முதலமைச்சரின் உயர்வை படம்பிடிக்க வேண்டியது சரித்திர அவசியம் ; படிப்படியாக வளர்ந்தவர் CM ஸ்டாலின் : கமல்ஹாசன் புகழாரம்!!

Author: Babu Lakshmanan
28 February 2023, 2:30 pm
Quick Share

சென்னை : முதலமைச்சரின் உயர்வை படம்பிடிக்க வேண்டியது சரித்திர அவசியம் என்று மக்கள் நீதி மய்யம் தலைவர் கமல்ஹாசன் தெரிவித்தார்.

முதலமைச்சர் ஸ்டாலினின் பிறந்த நாளையொட்டி அமைச்சர் சேகர்பாபுவின் ஏற்பாட்டில் சென்னையில் புகைப்பட கண்காட்சி இன்று தொடங்கியது. “எங்கள் முதல்வர் எங்கள் பெருமை” என்ற பெயரில் 12ம் தேதி வரை நடக்கும் முதலமைச்சரின் 70 ஆண்டு பயண புகைப்பட கண்காட்சியை மக்கள் நீதி மய்யம் தலைவரும், நடிகருமான கமல்ஹாசன் தொடங்கி வைத்தார்.

கண்காட்சியை திறந்துவைத்த பிறகு கமல்ஹாசன் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது, அவர் கூறியதாவது :-கருணாநிதி மகன் ஸ்டாலின் என்ற காலத்தில் இருந்து அவருடன் எனக்கு நட்பு இருந்தது. நெருங்கிய நட்பு என்று கூறமுடியாது. ஆனால் நட்பு இருந்தது. அது அரசியலுக்கு அப்பாற்பட்டது என்று இரண்டு பேரும் வெளிப்படுத்திக் கொண்டு இருக்கிறோம்.

ஒரு பெரிய தலைவருக்கு மகனாக இருப்பதில் சந்தோஷம் நிறைய உண்டு என்றாலும், சவால்களும் நிறைய உண்டு. சந்தோஷத்தையும் அனுபவித்து, சவால்களையும் ஏற்று படிப்படியாக உயர்ந்தவர் மு.க.ஸ்டாலின். இது அவரின் பொறுமையை மட்டுமல்ல, திறமையையும் காட்டுகிறது. தன் திறமையால் தன்னை நிரூபித்து இந்த நிலைக்கு வந்துள்ளார்.

சரித்திரத்தை மாற்றி எழுத பலர் துடித்துக் கொண்டு உள்ளனர். குறிப்பாக தமிழர்களின் சரித்திரத்தை மாற்றி எழுத பலர் துடித்துக் கொண்டு உள்ளனர். அதற்கு சவால்விடுவது போல் நாம் சரித்திரத்தை நினைவு கொள்ள வேண்டும், எனக் கூறினார்.

அப்போது, நாடாளுமன்ற தேர்தலில் திமுகவுடனான கூட்டணியை இதன்மூலம் உறுதி செய்து கொள்ளலாமா..? என்று செய்தியாளர்கள் கேள்வி எழுப்பினர். இதற்கு பதிலளித்த கமல்ஹாசன், “திமுகவுடன் கூட்டணி குறித்து இப்போது எதுவும் சொல்ல முடியாது. சீன் பை சீன் ஆகதான் செல்ல வேண்டும். இப்போதே கிளைமேக்ஸ்-க்கு செல்லக் கூடாது,” எனக் கூறினார்.

Views: - 333

0

0