மறு விசாரணை வளையத்தில் சிக்கிய ஓபிஎஸ்… நீதிபதி கொடுத்த திடீர் ‘ஷாக்’

Author: Babu Lakshmanan
31 August 2023, 8:00 pm
Quick Share

சொத்து குவிப்பு வழக்கில் அமைச்சர்கள் பொன்முடி, தங்கம் தென்னரசு, சாத்தூர் ராமச்சந்திரன் மூவரும் கீழமை நீதி மன்றங்களால் விடுதலை செய்யப்பட்டதை எதிர்த்து சென்னை உயர்நீதிமன்றம் தாமாக முன்வந்து மறு விசாரணைக்கு எடுத்துக் கொண்டிருப்பது திமுக அரசுக்கு மட்டுமல்ல, முதலமைச்சர் ஸ்டாலினுக்கும் தீராத தலைவலியை தருவதாக அமைந்துவிட்டது.

ஏனென்றால் இந்த மூன்று அமைச்சர்களும் தங்களுக்குள்ள செல்வாக்கையும், அதிகாரத்தையும் மறைமுகமாக நீதித்துறைக்குள் செலுத்தி விடுதலை பெற்று விட்டார்களோ என்ற சந்தேகத்தை தமிழக மக்களிடம் எழுப்பி விட்டு இருப்பதுதான்.

ஏற்கனவே அமைச்சர் செந்தில் பாலாஜியை சட்டவிரோத பண பரிவர்த்தனை வழக்கில் அமலாக்கத்துறை கசக்கி பிழிந்து வரும் நிலையில் அமைச்சர்கள் மூவர் மீதான மறு விசாரணை என்பது ஒரு அக்கினி பிரவேசம் போலாகும் என்பதை சொல்ல வேண்டிய அவசியமில்லை.

இப்படி சென்னை உயர் நீதிமன்ற நீதிபதி ஆனந்த் வெங்கடேஷ் திமுக அமைச்சர்களை கீழ் கோர்ட்டுகள் விடுதலை செய்ததை தாமாக முன்வந்து விசாரணைக்கு எடுத்துக்கொண்டு அவர்களிடம் விளக்கம் கேட்டு நோட்டீஸ் அனுப்ப உத்தரவிட்டது திமுக தலைமையை கோபத்தின் உச்சிக்கே தள்ளிவிட்டுள்ளது என்பதையும் புரிந்துகொள்ள முடிகிறது.

இதுகுறித்து திமுகவின் அமைப்பு செயலாளர் ஆர் எஸ் பாரதி, நீதிபதி ஆனந்த் வெங்கடேஷ் மீது குற்றம் சாட்டுவது போல சில கருத்துக்களையும் தெரிவித்து இருந்தார்.

“வழக்கை மீண்டும் விசாரணைக்கு எடுத்துக் கொண்டிருப்பது உள்நோக்கம் கொண்டது, நீதிபதி இதில் பாகுபாடும் காட்டுகிறார்” என்று ஆர் எஸ் பாரதி கொந்தளித்ததுடன் “அதிமுகவில் அமைச்சர்களாக இருந்த
ஓ பன்னீர்செல்வம், நத்தம் விஸ்வநாதன், வளர்மதி ஆகியோர் வழக்குகளில் இருந்து எந்த முகாந்திரத்தின் அடிப்படையில் விடுவிக்கப்பட்டுள்ளார்களோ, அதே அடிப்படையில்தான் திமுக அமைச்சர்களும் விடுவிக்கபட்டுள்ளனர். அதே அதிமுக அமைச்சர்கள் தற்போது எம்எல்ஏக்களாக உள்ளனர். ஆனால், திமுக மீது மட்டும் தாமாக முன்வந்து விசாரிக்கிறது” என்று அவர் மனம் குமுறவும் செய்தார்.

இதில் ஒரு வேடிக்கையான விஷயம் என்னவென்றால், “நாங்கள் மட்டுமா தப்பு செய்தோம், அவர்களும் தானே செய்தார்கள்? ஆனால் எங்களை மட்டுமே குறி வைக்கிறீர்களே?… அவர்கள் மீது இதுமாதிரி உங்களால் நடவடிக்கை எடுக்க முடியுமா?.”என்று சிறு பிள்ளைகள் விளையாடும்போது அடித்துக் கொள்ளும் நேரத்தில் அழுகுணித் தனம் செய்து அடம் பிடிப்பது போல கேள்வி எழுப்பியதுதான்.

ஆர் எஸ் பாரதி நீதிபதியை, கேலியாக விமர்சித்து இருந்தாலும் கூட அது சென்னை உயர் நீதிமன்ற நீதிபதி ஆனந்த் வெங்கடேஷ் நடுநிலையோடு செயல்படுகிறாரா? என்ற கேள்வியை மறைமுகமாக எழுப்பியும் இருந்தது.

