ஜோதிமணிக்கு முக்கிய பொறுப்பு : கே.எஸ். அழகிரி திட்டம் பணால்?…

Author: Udayachandran RadhaKrishnan
28 August 2022, 8:16 pm
Rahul Jithimani - Updatenews360
Quick Share

காங்கிரஸ் தலைவரான ராகுல் வரும் 7-ம் தேதி, இந்திய ஒற்றுமை யாத்திரை என்னும் நடை பயணத்தை கன்னியாகுமரியில் தொடங்குகிறார் என்ற செய்தி காங்கிரசாருக்கு மிகுந்த உற்சாகம் தருவதாக அமைந்துள்ளது.

ராகுல் காந்தி பாத யாத்திரை

ஏனென்றால் தமிழகத்தில் 10-க்கும் மேற்பட்ட கோஷ்டிகளை கொண்டுள்ள காங்கிரஸ் அதையெல்லாம் மறந்து ஒருங்கிணைந்து செயல்படுவதற்கு பொருத்தமான தருணமாக மாறும் என்பதால்!

12 மாநிலங்களில் 3500 கிலோமீட்டர் தூரம் நடந்து 150வது நாளில் காஷ்மீர் மாநிலத்தில் இந்த யாத்திரையை ராகுல் நிறைவு செய்வார் என்று காங்கிரஸ் தரப்பில் கூறப்படுகிறது.

தமிழகத்தில் மட்டும் நான்கு நாட்கள் பயணம் மேற்கொள்ளும் அவர் தமிழக எல்லை வழியாக அடுத்து கேரளாவிற்கு செல்கிறார். ஆனால் ராகுல் தமிழகம் வருவதற்கு இன்னும் ஒரு வாரம் உள்ள நிலையில் இப்போதே மாநில காங்கிரசில் ஒருவித சலசலப்பும், பதற்றமும் ஏற்பட்டுள்ளதை காண முடிகிறது.

10 லட்சம் தொண்டர்கள்

தமிழக தலைவர் கே எஸ் அழகிரி கடந்த சில நாட்களுக்கு முன்பு, “கன்னியாகுமரி முதல் காஷ்மீர் வரையிலான ராகுலின் நடை பயணத்தில் தமிழக காங்கிரஸ் தொண்டர்கள் 10 ஆயிரம் பேர் இணைந்து கொள்வார்கள். இந்த நடை பயணம் ஆர்எஸ்எஸ்ஸின் தவறான தத்துவத்தை எதிர்த்தும், பாஜகவின் வீழ்ச்சி தரும் பொருளாதாரத்தை எதிர்த்தும், இந்தியாவில் மனிதர்கள் ஒற்றுமையுடன் வாழ வேண்டும் என்ற காந்திய தத்துவத்தை வலியுறுத்தியும் நடைபெற உள்ளது. தொடக்க
விழாவில் திமுக மற்றும் கூட்டணி கட்சி தலைவர்களும் கலந்துகொள்ளும் விதமாக அழைப்பு விடுக்கப்படும்” என்று கூறியிருந்தார். ஆனால் தற்போதோ 10 லட்சம் தொண்டர்கள் திரள்வார்கள் என்று தெரிவித்திருக்கிறார்.

அவருடைய இந்த நம்பிக்கை காங்கிரஸ் தொண்டர்களிடையே வரவேற்பை பெற்றாலும் கூட திடீரென தொண்டர்களின் எண்ணிக்கையை 10 லட்சம் என அதிகரித்து அவர் கூற என்ன காரணம்? என்ற கேள்வியும் எழுகிறது.

எம்பி ஜோதிமணிக்கு முக்கிய பொறுப்பு

இதன் பின்னணி என்னவாக இருக்கும் என்று பல்வேறு யூகங்கள் கிளம்பியுள்ள நிலையில்தான் கே எஸ் அழகிரி அதிர்ச்சி அடையும் விதமாக ஒரு அறிவிப்பை டெல்லி மேலிட காங்கிரஸ் தலைமை வெளியிட்டுள்ளது.

காஷ்மீர் முதல் கன்னியாகுமரி வரை ராகுல் தலைமையில் நடைபெறும் ஒற்றுமை பயணத்தை ஒருங்கிணைக்கும் பொறுப்பை கரூர் காங்கிரஸ் எம்.பி. ஜோதிமணிக்கு காங்கிரஸ் தலைமை வழங்கி இருக்கிறது என்ற தகவல்தான் அது.

இரண்டாவது சுதந்திர போராட்டம்

இதுகுறித்து தனது முக நூல் பதிவில் ஜோதிமணி, “கடந்த 25 ஆண்டுகளில் காங்கிரஸ் கட்சியில் பல்வேறு முக்கியப் பொறுப்புகளை ஏற்றுப் பணியாற்றி இருக்கிறேன்.

