்டு, இரு கால்வாய் வழியாக தமிழர்கள், கேரளர்கள் வசிக்கும் பகுதிக்கு பிரித்து அனுப்பப்படுகிறது.

கேரள மக்கள் அதிகம் வசிக்கும் பகுதிக்கு இடது கால்வாய் 100 கிலோ மீட்டர் அளவுக்கு விரிவுபடுத்தப்பட்டது. ஆனால் தமிழர்கள் வசிக்கும் பகுதியில் வலது கால்வாய் 20 கிலோ மீட்டர் வெட்டப்பட்டு இருந்தாலே, வேலாந்தவளம் வரை வந்திருக்கும். அதற்கான முயற்சியை கேரளா அரசு எடுக்காமல் தமிழர்களை வஞ்சித்து விட்டதாக, இங்குள்ள தமிழர்கள் குற்றம் சாட்டி வந்தனர்.

இதனைத்தொடர்ந்து, கடந்த 2016 ஆம் ஆண்டு கேரளா மாநில உயர்நீதி மன்றம், இந்த வலது வாய்க்கல் பணிகளை முடித்து, தண்ணீரை விவசாய விளை நிலங்களுக்கும், குடிநீருக்காகவும் பயன்படுத்த, நீர்நிலை ஆதாரங்களை உயர்த்தவும் உத்தரவிட்டது. உயர்நீதிமன்ற உத்திரவினை தொடர்ந்து, கடந்த 2018- 2019 ஆண்டுகளில் கோரையாறு முதல் வரட்டையாறு வரை சுமார் 6.4 கி.மீ தூரம் விவசாயிகளுக்கு நீர் ஆதாரம் வழங்க கால்வாய் வெட்டப்படும் என அரசு உறுதி அளித்தது.

மூலத்துறை அணை – கோரையாரிலிருந்து வலது கால்வாயில் குழாய் மூலம் 6.4 கிலோ மீட்டர் தொலைவிலுள்ள, வரட்டையாறுக்கு தண்ணீர் கொண்டு செல்ல, 63 விவசாயிகளிடம் 14 ஏக்கர் விவசாய நிலம் கையகப்படுத்தப்பட்டது. நிலத்திற்கு ஒரு சென்ட்டிற்கு 60 ஆயிரம் ரூபாய் இழப்பீடாக அரசு அளித்தது. மேலும், நிலம் தரும் விவசாயிகளுக்கு வாய்க்காலில் இருந்து, ஏக்கருக்கு ஏற்ப, விவசாயத்திற்கு தண்ணீர் வழங்கப்படும் என கேரளா மின்சாரத்துறை அமைச்சர், மாவட்ட நிர்வாகம் சார்பில் உத்திரவாதம் அளித்திருந்தனர்.

கடந்த இரண்டு ஆண்டுகளாக வலது வாய்க்கால் பணிகள் நடைபெற்று வருகிறது. நிலம் கொடுத்த விவசாயிகளுக்கு தெரியாமல், அரசு அளித்த உத்திரவாதத்தை மீறி, பெரிய குழாய்களுக்கு பதிலாக, கான்கிரீட்டால் வாய்க்கால் கட்டப்பட்டு வருவது விவசாயிகளிடம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. தற்போது மத்திய அரசின் சமூக பாசன நுண்ணீர் திட்டத்தின் மூலம் 900 கோடி ரூபாய் செலவில், 15 அடி உயரத்தில், 10 அடி அகலத்தில் கான்கீரிட் போட்ட கால்வாய் சதுர வடிவில் 6.4 கிலோ மீட்டருக்கு அமைக்கப்பட்டு வருகிறது.

