அமைச்சருடன் மல்லுக்கட்டும் காங். எம்எல்ஏ?…அழகிரிக்கு தலைவலி ஆரம்பம்!

Author: Udayachandran RadhaKrishnan
18 October 2023, 9:36 pm
KS Alagiri - Udpatenews360
Quick Share

2024 நாடாளுமன்றத் தேர்தல் வரை தமிழக காங்கிரஸ் தலைவர் பதவிக்கு புதிதாக யாரும் நியமிக்கப்பட மாட்டார்கள், கே எஸ் அழகிரியே தொடர்ந்து நீடிப்பார் என்று சில வாரங்களுக்கு முன்பு டெல்லி மேலிடம் அறிவித்த நிலையில் அவருக்கு ஏதாவது
ஒரு வழியில் தலைவலி உருவாகி விடுகிறது. அது அவருடைய தலைவர் பதவிக்கு வேட்டு வைக்கும் நிலைக்கு கொண்டு சென்றும் விடுகிறது.

சோனியாவிடம் நிர்வாகிகள் வைத்த கோரிக்கை

கடந்த வாரம் திமுக துணைப் பொதுச் செயலாளர் கனிமொழி சென்னையில் நடத்திய மகளிர் உரிமை மாநாட்டில் கலந்து கொள்வதற்காக சோனியாவும், பிரியங்காவும் சென்னை வந்தபோது கிண்டியில் உள்ள நட்சத்திர விடுதி ஒன்றில் தமிழக காங்கிரஸ் மூத்த நிர்வாகிகள், முக்கிய எம்பி, எம்எல்ஏக்களை தனிப்பட்ட முறையில் சந்தித்தும் பேசினர்.

அப்போது அந்த தலைவர்கள் அனைவருமே ஒரே குரலில் சோனியாவிடம், “மாநிலத் தலைவர் பதவியில் நான்கரை ஆண்டுகளுக்கும் மேலாக கே எஸ் அழகிரி நீடித்து வருகிறார். அவரை உடனடியாக நீக்கிவிட்டு புதிய இளம் தலைவர் ஒருவரை நியமியுங்கள். இல்லையென்றால் எதிர்வரும் தேர்தலில் திமுக 5 தொகுதிகளை ஒதுக்கினால் கூட அதை ஏற்றுக் கொள்ளவேண்டும் என்று உங்களுக்கு அவர் நெருக்கடி அளிப்பார். மாநிலத்தில் காங்கிரசும் வளர்ச்சி அடையாது” என்று கொந்தளித்து தள்ளிவிட்டனர்.

இன்னும் சிலர் சோனியா மகளிர் உரிமை மாநாட்டுக்கு வந்திருந்ததால், தமிழக காங்கிரசுக்கு பெண் ஒருவரை தலைவராக நியமிக்கவேண்டும் என்ற கோரிக்கையையும் முன் வைத்தனர்.

அழகிரிக்கு டோஸ்விட்ட சோனியா

கடைசியாக சந்தித்த கே எஸ் அழகிரியிடம், சோனியா கடுகடுப்புடன் “மாநிலத்தில் கட்சியை வளர்ப்பதற்காக எந்த நடவடிக்கையிலும் கடந்த இரண்டரை ஆண்டுகளாக நீங்கள் ஈடுபடவில்லை என்று கேள்விப்படுகிறேன். திமுகவின் ஒரு B டீம் மாதிரி, இந்த கட்சியை நடத்தி வந்திருக்கிறீர்கள். நீங்கள் சீனியர்… நீங்களும் திமுகவின் யோசனைகளை நிறைவேற்றக்கூடிய தலைவராகத்தான் இருந்து வருகிறீர்கள்… அதனால்தான் காங்கிரசை குறைத்து மதிப்பிடுகிறார்கள்… அதை வைத்துதான் தொகுதி பங்கீடு பற்றியே பேசுகிறார்கள்.. நீங்கள் போகலாம்…”என்று படபடவென பொரிந்து தள்ளி, அவரை பத்தே நிமிடங்களில் வெளியே அனுப்பி வைத்து விட்டார், என்கிறார்கள்.

இது அழகிரிக்கு கிடைத்த மிகப்பெரிய ‘நோஸ் கட்’டாகவும் அமைந்து விட்டது.
இதனால்தான் கடந்த நான்கு நாட்களாக திமுகவின் செய்தி தொடர்பாளர் போல அவர்
அறிக்கை விடுவது அப்படியே அமுங்கியும் போனது.

இந்த நிலையில்தான் அவருக்கு பெரும் குடைச்சல் தரும் இன்னொரு விவகாரம் திருவாடானை சட்டப்பேரவை தொகுதியில் முளைத்துள்ளது. இது சோனியா தமிழக காங்கிரஸ் எம்பி, எம்எல்ஏக்களுக்கு வழங்கிய ஆலோசனையால் எழுந்த சிக்கல் என்பதால் கே எஸ் அழகிரி என்ன செய்வது என்று தெரியாமல் திணறியும் வருகிறார்.