ஆனால், தான் நடுநிலை தவறாத நீதிபதி, யார் எந்த கட்சியை சேர்ந்தவர் என்றெல்லாம் பார்ப்பதில்லை என்பதை உறுதி செய்வது போல பாஜக பொதுச் செயலாளர் ஹெச் ராஜா மீது 2018ம் ஆண்டு பதிவு செய்யப்பட்ட மூன்று அவதூறு வழக்குகளையும் அடுத்த மூன்று மாதத்துக்குள் ஸ்ரீவில்லிபுத்தூர் கோர்ட் விசாரித்து முடிக்கவேண்டும் என்று இரண்டு நாட்களுக்கு முன் ஆனந்த் வெங்கடேஷ் உத்தரவிட்டார்.

அடுத்ததாக ஆகஸ்ட் 30-ம் தேதி இன்னொரு அதிரடியும் காட்டினார்.
முன்னாள் துணை முதலமைச்சர் ஓபிஎஸ் 2001 முதல் 2006 வரையிலான அதிமுக ஆட்சி காலத்தில் ஒரு கோடியே 72 லட்சம் ரூபாய் சொத்து குவித்ததாக தொடரப்பட்ட வழக்கில் 2012 ம் ஆண்டு சிவகங்கை கோர்ட் விசாரித்து அவரை விடுதலை செய்தது.

அந்த தீர்ப்பை எதிர்த்துதான் சென்னை உயர்நீதிமன்றம் தாமாக விசாரணைக்கு எடுத்துக் கொள்வதாக ஆனந்த் வெங்கடேஷ் தெரிவித்தார். அதாவது
11 ஆண்டுகளுக்கு பிறகு இந்த வழக்கு புத்துயிர் பெற்றுள்ளது.

திமுக அமைச்சர்களில் சாத்தூர் ராமச்சந்திரன் 44 லட்ச ரூபாய், தங்கம் தென்னரசு 76 லட்ச ரூபாய், பொன்முடி ஒரு கோடியே 36 லட்ச ரூபாய் சொத்துக் குவித்த வழக்குகளுடன் ஒப்பிட்டால் ஓ பன்னீர்செல்வம் இவர்களையெல்லாம் மிஞ்சி இருப்பது வெளிப்படையாகவே தெரிகிறது.

எம்பி, எம்எல்ஏக்கள் மீதான சொத்துக் குவிப்பு வழக்குகளை கீழமை கோர்ட்டுகள் எவ்வாறு கையாண்டு தீர்ப்புகளை வழங்குகின்றன என்பதை கண்காணித்து அது சரியல்ல என்று கருதினால் அதை தாமாக முன்வந்து விசாரணைக்கு எடுத்துக் கொள்ளும் அதிகாரம் நீதிபதி ஆனந்த் வெங்கடேசிடம் இருப்பதால் அவர் இந்த அதிரடி நடவடிக்கைகளை எடுத்திருக்கிறார்.

மேலும் ஆகஸ்ட் 31ம் தேதியான இன்று இந்த வழக்கு சென்னை உயர்நீதி மன்றத்தில் விசாரணைக்கு வந்தபோது நீதிபதி ஆனந்த் வெங்கடேஷ் “குற்ற வழக்கு விசாரணை கேலிக்கூத்தாக்கப்பட்டு உள்ளது. இச் சட்டம் எம்பி., எம்எல்ஏக்களுக்கு பொருந்தாது என அறிவித்து விடலாம் போல் இருக்கிறது. ஆட்சி மாறும் போதெல்லாம்
லஞ்ச ஒழிப்பு போலீசார் பச்சோந்திகள் போல மாறி விடுகின்றனர். ஆட்சியாளர்களின் விருப்பப்படி லஞ்ச ஒழிப்புத்துறை செயல்படுகிறது. எம்பி., எம்எல்ஏக்கள் மீதான வழக்குகளில் பின்பற்றப்படும் நடைமுறையில் பல பிரச்சினைகள் உள்ளன.

374 சதவீத வருமானத்திற்கு அதிகமாக சொத்து சேர்த்த வழக்கில் போதுமான ஆதாரங்கள் இல்லை எனக் கூறப்பட்டுள்ளது. பன்னீர் செல்வம் வழக்கில் விசாரணை அறிக்கையை கோர்ட்டில் தாக்கல் செய்யாமல் அரசிடம் தாக்கல் செய்யப்பட்டுள்ளது.இது போன்ற தவறுகள் நடைபெற அனுமதித்தால் புற்றுநோய் போல் இந்த சமுதாயத்தை சிதைத்துவிடும். நான் பார்த்ததிலேயே மிகவும் மோசமான வழக்குகளில் இதுவும் ஒன்று. 

