CM ஸ்டாலின் குறித்து ஆளுநர் சொன்ன அந்த வார்த்தை… ரொம்ப வருத்தமளிக்கிறது : அமைச்சர் பொன்முடி வேதனை!!

Author: Babu Lakshmanan
16 June 2023, 8:26 am
Quick Share

செந்தில் பாலாஜி விவகாரத்தில் ஆளுநரின் நிலைப்பாடு வருந்தத்தக்கது என்று அமைச்சர் பொன்முடி தெரிவித்துள்ளார்.

சட்டவிரோத பணப்பரிவர்த்தனை வழக்கு தொடர்பாக அமலாக்கத்துறை அமைச்சர் செந்தில் பாலாஜியை கைது செய்துள்ளது. கைது நடவடிக்கையின் போது அவருக்கு நெஞ்சு வலி ஏற்பட்டதால், அவர் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார். அவருக்கு பைபாஸ் அறுவை சிகிச்சை செய்ய மருத்துவர்கள் பரிந்துரை செய்துள்ளனர்.

இதனிடையே, அமைச்சர் செந்தில் பாலாஜிக்கு ஜுன் 28ம் தேதி வரை நீதிமன்ற காவல் விதிக்கப்பட்டது. இந்த நீதிமன்ற கஸ்டடியை எதிர்த்து திமுக சார்பில் மனு தாக்கல் செய்யப்பட்டது. இதையடுத்து, ஆயுதப்படையின் பாதுகாப்பு விலக்கி கொள்ளப்பட்டு, நேற்றிரவு 10 மணி முதல் சிறைத்துறை அதிகாரிகள் பாதுகாப்பு பொறுப்பை ஏற்றுக்கொண்டனர். சுமார் 10 போலீசார் செந்தில் பாலாஜி சிகிச்சை பெறும் வார்டு முன்பு பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்.

இந்த சூழலில், செந்தில் பாலாஜி குடும்பத்தினரின் கோரிக்கையை ஏற்று, நீதிமன்றத்தின் அனுமதியின் பேரில், அவர் அறுவை சிகிச்சைக்காக காவேரி மருத்துவமனைக்கு மாற்றப்பட்டார்.

அமைச்சர் செந்தில்பாலாஜி கைதாகி சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதித்திருக்கும் இந்த வேளையில், அவர் வகித்த பதவியை முதல்வர் ஸ்டாலின், அமைச்சர் தங்கம் தென்னரசு மற்றும் முத்துச்சாமிக்கு கூடுதலாக பதவியை ஒதுக்கி தமிழக ஆளுநருக்கு பரிந்துரை செய்தார். இதற்கான கடிதம் அரசு தரப்பு மூலம் ஆளுநரிடம் கொடுக்கப்பட்டது.

இதைக்கண்ட ஆளுநர் ரவி இந்தக் கடிதத்தை நான் ஏற்றுக்கொள்ள முடியாது என்றும், இந்தக் கடிதத்தில் அமைச்சர் செந்தில்பாலாஜிக்கு நெஞ்சுவலி ஏற்பட்டு இருக்கிறது மட்டும் குறிப்பிட்டு இருப்பதாகவும், செந்தில்பாலாஜி அமலாக்கத்துறை மூலம் குற்றவாளி என கைது செய்யப்பட்டு இருப்பதை கடிதம் மூலம் தமிழக அரசு தெரியப்படுத்தவில்லை என தெரிவித்துள்ளார்.

எனவே, செந்தில் பாலாஜியை இலாகா இல்லாத அமைச்சராக குறிப்பிட்டுள்ளதால் இலாகா மாற்றத்தை நான் பரிந்துரைக்க முடியாது என ஆளுநர் மாளிகை கடிதத்தை திருப்பி அனுப்பியுள்ளது.

இந்நிலையில், நேற்றிரவு இது தொடர்பாக அமைச்சர் பொன்முடி செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறியதாவது :- செந்தில்பாலாஜியை அமைச்சர் பதவியில் இருந்து நீக்குமாறு ஆளுநர் கோரினார். அதோடு செந்தில் பாலாஜியின் இலாக்காக்களை பிற அமைச்சர்களுக்கு பிரித்து கொடுக்கும் அரசின் பரிந்துரையையும் அவர் ஏற்க மறுத்து விட்டார். வழக்கு இருப்பதால் ஒரு அமைச்சரை நீக்க வேண்டும் என்று அவசியமில்லை. உள்துறை அமைச்சரான அமித்ஷா மீது வழக்கு நிலுவையில் இருக்கிறது. அவர் அமைச்சர் பதவியில் நீக்கப்பட்டாரா..?

மேலும், முதலமைச்சர் கூறும் காரணங்கள் “Misleading and incorrect” என ஆளுநர் கூறியிருப்பது வருந்ததக்கது. ஆளுநர் ஆர்.என்.ரவி பாஜக பிரதிநிதி போல் செயல்படுகிறார். இறுதியாக இலாகா இல்லாத அமைச்சராக செந்தில்பாலாஜி தொடருவார் என்பதே முதலமைச்சர் மு.க ஸ்டாலின் எடுத்த முடிவு, என அமைச்சர் பொன்முடி கூறினார்.

Views: - 233

0

0