பிடி பிடித்த அமைச்சர் ராஜகண்ணப்பன்

ராமநாதபுரம் மாவட்டம் திருவாடானையில் இரு தினங்களுக்கு முன்பு நடந்த அரசு விழா ஒன்றில் அமைச்சர் ராஜகண்ணப்பன் கலந்து கொண்டார். ஆனால் அந்த தொகுதி எம்எல்ஏவான கரு. மாணிக்கம், இந்த நிகழ்ச்சியில் பங்கேற்காமல் புறக்கணித்து விட்டார்.

தான் அரசு நிகழ்ச்சிக்கு வந்தும் கூட, காங்கிரஸ் எம்எல்ஏ வராததால் கடும் கோபமடைந்த பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சர் ராஜ கண்ணப்பன் அந்த கடுப்பில் கரு. மாணிக்கத்தை ஒரு பிடி பிடித்தார்.

அவர் பேசும்போது, “திருவாடானை தொகுதி நல்ல தொகுதி. நல்லவர்களுக்கு ஓட்டுப்போட மக்கள் தயங்கவே மாட்டார்கள். இனி இந்தத் தொகுதியை கூட்டணிக்கு கொடுப்பதாக இல்லை. நாங்கள்தான் போட்டியிடுவோம். தமிழகத்தில் வேறு எந்தவொரு மாவட்டத்திற்கும் இல்லாத வகையில் ராமநாதபுரம் மாவட்டத்திற்குத்தான் 2,012 கோடி ரூபாயை முதலமைச்சர் வழங்கியிருக்கிறார். அதனால் திருவாடானை தொகுதி எம்எல்ஏ வருகிறார், வரவில்லை என்பதை பற்றியெல்லாம் நான் இனியும் கவலைப்படமாட்டேன்” என்று அதிரடி காட்டினார்.

கரு.மாணிக்கம் மீதான அதிருப்தி காரணமாகவே அமைச்சர் இப்படி பேசியதாக கூறப்படுப்படுகிறது.

அமைச்சர் மீது காங்.,நிர்வாகிகள் கோபம்

ஆனால் காங்கிரசின் மூத்த நிர்வாகிகளோ, “திமுக அரசு நடத்தும் பொது நிகழ்ச்சிகளில் காங்கிரஸ் நிர்வாகிகள் கலந்து கொண்டாலும் கூட முதலமைச்சர் ஸ்டாலினையோ, திமுக ஆட்சியையோ புகழ்ந்து பேசுவதை தவிர்க்க வேண்டும். தங்களது தொகுதி மக்களுக்கு இன்னும் என்னென்ன நன்மைகள் செய்ய வேண்டும் என்பதை மட்டுமே சுட்டிக்காட்டவேண்டும் என்று சோனியாவும், பிரியங்காவும் அட்வைஸ் செய்து இருக்கிறார்கள்.

அதனால் அரசு நிகழ்ச்சியில் கலந்து கொண்டு பேசும்போது முன்புபோல திமுக ஆட்சியை புகழ்ந்து தள்ளினால் அது எங்கள் நிர்வாகிகளுக்கு சிக்கலை ஏற்படுத்தி விடும். எனவே நாடாளுமன்றத் தேர்தல் நடந்து முடியும் வரை அரசு நிகழ்ச்சிகளில் கலந்து கொள்ளாமல் ஒதுங்கிக் கொள்வதே புத்திசாலித்தனம் என்று நினைத்து கரு.மாணிக்கம் எம் எல் ஏ அமைச்சருடன் விழாவில் பங்கேற்காமல் இருந்திருக்கலாம். ஆனால் அதற்காக கூட்டணியை முறித்துக் கொள்வது போல அமைச்சர் இப்படி பேசி இருக்ககூடாது” என்று கவலை தெரிவிக்கின்றனர்.

ஆனால் அரசியல் விமர்சர்களின் பார்வையோ, வேறு மாதிரியாக உள்ளது.

ஒரே குடும்பத்தின் பிடியில் திருவாடானை

“திருவாடானை தொகுதியை பொறுத்தவரை கரிய மாணிக்கம், கே.ஆர்.ராமசாமி, கரு.மாணிக்கம், என ஒரே குடும்பத்தை சேர்ந்த தாத்தா, அப்பா, மகன் என மூன்று தலைமுறையை சேர்ந்தவர்கள் கடந்த 10 தேர்தல்களில் வென்று எம்எல்ஏக்களாக இருந்துள்ளனர். இப்போதைய காங்கிரஸ் எம்எல்ஏ கரு மாணிக்கத்தின் தாத்தா கரியமாணிக்கத்துக்கு இந்த தொகுதியில் ஒரு காலத்தில் தனிப்பெரும் செல்வாக்கு இருந்தது.

