திருப்புமுனையாக அமையுமா மதுரை மாநாடு..? தீவிரம் காட்டும் எடப்பாடி பழனிசாமி… 11 மாவட்டங்களுக்கு பிறப்பிக்கப்பட்ட உத்தரவு..!!

Author: Babu Lakshmanan
19 July 2023, 1:50 pm

அடுத்த மாதம் மதுரையில் அதிமுக மாநாடு நடைபெற உள்ள நிலையில், 11 மாவட்டங்களுக்கு புதிய உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

வீர வரலாற்றின் பொன்விழா எழுச்சி மாநாடு என்ற தலைப்பில் அதிமுக சார்பில் பிரமாண்ட மாநாட்டிற்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. மதுரையில் அடுத்த மாதம் 20ம் தேதி நடக்கும் இந்த மாநாட்டிற்கான கால்கோல் பணிகள் அண்மையில் நடைபெற்றது. இந்த மாநாட்டில் லட்சக்கணக்கான தொண்டர்கள் கலந்து கொள்வார்கள் என்று அதிமுக நிர்வாகிகள் தெரிவித்து வருகின்றனர்.

அதேவேளையில், மாநாட்டிற்கான பணிகளை தமிழகம் முழுவதும் அ.தி.மு.க. பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி அனைத்து மாவட்ட செயலாளர்கள் மற்றும் நிர்வாகிகளை முடுக்கி விட்டுள்ளார். ஒவ்வொரு மாவட்டத்திலும் வரும் தொண்டர்களுக்கான வாகனங்கள், தங்கும் இடம் உள்பட அனைத்து ஏற்பாடுகளையும் கவனிக்க தனித்தனியே நிர்வாகிகள் நியமனம் செய்யப்பட்டு பணிகள் நடைபெற்று கொண்டிருக்கின்றன.

இந்த நிலையில், அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது :- மாநாடு சிறப்புடன் நடைபெறுவதற்கு 11 மாவட்டங்களில் ஆலோசனைக் கூட்டங்கள் வருகிற 28-ந் தேதி முதல் நடக்கிறது. இதில் மூத்த நிர்வாகிகள் கலந்துகொண்டு ஆலோசனை வழங்க உள்ளனர். 28-ந்தேதி காலை 10 மணிக்கு ராமநாதபுரம் ஏபிஷா திருமண மண்டபத்திலும், மாலை சிவகங்கை மாவட்ட நிர்வாகிகளுடன் முத்து மகாலிலும் 29-ந்தேதி காலை விருதுநகர் மாவட்டத்தினருடன் சிவகாசி ஜாபோஸ் மண்டபத்திலும், மாலை தூத்துக்குடி நிர்வாகிகளுடன் மாணிக்கம் மகாலிலும் கூட்டம் நடக்கிறது.

30-ந்தேதி காலை நெல்லை மாவட்ட நிர்வாகிகளுடன் மாதா மாளிகையிலும் மாலை தென்காசி நிர்வாகிகளுடன் இசக்கி மகாலிலும், 31-ந்தேதி காலை தேனி வேலுச்சாமி மண்டபத்திலும் மாலை 3 மணிக்கு மதுரை மாவட்ட நிர்வாகிகளுடன் மாநாட்டு மைதானத்திலும் அடுத்த மாதம் 1-ந்தேதி காலை புதுக்கோட்டை மகாராஜா மகாலிலும், மாலை திருச்சி எஸ்.பி.எஸ். மகாலிலும், 2-ந்தேதி காலை கன்னியாகுமரி நிர்வாகிகளுடன் நாகர்கோவிலில் ஒய்.ஆர். திருமண மண்டபத்திலும் ஆலோசனை கூட்டம் நடக்கிறது.

இதற்கான ஏற்பாடுகளை அந்தந்த மாவட்ட செயலாளர்கள், நிர்வாகிகள் சிறப்பாக செய்ய வேண்டும், என தெரிவித்துள்ளார்.

  • madhavan talks about ncert syllabus going controversial எங்க வரலாற்றை மறைக்கிறீங்க?- வம்பாக பேசி சர்ச்சையில் சிக்கிக்கொண்ட மாதவன்! ஏனப்பா இப்படி?