அமைச்சர் உதயநிதி – மு.க அழகிரி சந்திப்பால் பாலாறும், தேனாறும் ஓடுமா..? எந்தப் பிரயோஜனமும் இல்லை : செல்லூர் ராஜு

Author: Babu Lakshmanan
17 January 2023, 6:11 pm

மதுரை : உதயநிதி ஸ்டாலின், முக. அழகிரி சந்திப்பு மூலம் பாலாறு தேனாறு ஏதேனும் ஓட போகின்றதா ? என்றும், இது வாரிசு அரசியல் என்பதற்கான எடுத்துகாட்டு என்று முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜூ தெரிவித்துள்ளார்.

எம்.ஜி.ஆரின் 106வது பிறந்தநாளை முன்னிட்டு மதுரை மாநகர் மாவட்ட கழக அதிமுக சார்பில் கோரிப்பாளையம் பகுதியில் இருக்கக்கூடிய அலுவலகத்தில் வைக்கப்பட்டிருந்த முழு உருவப்படத்திற்கு முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜு உட்பட ஏராளமான கட்சி பிரமுகர்களும் நிர்வாகிகளும் மலர் தூவி அஞ்சலி செலுத்தினர்.

அதனைத் தொடர்ந்து, மதுரை கே.கே நகரில் உள்ள எம்.ஜி.ஆர் மற்றும் ஜெயலலலிதா ஆகியோரின் முழு உருவ சிலைக்கு மாலை அணிவித்து பொதுமக்களுக்கு அன்னதானத்தை முன்னாள் அதிமுக அமைச்சர் செல்லூர் ராஜு தொடங்கி வைத்தார். இந்த நிகழ்வில் 200க்கும் மேற்பட்ட அதிமுக தொண்டர்களும் நிர்வாகிகள் மாமன்ற உறுப்பினர்கள் என பலர் கலந்து கொண்டனர்.

பின் செய்தியாளர்களிடம் அவர் பேசியதாவது:- உதயநிதி, முக. அழகிரி சந்திப்பு மூலம் பாலாறு, தேனாறு ஏதேனும் ஓட போகின்றதா ? வாரிசு அரசியல் என்பதற்கான எடுத்துகாட்டு இது. தமிழகத்தில் எந்த மாற்றமும் ஏற்பட போவதில்லை.

மதுரையில் ஏற்கனவே ரவுடிகள் தொல்லை அதிகமாக உள்ளது. அழகிரி சந்திப்பு மூலம் என்னவாக போகின்றது. ஒன்னுமே இல்லை. விளையாட்டுத்துறை அமைச்சராக உள்ள உதயநிதி, தீராத விளையாட்டு பிள்ளையாக உள்ளார். நேரு ஸ்டேடியத்தில் சிந்தடிக் டிராக் அமைப்பதற்கு 3 மணி நேரம் மாணவர்களை காக்க வைத்துள்ளனர். பொறுப்பாக அவர் செயல்படவில்லை.

காக்கைக்கும் தன் குஞ்சு பொன்குஞ்சு என்பது போல மு.க ஸ்டாலின் எல்லா இடங்களிலும் சிறப்பாக செயல்படுவதாக கூறி வருகின்றார். கருணாநிதியை கலைஞர் என ஏன் குறிப்பிடுகின்றோம். அவர் நடிக்க கூடியவர். அவர்கள் குடும்பமே நடிப்பவர்கள் தான். எதிர்பார்ந்த மக்களுக்கு எதுவுமே செய்யவில்லை. கடன்சுமை அதிகரிப்பு, பெண்களுக்கு ஆயிரம் ரூபாய் தரவில்லை, இப்படி அடுக்கி கொண்டே போகலாம்.

பாலமேடு ஜல்லிகட்டில் உயிரிழந்த மாடுபிடி வீரர் அரவிந்தராஜனுக்கு குறைந்த நிவாரண தொகை அறிவிக்கப்பட்டுள்ளது. 10 லட்ச ரூபாய் வழங்க வேண்டும் என கேட்டுக்கொள்கின்றேன்.

ஆளுநர் உரையின் போது தரக்குறைவாக மதித்து எதிர்த்து திமுக கூட்டணி கட்சியினர் கோஷம் போட்டது மரபு மீறிய செயல். முதல்வர், ஆளுநர் உரையை கண்டித்து பேசியது தமிழக மற்றும் சட்டமன்ற வரலாற்றில் கரும்புள்ளி. எதிர்காலத்தில் இதுபோல நடக்கக்கூடாது. இதற்காகவே ஆட்சியை கலைக்கலாம். வருகின்ற நாடாளுமன்றத்தோடு சட்டமன்றதிற்கு தேர்தல் வந்தல் திமுகவை வீட்டுக்கு அனுப்ப தமிழக மக்களும் திமுகவினருமே தயாராக உள்ளனர்.

ஒரே நாடு, ஒரே தேர்தல் மூலம் வீண் வரி செலவுகளை குறைக்கமுடியும் என்பதால் இது மோடிஜியின் கனவு திட்டம், வல்லரசு நாடாக மாற்ற நினைக்கின்றார். மதுரையில் உள்ள உலகதமிழ்ச்சங்கத்தில் புரட்சிதலைவர் எம்.ஜி.ஆருக்கு சிலை வைக்க வேண்டும். எம்.ஜி.ஆரை பெரியப்பா என சொல்லும் மு.க ஸ்டாலின், எம்.ஜி.ஆர் சிலையை நிறுவ நடவடிக்கை எடுக்க வேண்டும்.

இல்லையென்றால் நிச்சயம் மதுரை மாநகர் மாவட்ட கழகம் சார்பாக விரைவில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெறும், என தெரிவித்தார்.

  • tourist family negative review from valaipechu team படம் வர்ரதுக்கு முன்னாடியே நெகட்டிவ் விமர்சனம்; டூரிஸ்ட் ஃபேமிலி குறித்து வாய்விட்ட பிரபலம்!