திமுகவுடன் கமல் போடும் கூட்டணி…? அந்த 2 தொகுதிகளுக்காக மல்லுக்கட்டும் ம.நீ.ம ; கமல் போட்டியிடும் தொகுதி இதுவா..?

Author: Babu Lakshmanan
2 February 2024, 2:21 pm
Quick Share

திமுகவுடன் கூட்டணி பேச்சுவார்த்தை நடத்தி வரும் மக்கள் நீதி மய்யம் 2 தொகுதிகளை கேட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

நாடாளுமன்ற தேர்தல் தேதி இந்த மாத இறுதியில் அறிவிக்கப்பட வாய்ப்புள்ளது. இதனையடுத்து, அடுத்த இரண்டு மாதங்களில் நாடு முழுவதும் தேர்தல் நடத்தி முடிக்கப்படும். 3வது முறையாக ஆட்சியை தக்கவைக்க பாஜக ஏற்கனவே களத்தில் இறங்கி தேர்தல் பணியை தொடங்கியுள்ளது. அதேவேளையில், பாஜகவை தோற்கடிக்க வேண்டும் என்ற ஒற்றை நோக்கில் காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்கட்சிகளும் ஒருங்கிணைந்து தேர்தல் பணியை தீவிரம் காட்டி வருகின்றன.

இந்த நிலையில், தமிழகத்தை பொறுத்தவரை திமுக, அதிமுக, பாஜக, நாம் தமிழர் என 4 முனை போட்டி இருக்கும் என தற்போது நிலையில் தெரிகிறது. தேர்தல் வேலைகளுக்காக தனித்தனி குழுக்களை அமைத்து திமுக மற்றும் அதிமுக அதற்கான பணிகளை தொடங்கியுள்ளது.

திமுக கூட்டணியில் காங்கிரஸ், கம்யூனிஸ்ட், விடுதலை சிறுத்தைகள், மதிமுக, முஸ்லிம் லீக் உள்ளிட்ட கட்சிகள் இடம்பெற்றுள்ளன. கடைசியாக நடைபெற்ற இடைத்தேர்தலில் திமுகவுக்கு ஆதரவு தெரிவித்த கமல்ஹாசனின் மக்கள் நீதி மய்யம், இந்த கூட்டணியில் அதிகாரப்பூர்வமாக இணையும் என எதிர்பார்க்கப்படுகிறது. இது தொடர்பாக இரு கட்சியினரிடையே பேச்சுவார்த்தை நடந்து வருவதாகவும் சொல்லப்படுகிறது.

திமுக கூட்டணியை பொறுத்தவரை காங்கிரஸ் கட்சிக்கு 7 அல்லது 8 இடங்கள் ஒதுக்கப்படும் என தெரிகிறது. கம்யூனிஸ்ட் மற்றும் விடுதலை சிறுத்தை கட்சிக்கு தலா 2 இடங்களும், முஸ்லிம் லீக் கட்சிக்கு ஒரு இடமும் வழங்கப்பட இருப்பதாக சொல்லப்படுகிறது. எனவே, மக்கள் நீதி மய்யத்திற்கு இரண்டு இடங்கள் ஒதுக்கப்படும் என கூறப்படுகிறது. அதுவும், தென்சென்னை மற்றும் கோவை தொகுதிகளை அந்தக் கட்சிக்கு ஒதுக்க இருப்பதாக தெரிகிறது.

இந்த இரண்டு தொகுதியில் ஒரு தொகுதியில் கமல்ஹாசன் போட்டியிட வாய்ப்பு உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. திமுக கூட்டணியில் உள்ள காங்கிரஸ் கட்சியோடு முதல்கட்ட பேச்சுவார்த்தை முடிவடைந்த நிலையில், அடுத்தாக மற்ற கூட்டணி கட்சிகளோடு அடுத்த 2 தினங்கள் பேச்சுவார்த்தை நடைபெறுகிறது. இந்தப் பேச்சுவார்த்தைகளுக்கு பிறகு, திமுகவுடனான கூட்டணி குறித்த அறிவிப்பை மக்கள் நீதி மய்யம் வெளியிடும் என்று தகவல் வெளியாகியுள்ளது.

Views: - 221

0

0