சீமானின் ‘கரும்பு விவசாயி’க்குவந்த சோதனை?…தேர்தல் ஆணையம் வைத்த செக்!

Author: Udayachandran RadhaKrishnan
16 February 2024, 9:12 pm
seeman
Quick Share

ஒவ்வொரு தேர்தலிலும் படிப்படியாக வளர்ச்சி கண்டு வரும் சீமானின் நாம் தமிழர் கட்சிக்கு ஏதாவது ஒரு வகையில் புதிது புதிதாக சிக்கல் முளைத்துக் கொண்டேதான் இருக்கிறது.

முதலில் தடை செய்யப்பட்ட விடுதலைப்புலிகள் அமைப்பினரிடம் வெளிநாடுகளில் இருந்து நன்கொடை பெற்றதாக கூறப்படுவது தொடர்பாக இரண்டு வாரங்களுக்கு முன்பு என்ஐஏ அதிகாரிகள் அவருடைய கட்சி நிர்வாகிகள் ஆறு பேரின் வீடுகளில் அதிரடி ரெய்ட் நடத்தினர். அப்போது பத்துக்கும் மேற்பட்ட செல்போன்கள், பென்டிரைவ்களை அவர்கள் கைப்பற்றவும் செய்தனர்.

இதில் நம்பத் தகுந்த ஆதாரங்கள் ஏதாவது என்ஐஏவுக்கு கிடைத்ததால் அவருடைய கட்சி தேர்தலிலேயே போட்டியிட முடியாத அளவிற்கு தடை செய்யப்படும் என்ற பரபரப்பான செய்தி அப்போது அத்தனை ஊடகங்களிலும் வெளியானது.

இந்த அதிர்ச்சியில் இருந்தே சீமான் இன்னும் மீண்டதாக தெரியவில்லை. அதற்குள் அவருக்கு இன்னொரு புதிய தலைவலியும் உருவாகிவிட்டது. அது அவருடைய அடி மடியிலேயே கை வைப்பது போலவும் அமைந்து விட்டது.

ஆம், நாம் தமிழர் கட்சியின் கரும்பு விவசாயி சின்னத்தை எதிர் வரும் நாடாளுமன்ற தேர்தலுக்காக கர்நாடவைச் சேர்ந்த 45 வயது வீரா ரெட்டி என்பவர் நடத்தும் பாரதிய பிரஜா ஐக்கியதா கட்சிக்கு தலைமை தேர்தல் ஆணையம் ஒதுக்கி உள்ளது. முன்பு ஊடக செய்தியாளராக பணியாற்றிய வீரா ரெட்டி 11 மாநிலங்களில் போட்டியிடப் போவதாக கூறி கடந்த சில தினங்களுக்கு முன்னர்தான் கரும்பு விவசாயி சின்னத்தை பெற்றும் இருக்கிறார். இது நாம் தமிழர் கட்சி தொண்டர்களையும், அதன் ஒருங்கிணைப்பாளர் சீமானையும் பலத்த அதிர்ச்சியடைய வைத்து உள்ளது. 

ஏனென்றால் 2016 தமிழக சட்டப்பேரவைத் தேர்தலில் தனித்து போட்டியிட்ட நாம் தமிழர் கட்சிக்கு ஒரு சதவீத வாக்குதான் கிடைத்தது. இது 2019 நாடாளுமன்றத் தேர்தலில் நான்கு சதவீதமாக அதிகரித்தது. 2021 தமிழகத் தேர்தலிலும் தனித்து களம் இறங்கிய சீமான் கட்சிக்கு 6.67 சதவீத ஓட்டுகள் கிடைத்தன.

குறிப்பாக கடந்த இரண்டு தேர்தல்களில் நாம் தமிழர் கட்சி வேட்பாளர்கள் தனித்து போட்டியிட்டு திமுக, அதிமுக, பாஜக என பிற கட்சி வேட்பாளர்களுக்கு நெருக்கடியும் கொடுத்தனர். கணிசமான வாக்குகளைப் பெற்று, பல இடங்களில் வெற்றி தோல்வியை நிர்ணயிப்பவர்களாகவும் அக் கட்சியின் வேட்பாளர்கள் மாறினர். தவிர இது காங்கிரஸ், விசிக, அமமுக போன்ற கட்சிகளுக்கு பலத்த சவால் விடுவது போலவும் அமைந்தது.

அதேநேரம் 2016, 2019, 2021 என மூன்று தேர்தல்களிலும் சீமான் கட்சி சார்பில் மக்கள் பிரதிநிதிகள் யாரும் வெற்றி பெறவில்லை. என்றாலும் கூட, அவருடைய கட்சியுடன் கூட்டணி வைக்கவேண்டும் என்ற ஆசையை பல கட்சிகளுக்கு தூண்டியும் விட்டது. குறிப்பாக பிரதான எதிர் கட்சியான அதிமுக வரும் நாடாளுமன்றத் தேர்தலில் நாம் தமிழர் கட்சியுடன் கூட்டணி அமைத்துப் போட்டியிடவும் விரும்பியது. ஆனால் அதை சீமான் ஏற்கவில்லை. நாங்கள் எந்தத் தேர்தலிலும், யாருடன் கூட்டணி அமைக்க மாட்டோம். தனித்தேதான் களமிறங்குவோம் என்று அவர் தடாலடியாக மறுத்தும் விட்டார்.

