ஆளுநர் பதவி வேண்டாம்… வாங்க எம்எல்ஏ பதவி தாரோம்.. ஆளுநர் ஆர்என் ரவிக்கு அமைச்சர் துரைமுருகன் அழைப்பு..!!

Author: Babu Lakshmanan
9 May 2023, 11:14 am
Quick Share

நெல்லை ; நாங்கள் ஆளுநருடன் வம்பு செய்ய விரும்பவில்லை என்றும், யாருக்காக இப்படி எல்லாம் பேசுகிறீர்கள் என்பது எங்களுக்கு தெரியும் என அமைச்சர் துரைமுருகன் தெரிவித்துள்ளார்.

நெல்லை மாநகர திமுக சார்பில் நெல்லை டவுனில் அரசின் இரண்டு ஆண்டு சாதனை விளக்க பொதுக்கூட்டம் பாளையங்கோட்டை சட்டமன்ற உறுப்பினர் அப்துல் வகாப் தலைமையில், நெல்லை மாநகரச் செயலாளர் சுப்பிரமணியன் ஏற்பாட்டில் நடைபெற்றது. இதில் சிறப்பு அழைப்பாளராக திமுக பொதுச் செயலாளரும், நீர்வளத் துறை அமைச்சருமான துரைமுருகன், பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சர் ராஜ கண்ணப்பன், திமுக கொள்கை பரப்புச் செயலாளர் ஜெகத்ரட்சகன் எம்பி உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

இந்த கூட்டத்தில் அமைச்சர் துரைமுருகன் பேசியதாவது:- நெல்லை, கன்னியாகுமரி, தென்காசி மாவட்டங்களில் திமுக ஆட்சியில் தான் பல அணைகள் கட்டப்பட்டது. தமிழகத்தின் முதல் நதிநீர் இணைப்பு திட்டம் நெல்லை மாவட்டத்தில் தாமிரபரணி, நம்பியாறு, கருமேனியாறு ஆகிய ஆறுகளை இணைக்கும் வகையில் வறட்சி பகுதிகளை செழிக்க செய்ய வேண்டும் என்ற எண்ணத்தில் கொண்டு வரப்பட்டது. கடந்த 10 ஆண்டுகளில் இந்த திட்டத்தை கிடப்பில் போட்டு விட்டனர். மீண்டும் அந்த திட்டம் தூசு தட்டப்பட்டு பணிகள் விரைவுப்படுத்தப்பட்டுள்ளது.

இப்போது நமக்கு எதிரிகளே இல்லை. எதிர்க்கட்சித் தலைவராக ஆளுநர் தான் செயல்படுகிறார். இபிஎஸ் சிவனே என்று இருக்கிறார். ஓபிஎஸ் எங்கு இருக்கிறார் என்றே தெரியவில்லை. எதிரிகள் இல்லாத அரசியலை தமிழக முதலமைச்சர் ஸ்டாலின் செய்து வருகிறார். சாதனையில் இரண்டு வகை உண்டு. மக்களுக்கு திட்டம் தீட்டி அதனை அமல் செய்வது ஒரு வகை , ஆட்சியில் அமர்ந்து அகில இந்திய அரசியலில் சாதித்து காட்டுவது இன்னொரு வகை. இதை இரண்டுமே தமிழக முதலமைச்சர் செய்து சாதித்து காட்டியுள்ளார்.

முன்னாள் முதலமைச்சர் கருணாநிதி அகில இந்திய அரசியலில் சாதித்துக் காட்ட 10 முதல் 15 ஆண்டுகள் ஆனது. தமிழக முதலமைச்சர் ஸ்டாலின் பொறுப்பேற்று இரண்டு ஆண்டு காலத்திலேயே இந்தியாவின் குறிப்பிடத்தக்க தலைவராக இருக்கிறார். நீண்ட ஆண்டு காலமாக கம்யூனிஸ்ட் கட்சியின் தலைவர்களாக இருப்பவர்கள் கூட இந்தியாவின் அரசியலுக்கு நீர்தான் வழி காட்ட வேண்டும் என்று சொல்லும் நிலையை இரண்டு ஆண்டுகளில் தமிழக முதலமைச்சர் கொண்டுவந்துள்ளார்.

எதிர்க்கட்சியான அதிமுகவும் நாங்கள் இரண்டு ஆண்டுகளில் ஒன்றும் செய்யவில்லை என்று சொல்லவில்லை. எதிரியான பாஜக கூட நாங்கள் இரண்டு ஆண்டுகளில் ஒன்றும் செய்யவில்லை என சொல்லவில்லை. ஆனால் ஒரே ஒரு ஆள் மட்டும் நாங்கள் ஒன்றும் செய்யவில்லை என சொல்லி வருகிறார். அவர் தான் ரவி தமிழகத்தின் கவர்னர்.

சட்டமன்றத்தில் அரசின் திட்டங்கள் உள்ளிட்டவைகள் அடங்கிய உரையை அரசு தரப்பில் எழுதி கொடுக்கப்படும். அதனை ஆளுநர் படித்து பார்த்து அவருடைய ஒப்புதல் பெற்ற பின்னரே சட்டமன்றத்திற்கு வரும். அதனை அவர் வாசிப்பார். ஆனால் ஆளுனர் கடந்த சட்டமன்ற கூட்டத் தொடரில் உரை நிகழ்த்திய போது, பல வரிகளை விட்டுவிட்டு படித்தார். இல்லாத பல தகவல்களையும் சேர்த்து படித்தார். சபையில் கண்ணியம் காக்க வேண்டும் என்ற அடிப்படையிலேயே அவர் உரை முடியும் வரை யாரும் எதுவும் செய்யக்கூடாது என முதலமைச்சர் உத்தரவிட்டார்.