நிலத்தடி மட்டத்திலிருந்து 70 அடி ஆழம் வரை வெடி வைத்து தோண்டப்பட்டது. சில பகுதிகளில் சுரங்கம் அமைத்து இந்த 15 அடி நீள வாய்க்கால் அமைக்கப்பட்டுள்ளது. இதனால், 40 அடியில் இருந்த விவசாய கிணறுகளில் தண்ணீர் வறண்டு போயியுள்ளது. நீர் ஊற்று தடைபட்டு தென்னை உள்ளிட்ட காய்கறி செடிகள் காய்ந்து வருகின்றன. கேரளா அரசு தமிழர்களை வஞ்சிக்கும் நோக்கில் இத்திட்டத்தை மாற்றி, 50 முதல் 70 அடி ஆழத்தில், கான்கீரீட் வாய்க்காலில், நீரை கொண்டு செல்வதால் எந்த பயனும் இல்லை என விவசாயிகள் குற்றம் சாட்டினர்.

எருத்தேன் பதி பஞ்சாயத்து துணைத்தலைவரும், விவசாயியுமான சம்பத்குமார் நம்மிடம் பேசும்போது, எருத்தேன் பதி, வடகரப்பதி பஞ்சாயத்துகள் வறண்ட பகுதியாகும். இந்த பஞ்சாயத்தில் அனைத்து பயிர்கள், காய்கறிகள் தென்னை உள்ளிட்டவை விளை விக்கப்படுகின்றன. வலது கால்வாய் திட்டம் வந்தால் விவசாயம் செழிக்கும் என்பதால் இத்திட்டத்திற்கு ஒத்துக்கொண்டோம். விவசாயிகள் தண்ணீருக்காக தங்களது விவசாய நிலத்தை வலது கால்வாய் அமைக்க விட்டுக்கொடுத்தனர்.

எந்த அரசியல்வாதியும் விவசாயிகளிடம் கேட்கவிலை. விவசாயிகளேதான் அதிகாரிகளோடு சேர்ந்து விவசாயிகளிடம் பேசி நிலத்தை ஒரு செண்ட் 60 ஆயிரம் ரூபாய் வீதம் 14 ஏக்கர் வாங்கி கொடுத்தோம். காசுக்காக விவசாயிகள் நிலத்தை கொடுக்கவில்லை, தண்ணீருக்காகத்தான் கொடுத்துள்ளனர். விவசாயிகளிடம் ஒப்பந்தம் போட்ட பின்பு டெண்டர் விடுவதற்கு முன்பு குழாய் மூலம், தண்ணீர் கொண்டு செல்லப்படும் என அதிகாரிகள் தெரிவித்திருந்தனர்.

டெண்டர் விட்ட பின்பு பார்த்தால் 15 அடி நீளத்தில் 70 அடி அகலம் தோண்டப்பட்டுள்ளது. விவசாய பூமி இரண்டாக பிரிக்கப்பட்டதால், ஊற்றுகள் வெட்டப்பட்டு, காலவாயில் தண்ணீர் தேங்க ஆரம்பித்தது. அந்த தண்ணீரை எடுத்து கால்வாய் தொட்டியை அதிகாரிகள் கட்டியுள்ளனர். கிணற்றில் தண்ணீர் இல்லை. தென்னை காய்ந்து வருகிறது. ஆடு மாடுகளுக்கும் குடிக்க தண்ணீர் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது. இந்த தண்ணீரை கொண்டு 14 குளங்களை நிரப்பி, அதிலிருந்து சொட்டு நீர் பாசனம் மூலம் விவசாயத்திற்கு வழங்கப்படும் என அதிகாரிகள் தெரிவித்திருந்தனர். எங்களுக்கே சொட்டு நீர் பாசனம் பற்றி தெரியும், நீங்கள் குளத்தை நிரப்பி கொடுத்தாலே போதும், என்றார்.

அதிகாரிகள் விவசாயிகளிடம் எழுத்துபூர்வமாக எழுதிக்கொடுத்ததை மீறி, வலது வாய்க்கால் கட்டுப்படுவது குறித்து கேட்ட போது அதிகாரிகள் பதிலளிக்க வில்லை. வெடி வைத்து பள்ளம் தோண்டப்படுவதால், வீடுகளிலும் விரிசல் ஏற்பட்டுள்ளதாக குற்றம் சாட்டினார்.

Views: - 109

0

0

Leave a Reply