செந்தில் பாலாஜிக்கு தொடங்கியது பைபாஸ் அறுவை சிகிச்சை… 3 மணி நேரம் நடக்கும் ஆபரேசன்.. முழு விபரம் இதோ…!!

Author: Babu Lakshmanan
21 June 2023, 8:23 am
Quick Share

சென்னை காவேரி மருத்துவமனையில் அமைச்சர் செந்தில் பாலாஜிக்கு பைபாஸ் அறுவை சிகிச்சை தொடங்கியது

சட்டவிரோத பணப்பரிமாற்ற தடைச்சட்ட வழக்கில் கைது செய்யப்பட்ட அமைச்சர் செந்தில் பாலாஜியை விடுவிக்க உத்தரவிட வேண்டும் என அவருடைய மனைவி மேகலா சென்னை ஐகோர்ட்டில் ஆட்கொணர்வு மனு தாக்கல் செய்தார்.

இந்த மனுவை கடந்த 15-ந் தேதி விசாரித்த ஐகோர்ட்டு, செந்தில் பாலாஜியை பரிசோதித்து இரு மருத்துவக் குழுவினர் அளித்த அறிக்கையை சந்தேகிக்க முடியாது எனக் கூறி, அவர் தனியார் ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற அனுமதி அளித்து உத்தரவிட்டது.

தற்போது அமலாக்கத்துறை காவலில் இருக்கும் செந்தில் பாலாஜிக்கு ரத்த நாளங்களில் அடைப்பு கண்டறியப்பட்டதால் பைபாஸ் அறுவை சிகிச்சை செய்ய முடிவு செய்யப்பட்டது. அதன்படி, செந்தில்பாலாஜிக்கு இன்று காலை 4 மணிக்கு அறுவை சிகிச்சை நடைபெறும் என தெரிவிக்கப்பட்டிருந்தது.

இந்த நிலையில், காவேரி மருத்துவமனையின் ஏழாவது தளத்தில் உள்ள ஸ்கை வியூ என்ற அறையில் அமைச்சர் செந்தில் பாலாஜிக்கு பைபாஸ் அறுவை சிகிச்சை தொடங்கியது. மூத்த மருத்துவர் ரகுராமன் தலைமையில் மருத்துவக் குழுவினர் மேற்கொண்டு வருகின்றனர்.

அறுவை சிகிச்சைக்கு முன்பு அளிக்கப்படும் அனஸ்தீசியா எனப்படும் மயக்க மருந்து காலை 5 மணிக்கு வழங்கப்பட்டது. மயக்கவியல் துறை மூத்த மருத்துவர்கள் குழு செந்தில் பாலாஜியின் உடல் நிலையை கண்காணித்து வருகின்றனர். இந்த அறுவை சிகிச்சை 3 முதல் 4 மணிநேரம் நடைபெறும் என மருத்துவ வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

பொதுவாக, பைபாஸ் அறுவை சிகிச்சை செய்யும் நோயாளிகள், சாதாரணமாக ஒன்று முதல் 2 நாட்கள் தீவிர சிகிச்சை பிரிவில் இருக்க வேண்டும். பைபாஸ் செய்தால் ஒரு மாதம் வரை ஓய்வில் இருப்பது அவசியம். பழைய நிலைமைக்கு திரும்ப 3 மாதங்கள் வரை ஆகும்.பைபாஸ் சிகிச்சை நடைமுறைகள் நோயாளிகளை பொறுத்து சற்று வேறுபடலாம். பைபாஸ் சிகிச்சை பெற்றவர்களை 7 நாட்களுக்கு பிறகு தான் டிஸ்சார்ஜ் செய்வார்கள்.

எனவே, அமலாக்கத்துறையினர் காவல் முடிய 3 நாட்கள் உள்ள நிலையில், அறுவை சிகிச்சை செய்யப்பட்டுள்ளதால், அமைச்சர் செந்தில் பாலாஜியை கஸ்டடியில் எடுத்து விசாரிப்பதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது.

Views: - 304

0

0