நீட் தேர்வை எதிர்க்க உங்களுக்கு என்ன தகுதி இருக்கு… திடீரென புனிதர் வேடம் போடும் ஸ்டாலின் : திமுக, காங்கிரஸை விளாசிய சீமான்..!!(வீடியோ)
Author: Babu Lakshmanan5 February 2022, 12:56 pm
நீட் தேர்வு மற்றும் ஜிஎஸ்டியை எதிர்க்க திமுக மற்றும் காங்கிரஸுக்கு என்ன தகுதி இருக்கு என்று நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் கேள்வி எழுப்பியுள்ளார்.
மருத்துவ படிப்பில் சேருவதற்கான நீட் தேர்வில் இருந்து தமிழக மாணவர்களுக்கு விலக்கு அளிக்கக் கோரி தமிழக அனைத்துக் கட்சி உறுப்பினர்களின் சார்பில் நிறைவேற்றப்பட்ட தீர்மானம் குடியரசுத் தலைவரின் ஒப்புதலைப் பெற்றிட, மத்திய அரசிற்கு அனுப்பி வைப்பதற்காக ஆளுநருக்கு அனுப்பப்பட்டது. 4 மாதங்களுக்குப் பிறகு ஆளுநர் இந்த தீர்மானத்தை மீண்டும் சட்டப்பேரவை குழுவினருக்கே திருப்பி அனுப்பினார்.
ஆளுநரின் இந்த செயல் நீட் தேர்வில் இருந்து விலக்கு பெறுவதற்கான நடவடிக்கையை பலவீனமடையச் செய்தது. இதையடுத்து, முதலமைச்சர் ஸ்டாலின் தலைமையில் அனைத்துக் கட்சி கூட்டம் இன்று கூட்டி ஆலோசிக்கப்பட்டது. அதன்படி, வரும் 8ம் தேதி சட்டப்பேரவை சிறப்புக் கூட்டத் தொடரை கூட்ட முடிவு செய்யப்பட்டுள்ளது.
முன்னதாக, நேற்று நீட் தேர்வை எதிர்த்து திமுக மற்றும் காங்கிரஸ் மேற்கொண்டு வரும் சட்டப்போராட்டம் குறித்து நாம் தமிழர் கட்சியின் சீமான் கேள்வி எழுப்பியுள்ளார்.
இது தொடர்பாக அவர் செய்தியாளர்களிடம் பேசியதாவது :- உங்க மனசாட்சியை தொட்டு சொல்லுங்க. நீட் தேர்வை கொண்டு வந்தது யாரென்று ? காங்கிரஸ் கட்சியா இல்லையா, அந்த நேரம் கலைஞர் ஐயா ‘நீட்’ தேர்வை ஆதரித்தும், வாழ்த்தியும் வரவேற்றும் கடிதம் எழுதியிருந்தாரா இல்லையா. அப்போ திடீர்ன்னு அதிமுக நீட்டை கொண்டு வந்துச்சுன்னு சொல்றீங்க.
நீங்க எதிர்த்து பேசுங்க. எங்களுக்கு தான் தகுதி இருக்கு. உங்களுக்கு என்ன தகுதி இருக்கு. திடீர்னு புனிதர் வேடம் போடுறீங்க. நீட் தேர்வை கொண்டு வந்தது யாரு, ஜிஎஸ்டி கொண்டு வந்தது யாரு, அந்த திட்டங்களை ஆதரித்தது யாரு? இதே காங்கிரஸ் கட்சி தான். 2019 தேர்தல் வாக்குறுதியில் காங்கிரஸ் கட்சி 9வது பக்கத்தில், 11வது வரிசையில் இந்த ஒழுங்கு முறை விற்பனை கூடத்தை, அதாவது அரசு கொள்முதல் என்ற வரிசையை நீக்கிவிட்டு, தனியார் சந்தைக்கு போங்க என்று சொன்னது காங்கிரஸ் கட்சி. இப்படி ஒரு வாக்குறுதி கொடுத்தீர்களா இல்லையா.
2016 தேர்தல் அறிக்கையில் இதே திமுக வேளாண் சட்டத்தை ஆதரிச்சு வாக்குறுதி கொடுத்துச்சா இல்லையா. நான் வேண்டுமானால் அதை எடுத்துக்காட்டட்டுமா…?. இப்ப திடீர் என்று வேளாண் சட்டம், நீட், ஜிஎஸ்டி எதிர்க்குறேன் அப்படினு சொன்னால் எப்படி ? மீத்தேன் திட்டத்தை கொண்டு வருவீங்க, ஹைட்ரோ கார்பன் திட்டத்தை கொண்டு வருவீங்க அப்புறம் எதிர்ப்பு செய்வீங்க.
ஸ்டெர்லைட் ஆலையை அதேபோல நீங்க கொண்டு வருவீங்க, நீங்களே மூடுவீங்க. நான் எங்க அப்பா செத்துட்டாருன்னு அழுவுறேன் சரி, கொலை பண்ணுனவனும் சேர்ந்து அழுவுறான் இதுல என்ன தர்மம் இருக்கு, எனக் கடுமையாக தாக்கி பேசியுள்ளார். இந்த வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.