பொன்முடிக்கு மேலும் சிக்கல்.. தண்டனையை நிறுத்தி வைக்க முடியாது : கையை விரித்த உச்சநீதிமன்றம்!!

Author: Udayachandran RadhaKrishnan
29 January 2024, 1:16 pm
Ponmudi
Quick Share

பொன்முடிக்கு மேலும் சிக்கல்.. தண்டனையை நிறுத்தி வைக்க முடியாது : கையை விரித்த உச்சநீதிமன்றம்!!

தமிழ்நாட்டில் 2006 – 2011 ஆம் ஆண்டுகளில் உயர்கல்வித் துறை அமைச்சராக பொன்முடி பதவி வகித்தார். அப்போது, வருமானத்துக்கு அதிகமாக ரூ.1.75 கோடி சொத்து சேர்த்ததாக பொன்முடி, அவருடைய மனைவி விசாலாட்சி மீது 2011-ல் லஞ்ச ஒழிப்புத்துறை வழக்கு பதிவு செய்தது. இந்த வழக்கை விசாரித்த விழுப்புரம் சிறப்பு நீதிமன்றம், பொன்முடி மற்றும் அவருடைய மனைவி விசாலாட்சியை விடுதலை செய்து கடந்த 2016 ஆம் ஆண்டு தீர்ப்பளித்தது.

இந்த தீர்ப்பை எதிர்த்து லஞ்ச ஒழிப்புத்துறை தரப்பில் தாக்கல் செய்யப்பட்ட மேல்முறையீட்டு வழக்கை விசாரித்த சென்னை உயர் நீதிமன்ற நீதிபதி ஜெயச்சந்திரன், இருவரையும் விடுதலை செய்து சிறப்பு நீதிமன்றம் பிறப்பித்த தீர்ப்பை ரத்து செய்து கடந்த ஆண்டு டிசம்பர் 19-ந் தேதி தீர்ப்பளித்தார். மேலும், பொன்முடி மற்றும் அவரது மனைவி விசாலாட்சிக்கு 3 ஆண்டு சிறை தண்டனை விதித்தும் உத்தரவிட்டார்.

அதோடு, தீர்ப்பை எதிர்த்து மேல்முறையீடு செய்ய ஏதுவாக, சிறை தண்டனையை 30 நாட்களுக்கு சென்னை உயர்நீதிமன்றம் நிறுத்தி வைத்தது. இதனிடையே, சிறை தண்டனை விதிக்கப்பட்டால், பொன்முடி வகித்து வந்த அமைச்சர் மற்றும் எம்எல்ஏ பதவியை இழந்தார்.

இதனிடையே, உச்சநீதிமன்றத்தில் பொன்முடி தரப்பில் 3 ஆண்டுச் சிறை தண்டனைக்கு எதிராக மேல்முறையீட்டு மனுத்தாக்கல் செய்யப்பட்டது.

இந்த மேல்முறையீட்டு மனு விசாரணையில் பொன்முடி, அவரின் மனைவி ஆகியோர் இந்த வழக்கில் சரணடைவதில் இருந்து உச்சநீதிமன்றம் விலக்கு அளித்து தீர்ப்பு வழங்கியது. அதேவேளையில், உயர்நீதிமன்றம் வழங்கிய தண்டனைக்கு எந்த தடையும் இல்லை என்று தீர்ப்பளிக்கப்பட்டது.

இந்தநிலியல் இன்று நடந்த விசாரணையில் பொன்முடி, மனைவி விசாலாட்சிக்கு விதிக்கப்பட்ட 3 ஆண்டு சிறை தண்டனையை நிறுத்தி வைக்க உச்சநீதிமன்றம் மறுத்தது. மேலும் பொன்முடி தாக்கல் செய்த மேல்முறையீட்டு மனு மீது தமிழ்நாடு லஞ்ச ஒழிப்பு போலீசார் பதிலளிக்க நோட்டீஸ் அனுப்பவும் உச்சநீதிமன்றம் உத்தரவிட்டது. 4 வாரங்களில் லஞ்ச ஒழிப்புப் போலீசார் பதிலளிக்க வேண்டும் என்பது உச்சநீதிமன்றத்தின் உத்தரவு.

Views: - 211

0

0