‘பஸ்ல ஓசியில் பயணமா..?’ அன்று அமைச்சர் பொன்முடி… இன்று அமைச்சர் பன்னீர்செல்வம் ; மீண்டும் வெடித்த சர்ச்சை!!

Author: Babu Lakshmanan
10 May 2023, 4:32 pm

தருமபுரி ; பொம்மிடியில் நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் பெண்களை பார்த்து ஓசியில் பஸ்ஸில் பயணம் செய்கிறீர்களா..? என அமைச்சர் பன்னீர்செல்வம் கேள்வி எழுப்பியது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

தருமபுரி மாவட்டம் பாப்பிரெட்டிப்பட்டி வட்டம் பொம்மிடியில் திமுகவின் இரண்டு ஆண்டுகால சாதனை விளக்க பொதுக்கூட்டம் பாப்பிரெட்டிப்பட்டி மேற்கு ஒன்றிய செயலாளர் சரவணன் தலைமையில் நடைபெற்றது.

இதில் சிறப்பு அழைப்பாளராகளாக வேளாண் மற்றும் உழவர் நலத்துறை அமைச்சர் எம்ஆர்கே பன்னீர்செல்வம், முன்னாள் அமைச்சரும், திமுக தருமபுரி மேற்கு மாவட்ட செயலாளர் பழனியப்பன் மற்றும் திமுக நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர்.

அதனை தொடர்ந்து, அமைச்சர் பன்னீர் செல்வம் பேசுகையில், “நாங்கள் ஆட்சிக்கு வந்தால் மகளிர் இலவசமாக பேருந்தில் பயணம் செய்யலாம் என சொன்னார். அதையே திமுக செய்து விட்டது.

தாய்மார்களாகிய நீங்கள் தற்போது பஸ்ஸில் காசு கொடுத்து செல்கிறீர்களா அல்லது இலவசமாக செல்கீற்களா? என கூட்டத்தை பார்த்து கேள்வி எழுப்பிய அவர், ஆண்கள் காசு கொடுத்து தான் பயணம் செய்கிறார்கள். ஆனால் பெண்கள் எல்லோரும் ஓசியில் காசு இல்லாமல் பஸ்ஸில் இலவசமாக பயணம் செல்கிறீர்கள். மேடையில் அமர்ந்து இருந்த திமுக பெண் நிர்வாகியை பார்த்து நீங்கள் காசு கொடுத்து போறீங்களா இல்ல, ஓசியில போறீங்களா..?” என கேட்டார்.

தொடர்ந்து, ஒகேனக்கல் கூட்டு குடிநீர் திட்டம் ஆரம்பிக்க திட்டமிடப்பட்டு 9 ஆயிரம் கோடி மதிப்பீட்டில் அந்த திட்டம் செயல்படுத்த பட இருக்கிறது. இதுதான் திமுகவின் இரண்டு ஆண்டு கால ஆட்சியின் சாதனை. வீணாக கடலில் கலக்கும் ஒகேனக்கல் தண்ணீரை விவசாய பயன்பாட்டிற்கு பயன்படுத்த வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை வைத்து இருந்தனர்.

அதை நிறைவேற்ற முதல் அமைச்சர் ஒத்துக்கொண்டுள்ளார் கூடிய விரைவில் இந்த திட்டம் இந்த மாவட்டத்தில் செயல்படுத்தப்படும் என தெரிவித்து கொள்கிறேன், என அவர் கூட்டத்தின் மத்தியில் பேசினார்.

ஏற்கனவே அமைச்சர் பொன்முடி, பெண்கள் ஓசியில் பயணிப்பதாகக் கூறியது பெரும் சர்ச்சையை ஏற்படுத்திய நிலையில், தற்போது மற்றொரு அமைச்சர் மீண்டும் சர்ச்சையில் சிக்கியது திமுக அரசுக்கு பெரும் நெருக்கடியை ஏற்படுத்தியுள்ளது.

  • after retro flops Pooja Hegde Unlucky Actress பூஜா ஹெக்டே ராசியில்லாத நடிகையா? அப்போ ஜனநாயகன் கதி?