முரசொலி எல்லாம் ஒரு பேப்பரா…? அதை எல்லாம் படிக்க முடியுமா..? : சிலந்தி கட்டுரைக்கு தமிழிசை சவுந்தரராஜன் சாட்டையடி..!!

Author: Babu Lakshmanan
8 November 2022, 10:05 am
Quick Share

தன்னை விமர்சித்து கட்டுரை வெளியிட்ட திமுக அதிகாரப்பூர்வ நாளேடான முரசொலிக்கு தெலங்கானா ஆளுநர் தமிழிசை சவுந்தரராஜன் பதிலடி கொடுத்துள்ளார்.

திமுகவின் அதிகராரப்பூர்வ நாளேடான முரசொலியில் அரசியல் கருத்துக்களையும், விமர்சனங்களையும் வெளிப்படையாக வெளியிட்டு வருகிறது. குறிப்பாக, பாஜக மாநில தலைவர் அண்ணாமலை, ஆளுநர் ஆர்என் ரவி குறித்து அண்மையில் சர்ச்சைக்குண்டான தலைப்புகளில் கட்டுரைகளை வெளியிட்டு பரபரப்பை ஏற்படுத்தியது.

திமுகவும், அதன் கூட்டணி கட்சிகளும் தமிழக ஆளுநரை திரும்பப் பெற வேண்டும் என்று வலியுறுத்தி வந்த நிலையில், மாற்று கருத்து கூறினால் உடனே ஆளுநரை திரும்ப பெற கோருவதா என விவாத நிகழ்ச்சிகளில் தெலங்கானா மற்றும் புதுச்சேரி (பொறுப்பு) துணை நிலை ஆளுநரான தமிழிசை கேள்வி எழுப்பியிருந்தார். அவரது இந்தப் பேச்சுக்கு திமுகவினர் பதிலடி கொடுத்து வருகின்றனர்.

குறிப்பாக, முரசொலியில் தெலங்கானகானாவில் ஜம்பம் பலிக்கவில்லை என்பதால், தமிழிசை எல்லைத் தாண்டி மூக்கை நுழைப்பதாக விமர்சித்திருந்தது. இதற்கு பதிலடி கொடுத்த தமிழிசை, சிலந்தி என்ற பெயரில் உலா வரும் மூட்டை பூச்சிகளின் சாயம் வெளுக்கிறது. நானா அன்னியர், தமிழச்சியான என்னை அன்னியர் என கூறுகிறார்கள். தமிழகம் குறித்து நான் பேசக் கூடாது என கூறுவதற்கு இவர்களுக்கு உரிமை அல்ல. வீட்டில் தெலுங்கு பேசும் இவர்கள்தான் தமிழை வளர்க்கிறேன் என வேஷம் போடுகிறார்கள். நான் பிறந்த மாநிலம் தமிழகம், எனது ஊர் தமிழகத்தில் உள்ளது. எனவே தமிழிசைக்கு தமிழகத்தில் பேசுவதற்கு உரிமை இல்லை என சொல்வதற்கு யாரும் உரிமை கிடையாது, எனக் கூறினார்.

தமிழிசையின் கருத்துக்கு முரசொலியில் இருந்து பதில் கருத்து கட்டுரையாக வெளியிடப்பட்டிருந்தது. அதில், “தன்னை பற்றி அதீதமான கற்பனையில் தமிழிசை மிதக்கிறர். எதிர்ப்பைக் கண்டதும் ஓட்டுக்குள் பதுங்கிடும் நத்தை, அந்த ஓடு இமயமலை போன்றது என எண்ணிக் கொள்ளும். தமிழிசை பதில் அந்த ரகத்தை சேர்ந்ததுதான். மடுக்கள் தங்களை மலையாக கருதலாம். மக்களுக்கு தெரியாதா மலை எது, மடு எது என்பது. தெலுங்கானாவில் பூச்சாண்டி தெலுங்கானாவில் காட்ட வேண்டிய பூச்சாண்டியை அங்கு காட்ட முடியாததால் சிலந்தியிடம் காட்டி பார்க்கிறார். இந்த பூச்சாண்டி அல்ல. இதற்கு மேல் படுபயங்கர பூச்சாண்டிகளை எல்லாம் கண்டவர்கள் நாங்கள். இங்கே மிரட்டல் பருப்புகள் வேகாது,” எனக் குறிப்பிடப்பட்டிருந்தது.

இந்த நிலையில், சென்னை விமான சிலையத்தில் செய்தியாளர்களை சந்தித்த தமிழிசை சவுந்தரராஜன், முரசொலி நாளிதழுக்கும், திமுகவுக்கு பதிலடி கொடுத்துள்ளார். அவர் பேசியதாவது :- இடியொலியே என்னை ஒன்னும் செய்ய முடியாத போது, முரசொலி என்னை என்ன செய்யும். தமிழகம் நான் பிறந்த மாநிலம். நான் பேசுவதை யாராலும் தடுக்க முடியாது. முரசொலியெல்லாம் நான் ரெகுலராக படிப்பதே இல்லை. அது படிக்கக் கூடிய பத்திரிகையும் இல்லை என்பது என்னுடைய கருத்து, எனக் கூறியுள்ளார்.

Views: - 405

0

1