இதுக்கே இப்படியா..? பாஜகவுக்கு பயம் வந்தாச்சு… அதன் வெளிப்பாடு தான் இது ; அமைச்சர் உதயநிதி பரபர பேட்டி..!!

Author: Babu Lakshmanan
1 September 2023, 4:02 pm
Quick Share

I.N.D.I.A. கூட்டணியின் கூட்டம் நடைபெறும் நேரத்தில் ஒரே நாடு ஒரே தேர்தல் சிறப்பு குழு அமைக்கப்பட்டுள்ளதாக அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

தேசிய அளவிலான விளையாட்டுப் போட்டிகளில் பதக்கங்கள் வெல்லும் மாற்றுத்திறனாளி வீரர், வீராங்கனைகளுக்கு உயரிய ஊக்கத்தொகை வழங்கிட அரசாணை பிறப்பித்த தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு நன்றி தெரிவிக்கும் விழா சென்னை நேரு உள் விளையாட்டு அரங்கத்தில் நடைபெற்றது. இந்த நிகழ்வில் அமைச்சர் உதயநிதி ஸ்டாலின், பாரா ஒலிம்பிக் போட்டியில் தங்க பதக்கம் வென்ற தங்கவேல் மாரியப்பன் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

நிகழ்ச்சியின் மேடையில் அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் கூறியதாவது :- அமைச்சராக பொறுப்பேற்று 9 மாதங்களாகிறது. முதல் முறையாக இந்த அரசுக்கு விளையாட்டு வீரர்கள் நடத்தும் பாராட்டு விழா என்பதால் மகிழ்ச்சியாக உள்ளது. இந்த அரசாணை மாற்றுதிறனாளிகளின் வாழ்க்கையே மாற்றிக்காட்டும் அரசாணை.

தேசிய அளவிலான போட்டியில் தங்க பதக்கம் வெல்வோருக்கு 5 லட்சமும், வெள்ளி பதக்கம் பெல்வோருக்கு 3 லட்சமும், வெண்கல பதக்கம் வெல்வோருக்கு 2 லட்சமும். அதே போல், ஜூனியர் லெவலில் தங்கம் – 3 லட்சம், வெள்ளி – 2 லட்சம், வெண்கலம் வெல்வோருக்கு 1.50 லட்சமும் ஊக்கத்தொகையாக வழங்கப்படும்.

உடல் அளவில் மற்றும் இன்றி மன அளவில் மாற்றிதிறனாளியாக உள்ளவர்களையும் கண்டறிந்து அவர்கள் சாதிக்க தேவையான அனைத்தையும் செய்து வருகிறோம். 6 பாரா ஸ்போர்ட்ஸ் அகாடமி அமைக்கப்படும் என பட்ஜெட்டில் அறிவித்துள்ளோம். விளையாட்டு என்றால் வீடுகளில் எளிதில் விட மாட்டார்கள். முதலில் படி, விளையாட்டு அப்புறம் என்பார்கள். அதுவும் மாற்றுதிறனாளிகளுக்கு மிகவும் கடினம். அவர்கள் தேசிய அளவில் வெற்றி பெறுவது அவ்வளவு எளிமையான விஷயம் அல்ல. அதனால் தான் தேசிய அளவில் வெற்றி பெறுவோர்க்கு ஊக்கத்தொகை வழங்கப்பட உள்ளது.

இந்த வருடம் புனேவில் நடைபெற்ற தேசிய அளவிலான போட்டிகளில் வெற்றி பெற்ற மாற்றுதிறனாளி வீரர், வீராங்கனைகளுக்கு ஊக்கத்தொகை வழங்கப்படும் மாற்றிதிறனாளி வீரர், வீராங்கனைகள் இந்த வாய்ப்பை சரியாக பயன்படுத்திக்கொண்டு சர்வதேச அளவில் சென்று சாதனை படைக்க வேண்டும், என தெரிவித்துள்ளார்.

தொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்த அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் பேசியதாவது:- ஒரே நாடு ஒரே தேர்தல் சிறப்பு குழு அமைத்தது தொடர்பான கேள்விக்கு, ஒன்றிய பாஜக அரசு ஆரம்பித்தில் இருந்தே ஒரே நாடு, ஒரே மதம், ஒரே மொழி என வலியுறுத்தி வருகிறார்கள்.  இதை திமுக தொடர்ந்து எதிர்க்கும், என்றார்.

மும்பையில் இந்திய கூட்டணியின் 3 நாள் கூட்டம் நடைபெறும் நேரத்தில் சிறப்புக் குழு அமைத்தது தொடர்பான கேள்விக்கு, ‘அவர்கள் பயத்தில் உள்ளனர். மணிப்பூர் விவகாரம், பெங்களூரு தேர்தலை தொடர்ந்து 3வது கூட்டம் கூடி உள்ளது.  என்ன கொள்கை வித்தியாசம் இருந்தாலும், பாஜக அரசை ஒழிக்க வேண்டும் என்ற நோக்கத்துக்காக ஒன்று கூடியுள்ளோம். அது அவர்களுக்கு பயத்தை ஏற்படுத்தியுள்ளது. சிறப்பு பாராளுமன்ற கூட்டத்தையும் கூட்ட உள்ளனர். இதுவரை அப்படி நடந்தது இல்லை. இது அவர்களின் பயத்தின் வெளிபாடுதான், என தெரிவித்துள்ளார்.

Views: - 316

0

0