அவர் 1957 முதல் 1977 வரை நான்கு தேர்தல்களில் இந்த தொகுதியில் தேர்ந்தெடுக்கப்பட்டவர். இவருடைய மகன் ராமசாமி இதே தொகுதியில் ஐந்து முறை காங்கிரஸ் சார்பில் போட்டியிட்டு எம்எல்ஏ ஆனவர். மூன்றாவது தலைமுறையாக கரு. மாணிக்கம் 2021 தேர்தலில் வெற்றி பெற்றார். இதனால் ஒரே குடும்பத்தைச் சேர்ந்தவர்கள் இந்த தொகுதியில் இப்படி பரம்பரை பரம்பரையாக போட்டியிட்டு வெற்றி பெறுவதுடன் திருவாடானை தொகுதி முழுவதையும் தங்கள் கட்டுப்பாட்டில் வைத்துள்ளனரே, அதனால்தான் தங்களை மதிக்க மாட்டேன் என்கிறார்களோ என்று கருதி ஆற்றாமையால் அமைச்சர் ராஜ கண்ணப்பன் பேசியிருக்கிறார் என்றே கருதத் தோன்றுகிறது.

காங்., நிலைமையோ மோசம்

அதேநேரம் சோனியா தமிழக காங்கிரஸ் தலைவர்களுக்கு பிறப்பித்த ரகசிய உத்தரவு ஏற்றுக்கொள்ளக்கூடிய ஒன்றுதான்.

ஏனென்றால் இதற்கு முன்பு எப்போதும் இல்லாத அளவிற்கு, திமுக ஆட்சியையும், முதலமைச்சர் ஸ்டாலினையும் அவர்கள் எந்த நேரமும் புகழ்ந்து பேசிக் கொண்டே இருக்கின்றனர். அதிலும் குறிப்பாக கே.எஸ். அழகிரி, EVKS இளங்கோவன், திருநாவுக்கரசர், செல்வப் பெருந்தகை, பீட்டர் அல்போன்ஸ் போன்றவர்கள் திமுக தலைவர்களின் குரலாகவே கடந்த இரண்டரை ஆண்டுகளாக ஒலித்தும் வருகின்றனர்.

இப்படி திமுகவை தொடர்ந்து புகழ் பாடி வருவதால்தான் வைகோவின் மதிமுக எப்படி திமுகவுடன் இன்று ஐக்கியமாகிவிட்டதோ, அதே நிலை இன்னும் சில ஆண்டுகளில் காங்கிரசுக்கும் ஏற்பட்டு விடலாம். அது மட்டுமல்ல திமுகவின் அடிமைக்கட்சி என்று விமர்சிக்கப்படும் அளவிற்கு தமிழக காங்கிரசின் நிலைமை மோசமாகி விடவும் செய்யலாம்.

இந்த விஷயங்களில் காங்கிரஸ் போலவே விசிக தலைவர் திருமாவளவன் கூட திமுகவிடம் சரண்டர் ஆகிவிட்டார் என்றே சொல்லவேண்டும். தமிழகத்தில் பட்டியல் இன மக்களுக்கு எவ்வளவு அநீதி இழைக்கப்பட்டாலும் அதையெல்லாம் விட கூட்டணி தர்மமே மிகப் பெரியது என்று அவர் அடக்கி வாசிக்கும் நிலையில் இருக்கிறார்.

எனினும் திமுக கூட்டணி கட்சிகளில் மார்க்சிஸ்ட் மட்டுமே, பொது மக்களை பாதிக்கும் பிரச்சனை என்றால் தோழமையின் சுட்டுதல் போல அவ்வப்போது மென்மையாக கண்டிக்கிறது.

கேஎஸ் அழகிரிக்கு சிக்கல்

எப்படியும் குறைந்தபட்சம் 12 எம் பி சீட்டுகளை பேரம் பேசி வாங்கி விடவேண்டும், என்பதற்காக திமுகவிடமிருந்து சற்று விலகியே நில்லுங்கள் என்று சோனியா தமிழக காங்கிரஸ் தலைவர்களை எச்சரித்திருப்பதாகவே தோன்றுகிறது.

ஆனால் இது அமைச்சர் ராஜ கண்ணப்பனுக்கு தெரியுமா, தெரியாதா? என்கிற நிலையில் 2026 சட்டப்பேரவைத் தேர்தலில் திருவாடானை தொகுதி காங்கிரசுக்கு ஒதுக்கப்படமாட்டாது என்பதை அவர் இப்போதே போட்டு உடைத்து விட்டார். இந்த விவகாரம் கே எஸ் அழகிரிக்கு இடியாப்ப சிக்கலாக உருவெடுத்துள்ளது, என்பது நிஜம்!” என்று அந்த அரசியல் விமர்சகர்கள் கூறுகின்றனர்.

திமுகவுடன் நாடாளுமன்ற தொகுதி பங்கீடு பேச்சு தொடர்பான பேச்சு வார்த்தையே இன்னும் தொடங்காத நிலையில் அழகிரிக்கு இப்படியொரு சோதனையா?…. பரிதாபம்தான்!

Views: - 255

0

0