ஒவ்வொரு தேர்தலிலும் படிப்படியாக முன்னேறி 15 சதவீதத்தை தாண்டிவிட்டால் நிச்சயம் ஆரேழு எம்எல்ஏக்களும், ஒரு சில எம்பிக்களும் நமக்கு கிடைத்து விடுவார்கள். அதன் பிறகு கூட்டணி அமைப்பது பற்றி யோசிக்கலாம் என்று சீமான் நினைத்து இருக்கலாம்.

ஆனால் இப்படி கூட்டணி சிந்தனை துளி கூட அவரிடம் இல்லாமல் போனதுதான், தற்போது கட்சியின் சின்னத்தை இழக்கக்கூடிய நிலையை அவருக்கு ஏற்படுத்தி விட்டது என்றே சொல்லவேண்டும்.

பொதுவாக, அங்கீகரிக்கப்படாத அரசியல் கட்சிகள், ஒவ்வொரு தேர்தலிலும் தங்களுக்கு எந்த சின்னம் வேண்டுமோ, அதை தேர்தல் ஆணையத்திடம் கேட்டு பெற வேண்டும் என்பது விதி முறை.

அதேநேரம் அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சிகளாக அந்தஸ்து பெறவேண்டும் என்றால் தேர்தல் ஆணையம் விதிக்கும் சில நிபந்தனைகளை பூர்த்தி செய்ய வேண்டும். அதை நிறைவேற்றினால் அதற்கு சில தனிச்சலுகைகள் தரப்படும். அதன் மூலம் கட்சிக்கு சின்னம் கிடைப்பது தொடங்கி மத்திய அரசுக்கு சொந்தமான தொலைக்காட்சிகளில் பிரச்சாரம் செய்வது வரை பல சலுகைகளும் கிடைக்கும்.

குறிப்பாக மாநில சட்டப்பேரவை தேர்தலில் பதிவான வாக்குகளில் 6 சதவீதம் பெற்றிருப்பது அவசியம். அதுமட்டுமின்றி அந்தத் தேர்தலில் 2 இடங்களில் வெற்றியும் பெற்றிருக்கவேண்டும். அல்லது அந்த மாநிலத்தில் நடைபெறும் நாடாளுமன்ற தேர்தலில் பதிவான வாக்குகளில் 6 சதவீதமும் அத்துடன் அந்தத் தேர்தலில் ஒரு எம்பி தொகுதியில் வெற்றியும் பெற்றிருக்கவேண்டும். அல்லது மாநில சட்டப்பேரவை தேர்தலில் மொத்தமுள்ள தொகுதிகளில் 3 சதவீத இடங்களில் வெற்றி பெறுவதும் அவசியம்.

தலைமை தேர்தல் ஆணையத்தின் இந்த நிபந்தனைகளில் சீமான் கட்சியிடம் அங்கீகரிக்கப்படுவதற்கு தேவையான ஓட்டு சதவீதம் இருக்கிறது. அதேநேரம் ஒரு எம்பியோ, எம்எல்ஏவோ அக்கட்சிக்கு இல்லை.

அதனால் அவர் வழக்கம்போல் தலைமை தேர்தல் ஆணையத்திடம் தனது கட்சிக்கான சின்னத்தை கேட்டு பெறும் நிலையில்தான் இருந்து வந்தார். இதுதான் அவருக்கு சிக்கலை கொடுத்து விட்டது. இதை யாரோ உன்னிப்பாக கவனித்து புதிய கட்சி தொடங்கி கரும்பு விவசாயி சின்னத்தையும் கைப்பற்றி விட்டனர்.

இத்தனைக்கும் பாரதிய பிரஜா ஐக்கியதா கட்சி தமிழகம், கர்நாடகா, ஆந்திரா, தெலுங்கானா, கேரளா, மராட்டியம் ,பஞ்சாப் உள்ளிட்ட 11 மாநிலங்களில் நாடாளுமன்றத் தேர்தலை சந்திக்கப் போவதாக தேர்தல் ஆணையத்திடம் தெரிவித்து இருந்தாலும் கூட அக்கட்சியின் இணையதளத்திற்குள் சென்று பார்த்தால் அதன் அடிப்படை கட்டமைப்பு மிக மிக குறைவாக இருப்பதை பார்க்க முடிகிறது. அதேநேரம் நாட்டின் நலன், வளர்ச்சி, ஊழல் எதிர்ப்பு என்று பெரிய அளவில் தங்களின் கொள்கை, கோட்பாடுகளை பட்டியல் போட்டு காண்பித்தும் உள்ளனர்.