வழக்குகளில் இருந்து விடுவிக்கப்பட்ட உத்தரவுகள் அனைத்தும் மறு ஆய்வுக்கு எடுத்துக் கொள்ளப்படும்” என்று காட்டமாக கருத்து தெரிவித்து லஞ்ச ஒழிப்பு போலீசாரும், ஓபிஎஸ் உள்ளிட்டோரும் இந்த வழக்கு தொடர்பாக பதிலளிக்கவேண்டும் என உத்தரவிட்டார்.

இதன் மூலம் நீதிபதி பாகுபாடு காட்டுகிறார், உள்நோக்கத்துடன் செயல்படுகிறார் என்று குற்றம் சாட்டிய ஆர் எஸ் பாரதியின் வாயை அடைப்பது போல நீதிபதி தக்க
பதிலடி கொடுத்திருக்கிறார் என்பதே உண்மை.

ஏற்கனவே கடந்த ஆண்டு ஜூலை மாதம் 11-ம் தேதி நடந்த அதிமுக பொதுக்குழு கூட்டமும் அதில் நிறைவேற்றப்பட்ட சிறப்பு தீர்மானங்களும் செல்லும் என்று சென்னை உயர்நீதிமன்றத்தில் தனி நீதிபதியும், இரு நீதிபதிகள் அமர்வும் தீர்ப்பு வழங்கிவிட்ட நிலையில் தனது ஆதரவாளர்களை தக்க வைக்க முடியாமல் தடுமாறிக் கொண்டிருக்கும் ஓபிஎஸ்க்கு இன்னொரு பெரிய தலைவலியாக இது மாறி விட்டிருக்கிறது.

தனி கட்சி தொடங்கலாமா? அல்லது உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்யலாமா? என்ற குழப்பத்தில் தவிக்கும் ஓபிஎஸ்க்கு சொத்து குவிப்பு வழக்கின் மீதான விசாரணையிலும் எதிர்பார்த்த தீர்ப்பு வராவிட்டால் அவருடைய அரசியல் வாழ்க்கையே சூனியமாகிவிடும், அது மட்டுமல்ல மகன் ரவீந்திரநாத்தை எப்படியாவது மத்திய அமைச்சராக்கி விட வேண்டும் என்ற எண்ணத்தில் அரசியலில் காய்களை நகர்த்தி வரும் திட்டமும் கை கூடாமல் போய்விடுமோ என்ற அச்சமும் அவருக்கு வந்துவிட்டது.

திமுகவுக்கு ஆதரவாக செயல்பட்டு வரும் நிலையிலும் ஆர் எஸ் பாரதியால்தான் 11 வருடங்களுக்கு முன்பு முடிந்துபோன விவகாரம் மீண்டும் விஸ்வரூபம் எடுத்துவிட்டது என்று புலம்பும் நிலைக்கு ஓபிஎஸ் தள்ளப்பட்டுள்ளார்.

இந்த வழக்கில் குற்றம் நிரூபிக்கப்பட்டு இரண்டு ஆண்டுகளுக்கு மேல் சிறைத்தண்டனை விதிக்கப்பட்டு விட்டால் எம்எல்ஏ பதவியை இழக்க நேர்வதுடன் ஆறு ஆண்டுகளுக்கு அவர் தேர்தலில் போட்டியிட முடியாத நிலையும் ஏற்பட்டுவிடும்.

இன்னொரு பக்கம் டிடிவி தினகரன் கட்சியுடன் கூட்டணி அமைத்து 2024 நாடாளுமன்ற, 2026 தமிழக சட்டப்பேரவை தேர்தலையும் சந்திக்கலாம் என்று ஓபிஎஸ் நினைத்தால் அவரோ அமலாக்கத்துறை 25 வருடங்களுக்கு முன்பு விதித்த 28 கோடி ரூபாய் அபராத தொகையை செலுத்த முடியாமல் திவால் ஆகும் நிலைக்கு சென்றுவிட்டார்.

அவர் திவால் ஆனவர் என்பதை சென்னை உயர்நீதிமன்றம் அடுத்து வழக்கு விசாரணை நடைபெறும் வருகிற 4ம் தேதி உறுதி செய்து விட்டால் டிடிவி தினகரனை நம்பியும் அவருடன் கூட்டணி சேர முடியாது.

அதேநேரம் திவால் ஆனவர் தேர்தலில் போட்டியிட முடியாது என்பதால் தினகரன் பாடும் படு திண்டாட்டம் ஆகிவிடும். சசிகலாவிடம் ஆதரவு கேட்டால் அவரோ மௌனம் சாதிக்கிறார். இப்படி நான்கு பக்கமும் பல்வேறு கரடு முரடான பாதைகளை கடந்து அரசியல் செய்ய வேண்டிய இக்கட்டான நிலையில் கண்களைக் கட்டி காட்டில் விடப்பட்டவரின் கதைபோல இன்று ஓபிஎஸ் நிலைமை ஆகிப் போனது பரிதாபத்துக்குரியதுதான்.

Views: - 295

0

0