எல்லாவற்றையும் விட தலைவர் ராகுல்காந்தி தலைமையில், காங்கிரஸ் கட்சி முன்னெடுக்கும் இந்திய ஒற்றுமைப் பயணம் எனும் வரலாற்றுச் சிறப்புமிக்க நிகழ்வை ஒருங்கிணைக்கும் இந்த வாய்ப்பு மகத்தானது. வருகிற 2024 நாடாளுமன்ற தேர்தல் நமது தேசம் எதிர்நோக்கி இருக்கும் வாழ்வா? சாவா? போராட்டம்.

காயம்பட்டுக் கிடக்கும் இந்த தேசத்தின் ஆன்மாவை மீட்டெடுக்கவும், வெறுப்பால் பிரிந்துகிடக்கும் இதயங்களை ஒருங்கிணைத்து, அன்பை விதைக்கவும், அழிந்துபோன பொருளாதாரத்தை மறுகட்டமைப்பு செய்யவும் காங்கிரஸ் கட்சி இந்த இரண்டாவது சுதந்திரப் போராட்டத்தை நடத்துகிறது. இது மக்களுக்கான ஒரு மாபெரும் இயக்கம்.

இது தொன்மையும், பெருமையும் மிக்க தமிழ் மண்ணில், கன்னியாகுமரியில் இருந்து துவங்குகிறது. இப்படியொரு வரலாற்று சிறப்புமிக்க வாய்ப்பை வழங்கிய அன்னை சோனியா காந்தி, தலைவர் ராகுல்காந்தி ஒருங்கிணைப்புக் குழுவின் தலைவர் திக்விஜயசிங் ஆகியோருக்கு மனமார்ந்த நன்றிகள்.

இந்த நடைபயணம் சிறப்பாக நடைபெறவேண்டும் என்கிற ஒற்றை நோக்கோடு தமிழக காங்கிரஸ் கமிட்டி தலைவர் கே.எஸ்.அழகிரி தலைமையில் அனைத்து ஒத்துழைப்பையும் வழங்கி வருகிறது. அனைவருக்கும் மனமார்ந்த நன்றிகள். அனைவரும் ஒருங்கிணைந்து இந்தப் பணியினை சிறப்பாக செய்துமுடிப்போம். இந்தியாவை மீட்டெடுப்போம்’ என்று கூறியுள்ளார்.

கடுப்பில் கேஎஸ் அழகிரி

“ராகுலின் நடைபயணத்தை ஒருங்கிணைக்கும் பொறுப்பு ஜோதிமணியிடம் ஒப்படைக்கப்பட்டு இருப்பதால் இன்னும் சில மாதங்களில் மாநில காங்கிரஸ் கட்சியின் தலைவர் பதவி தன்னிடம் இருந்து பறிக்கப்பட்டு விடுமோ என்ற பதைபதைப்பு கே எஸ் அழகிரியிடம் உருவாகி இருக்கிறது” என்று அரசியல் விமர்சகர்கள் கூறுகின்றனர்.

கடந்த பிப்ரவரி மாதமே அழகிரியின் தலைவர் பதவி காலம் முடிவடைந்துவிட்டது. இருந்தபோதிலும் பல்வேறு காரணங்களால் தமிழகத்திற்கு புதிய தலைவர் இதுவரை நியமிக்கப்படவில்லை. மேலும் புதிய தலைவர், தேர்தல் மூலம் தேர்ந்தெடுக்கப்படவேண்டும் என்று டெல்லி காங்கிரஸ் மேலிடம் விரும்புவதால் அது தள்ளிக்கொண்டே போகிறது.

ராகுலின் நம்பிக்கையை பெற்ற ஜோதிமணி

அதேநேரம் கடந்த சட்டப்பேரவைத் தேர்தலின்போது கரூர் மாவட்டத்தில் ராகுல் பிரசாரம் மேற்கொண்டபோது, அவருக்கு வித்தியாசமான முறையில் ஜோதிமணி எம்பி வரவேற்பு அளித்தார். கிராமத்து சமையல் நிகழ்ச்சி ஒன்றில் ராகுலை நேரடியாக பங்கேற்கவும் வைத்தார். அது பெரும்பாலான டிவி செய்தி சேனல்களில் ஒளிபரப்பானதுடன், சமூக ஊடகங்களிலும் வைரலாகி பல லட்சக்கணக்கான பார்வையாளர்களை பரபரப்பாக பேசவும் வைத்தது. இதனால் ராகுலின் அபிமானத்தை ஜோதிமணி அப்போதே பெற்றுவிட்டார்.