இந்த நிலையில், கட்சியின் சின்னம் தொடர்பாக தேர்தல் ஆணையத்தில் முறையிட இருப்பதாகவும், கரும்பு விவசாயி சின்னம் கிடைக்காத பட்சத்தில், உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடர உள்ளதாகவும் நாம் தமிழர் கட்சி தெரிவித்து இருக்கிறது. ஒருவேளை வழக்கு தொடரப்பட்டாலும், தேர்தல் ஆணைய நடைமுறையில் தலையிட முடியாது என்பதால், உடனடியாக உச்ச நீதிமன்றம் இந்த விவகாரத்தில் முடிவெடுக்காது என சட்ட வல்லுநர்கள் தெரிவிக்கின்றனர். இதனால் நாம் தமிழர் கட்சிக்கு வேறு சின்னம் ஒதுக்கப்படலாம் என்ற கருத்தும் நிலவி வருகிறது. இது அக்கட்சியினரிடையே பெரும் மனக் குமுறலை ஏற்படுத்தி உள்ளது.

எனவே, நாம் தமிழர் கட்சியின் சின்னம், கர்நாடக மாநில கட்சிக்கு ஒதுக்கப்பட்டிருப்பதால், வரும் நாடாளுமன்ற தேர்தலில் நாம் தமிழர் கட்சி எந்த சின்னத்தில் போட்டியிடும் என்பது மிகப் பெரிய கேள்வியாக எழுந்துள்ளது.

“ஆனாலும் சீமான் கட்சிக்கு சாதகமாக தீர்ப்பு வருவதற்கான வாய்ப்புகள் மிக மிக குறைவு” என்று மூத்த அரசியல் நோக்கர்கள் கூறுகின்றனர்.

“ஏனென்றால் அங்கீகாரம் பெறாத அரசியல் கட்சிகளை பொறுத்தவரை தேர்தல் ஆணையத்திடம் சின்னம் கேட்டு பெறுவதென்பது பந்திக்கு முந்து படைக்குப் பிந்து என்கிற கதைதான். நாடாளுமன்றத் தேர்தலுக்கான களப்பணிகளை நாம் தமிழர் கட்சி மாநிலத்தில் உள்ள அத்தனை பிரதான கட்சிகளையும் முந்திக்கொண்டு பல மாதங்களுக்கு முன்பே தொடங்கிவிட்டது. ஆனால் கட்சிக்கு எம்பி, எம்எல்ஏக்கள் போன்ற மக்கள் பிரதிநிதிகள் ஒருவரும் இல்லாததை மனதில் கொண்டு முதலில் தேர்தல் ஆணையத்தை அணுகி தங்களது சின்னத்தை தக்க வைக்க நடவடிக்கை எடுத்திருக்கவேண்டும். இந்த விஷயத்தில் நடிகர் கமல்ஹாசனின் மக்கள் நீதி மய்யம் மிகுந்த விழிப்புணர்வோடு இருந்து கட்சிக்கு எம்பியோ எம்எல்ஏவோ இல்லாத நிலையிலும் கூட தனது டார்ச் லைட் சின்னத்தை மீண்டும் பெற்றுவிட்டார்.

ஆனால் சீமானோ இதில் கோட்டை விட்டு விட்டு எனது கட்சியை ஒழித்துக் கட்ட சதி நடக்கிறது என்று கோபம் பொங்க கொப்பளிக்கிறார்.

நாம் தமிழர் கட்சியை பொறுத்தவரை அக்கட்சியில் இளைஞர்கள் அதிகம் என்பதால் புதிய தேர்தல் சின்னத்தை எளிதில் கொண்டு போய் சேர்த்து விட முடியும். அதே நேரம் கிராமங்களில் விவசாய குடும்பங்களை சேர்ந்த வயதானவர்களிடம் புதிய சின்னத்தை பதிய வைப்பதுதான் பெரும் சுமையாக இருக்கும். கரும்பு விவசாயி சின்னம் கிடைக்காமல் போகும் பட்சத்தில் ஏற்கனவே கடந்த தேர்தலில் அக் கட்சி அதிகபட்சமாக வாங்கிய 6.67 சதவீத வாக்குகளில் இரண்டு சதவீதம் வரை குறைவதற்கு வாய்ப்பு உண்டு.

அதேநேரம் சிறு சிறு கட்சிகள் தனித்துப்போட்டியிட விரும்புவது அரசியலில் தற்கொலைக்கு சமம் என்பார்கள். அதை சீமான் புரிந்து கொண்டு அடுத்து வரும் தேர்தலிலாவது கூட்டணி அமைத்து தனது கட்சிக்காக எம் பி, எம்எல்ஏக்களை பெறுவதுதான் அவருடைய கட்சியின் அரசியல் எதிர்காலத்திற்கு நல்லது” என்று அந்த அரசியல் நோக்கர்கள் கூறுகின்றனர். சீமான் என்ன செய்யப் போகிறார் என்பதை பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்!

Views: - 394

0

0