அதன்படியே நாங்களும் இருந்தோம். அவர் உரை முடிந்த பின்னரே முதலமைச்சரே எழுந்து பேசினார். அதுவும் பொறுக்காமல் ஆளுநரே சபையை விட்டு வெளியேறினார். அரசு எழுதிக் கொடுத்த அனைத்தையும் எப்படி படிக்க முடியும் என ஆளுநர் தனியார் பத்திரிக்கைக்கு அளித்த பேட்டியில் சொல்லி உள்ளார். அது அவர் தலையெழுத்து இந்திய அரசியலமைப்பு சட்டம் 176 இன் படி ஆளுநர் அரசு கொடுக்கும் உரையை கட்டாயம் படித்தே ஆக வேண்டும்.

தமிழகத்தில் சட்டம் ஒழுங்கு சரியில்லை என ஆளுநர் சொல்கிறார். ஆனால் உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி சந்திரசூட் இந்தியாவிலேயே தமிழகம் அமைதி பூங்காவாக உள்ளது என சொல்கிறார். நாங்கள் நீதிபதி சொன்னதை ஏற்க வேண்டுமா..? ஆளுநர் சொல்வதை கேட்க வேண்டுமா என தெரியவில்லை. பெட்டி கடைக்கு கூட லாய்க்கு இல்லாதவர் தமிழகத்தின் ஆளுனர். மதுரையில் அமைய உள்ள நூலகத்தில் தமிழ் மற்றும் ஆங்கில புத்தகங்கள் மட்டுமே இருப்பதாக சொல்கிறார். சூசகமாக ஹிந்தி புத்தகம் இல்லை என்பதை ஆளுநர் சொல்லிக் காட்டுகிறார்.

எகிப்து, சிங்கப்பூர் உள்ளிட்ட நாடுகளில் அமைந்திருக்கும் உலகின் பெரிய நூலகங்களை தமிழகத்தில் உள்ள அதிகாரிகள் குழுவை அனுப்பி பார்வையிட்டு, அதேபோல் ஒரு நூலகத்தை உருவாக்க வேண்டும் என்ற அடிப்படையில் மதுரையில் ஒரு நூலகத்தை கட்டிக் கொண்டு தான் இருக்கிறோம். நூலகத்தில் யாராவது புத்தகங்களை வைக்க மறுப்பார்களா..? அனைத்து மொழி புத்தகங்களும் நூலகத்தில் வைக்க ஏற்பாடுகள் செய்யப்பட்டு வருகிறது.

என்னிடம் எந்த மசோதாக்களும் நிலுவையில் இல்லை என ஆளுநர் பொய் சொல்கிறார். ஆளுநரிடம் கிட்டத்தட்ட 15க்கும் மேற்பட்ட மசோதாக்கள் ஒப்புதல் வழங்கப்படாமல் கிடப்பில் போடப்பட்டுள்ளது. எங்களையும் ஆளுநர் மதிக்கவில்லை. அரசியலமைப்புச் சட்டத்தையும் ஆளுநர் மதிக்கவில்லை. எங்களை எதிரிகளைப் போல் பார்த்து வருகிறார். அவர் ஆளுநர் பதவியை ராஜினாமா செய்து விட்டு இடைத்தேர்தலில் போட்டியிட்டு சட்டமன்றத்திற்கு வருகை தரட்டும்.

இடைத்தேர்தலில் கூட நாங்களே அவரை வெற்றி பெற செய்து எம்எல்ஏவாக ஆக்குகிறோம். சட்டமன்றத்தில் வந்து எது தொடர்பாக வேண்டுமானாலும் விவாதிக்கட்டும். இல்லையென்றால் பாஜகவில் சேருங்கள். உங்களை அவர்கள் மந்திரி ஆக்கி விடுவார்கள். ஆளுநரிடம் நாங்கள் வம்பு செய்ய விரும்பவில்லை. யாருக்காக இப்படி எல்லாம் பேசுகிறீர்கள் என்பது எங்களுக்கு தெரியும். கொள்கைக்காக பாடுபடுகிறோம்.

மக்களுக்கு அறிவித்த திட்டங்களை நாங்கள் நிறைவேற்றுவதற்காக பாடுபடுகிறோம். இந்த இயக்கத்தை அழித்து விடலாம் என எத்தனையோ பேர் கங்கணம் கட்டிக் கொண்டிருக்கிறார்கள். இளைஞர்கள் இருக்கும் வரை இந்த கட்சியை அழிக்க முடியாது, என அவர் தெரிவித்தார்.

இந்த நிகழ்ச்சியில் முன்னாள் அமைச்சர் டி.பி.எம். மைதீன்கான், மேயர் சரவணன், துணை மேயர் ராஜூ மற்றும் திமுக நிர்வாகிகள் பொதுமக்கள் கலந்து கொண்டனர்.

Views: - 318

0

0