அதன் பின்பு டெல்லியில் மத்திய பாஜக அரசுக்கு எதிராக காங்கிரஸ் சார்பில் எந்தவொரு போராட்டம் நடந்தாலும் அதில் ஆவேசமான கோஷங்களை எழுப்பி குண்டுகட்டாக அவரை பெண் போலீசார் தூக்கி செல்லும் காட்சிகள் மூலம் மேலிடத் தலைவர்களின் கவனத்தை முழுமையாக ஈர்த்தார். அவரைப்போன்ற துடிப்பானதொரு இளம் தலைவர்தான் கட்சிக்கு தேவை என்று கருதி ராகுலின் நடை பயணத்தை ஒருங்கிணைக்கும் பொறுப்பை அவருக்கு காங்கிரஸ் மேலிடம் வழங்கியிருக்கலாம்.

அதிருப்தியில் சீனியர் லீடர்கள்

ஜோதிமணி என்றால் யாத்திரையின்போது மிகுந்த ஆர்வத்துடன் ராகுலுடன் சேர்ந்தே நடப்பார். ஆனால் மூத்த தலைவர்களால் தினமும் 23 கிலோ மீட்டர் தூரம் தொடர்ந்து நடக்க முடியுமா? என்ற சந்தேகத்தால் கூட ஜோதிமணிக்கு இந்த பொறுப்பு வழங்கப்பட்டிருக்கலாம்.

இதனால் அவர் தமிழக காங்கிரஸ் தலைவர் பதவிக்கு உறுதியாக தேர்வு செய்யப்படலாம் என்ற தகவலும் இப்போதே உலா ஆரம்பித்துவிட்டது. ஆனால் இதை கே எஸ் அழகிரி, ஈவிகேஎஸ் இளங்கோவன், கே. வி.தங்கபாலு போன்றவர்கள் ஏற்பார்களா? என்பது தெரியவில்லை. ஏனென்றால் இவர்கள் மூவரும் தமிழகத்தில் திமுகவுடன்தான் கூட்டணி அமையவேண்டும் என்பதில் இன்றுவரை உறுதியாக இருப்பவர்கள்.

கமிட்டி தலைவர் பதவிக்கு ஆபத்து?

ஆனால் ஜோதிமணியோ, தனது மாவட்டத்தைச் சேர்ந்த தமிழக மின்துறை அமைச்சர் செந்தில் பாலாஜியுடன் மோதல் போக்கை கொண்டிருப்பதால் 2024 தேர்தலில் தமிழக கூட்டணி விவகாரம் தொடர்பாக கட்சி மேலிடம் என்ன முடிவெடுக்குமோ? என்ற குழப்பம் இப்போதே இவர்களுக்கு வந்துவிட்டது.

தவிர தனது ஆதரவாளர்களில் யாராவது ஒருவரை தமிழக காங்கிரஸ் தலைவராக்கலாம் என்று நினைத்திருந்த கே எஸ் அழகிரியின் திட்டமும் இதன் மூலம் பணால் ஆகிவிட்டது.

அதனால் ஜோதிமணிக்கு இவ்வளவு பெரியதொரு பொறுப்பை தலைமை வழங்கியிருப்பது, கே எஸ் அழகிரியின் எதிர்கால அரசியலை தவிடு பொடியாக்கிவிட்டது என்றே சொல்லவேண்டும். அதனால்தான் 10 ஆயிரம் தொண்டர்கள் கன்னியாகுமரிக்கு வருவார்கள் என்று முதலில் கூறியிருந்த அவர் தற்போது அந்த சுமையை ஜோதிமணி தூக்கி சுமக்கட்டும் என்று நினைத்தோ, என்னவோ 10 லட்சம் தொண்டர்கள் திரள்வார்கள் என்று கூறியதாகவே கருதத் தோன்றுகிறது.

ராகுல் நடை பயணம் : எதிர்பார்ப்பில் காங்கிரஸ்

தவிர ராகுலின் நடைபயண தொடக்க விழாவில் திமுக தலைவர்கள் பங்கேற்க வேண்டும் என்கிற ஆர்வமும் இனி அழகிரியிடம் குறைந்து போய்விடும். திமுக தலைவர்கள் பங்கேற்கத் தயங்கும் நிலையில், அதன் கூட்டணிக் கட்சித் தலைவர்களும் கலந்துகொள்ள விரும்ப மாட்டார்கள் என்பதையும் உறுதியாக சொல்ல முடியும்” என்று அந்த அரசியல் விமர்சகர்கள் கூறுகின்றனர்.

ராகுல் நடைபயண தொடக்க விழாவின்போது என்னென்ன கூத்தெல்லாம் நடக்கப்போகிறது என்பதை பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்!

Views: - 428

0

0