ரூ.36 கோடி லஞ்சம் வாங்கிய திமுக நகராட்சி துணை தலைவர்… போட்டுடைத்த திமுக கவுன்சிலர் : அண்ணாமலை வெளியிட்ட ஆதாரம்..!!!

Author: Babu Lakshmanan
31 October 2023, 5:03 pm
Quick Share

நீலகிரியில் கடைகளை காலி செய்வதற்காக நகராட்சி துணை தலைவர் ரூ.36 கோடி லஞ்சம் வாங்கியதாக திமுக கவுன்சிலரே பகிரங்கமாக குற்றம்சாட்டிய வீடியோவை பாஜக மாநில தலைவர் அண்ணாமலை பகிர்ந்துள்ளார்.

இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள X தளப்பதிவில் வீடியோவுடன் ஒரு பதிவை போட்டுள்ளார். அந்தப் பதிவில், கடந்த 27.09.2023 அன்று, நீலகிரி பாராளுமன்றத் தொகுதி ஊட்டியில் #EnMannEnMakkal பயணத்தில் பேசும்போது, திமுக தனது தேர்தல் வாக்குறுதி எண் 301ல், தமிழகத்தில் உள்ள மாநகராட்சி நகராட்சிக்குச் சொந்தமான கடை வாடகை குறைக்கப்படும் என்று கூறிவிட்டு, அதற்கு நேர்மாறாக, வாடகையை பல மடங்கு உயர்த்தியிருப்பது குறித்தும், நீலகிரி நகராட்சி, நூறு ஆண்டுகளாக, ஐந்து தலைமுறைகளாக கடைகள் நடத்திக் கொண்டிருக்கும் சிறுகுறு வியாபாரிகளை, வெறும் 100 மணி நேரத்தில் கடைகளைக் காலி செய்யச் சொல்லி விரட்டுவது குறித்தும் பேசியிருந்தோம். முறையான அவகாசம் கொடுக்காமல், இத்தனை அவசர கதியில் கடைகளைக் காலி செய்து வெளியேறச் சொல்வது குறித்த சந்தேகத்தையும் எழுப்பியிருந்தோம்.

கடைகளைக் காலி செய்வதில் நகராட்சியின் அவசரம் குறித்த எங்கள் சந்தேகத்தை உறுதிப்படுத்தியிருக்கிறார் திமுக நீலகிரி நகராட்சி உறுப்பினர் திரு. முஃப்தாபா அவர்கள். நீலகிரி நகராட்சித் துணைத்தலைவர், இந்தக் கடைகளைக் காலி செய்ய 36 கோடி ரூபாய் லஞ்சம் வாங்கியிருக்கிறார் என்ற அதிர்ச்சி தரும் தகவலை, நகராட்சி கூட்டத்திலேயே வெளியிட்டிருக்கிறார். லஞ்ச லாவண்யம் தலைவிரித்து ஆடுவதை, திமுக நகராட்சி உறுப்பினரே வெளியிட்டிருக்கிறார்.

ஒரு புறம் சட்டம் ஒழுங்கு சீர்குலைவு, மற்றொரு புறம், ஊழலில் திளைக்கும் திமுக நிர்வாகிகள் என தமிழகத்தை குழிக்குள் தள்ளிக் கொண்டிருக்கிறது திமுக.

உண்மையான பிரச்சினைகளை மக்கள் மத்தியில் இருந்து திசைதிருப்ப, ஆளுநருடன் மோதல் போக்கைக் கடைப்பிடிப்பது, இந்தி எதிர்ப்பு என்று நாடகமாடுவது என்று, ஆட்சிக்கு வந்ததில் இருந்து தனது கையாலாகாத்தனத்தை மறைக்கவே முயற்சித்து வருகிறதே தவிர, ஆட்சியின் தவறுகளைத் திருத்திக் கொள்ள எந்த நடவடிக்கைகளும் எடுக்கப்படவில்லை. இந்த திமுக ஆட்சியில், தமிழகம் எதை நோக்கிச் சென்று கொண்டிருக்கிறது?, என தெரிவித்துள்ளார்.

Views: - 1601

0

0