தொழிலாளர்களின் பி.எஃப். வட்டி விகிதக் குறைப்பு சரியானதல்ல : மறுபரிசீலனை செய்ய நடவடிக்கை எடுங்க : ஓபிஎஸ் வலியுறுத்தல்

Author: Babu Lakshmanan
16 March 2022, 11:26 am

சென்னை : தொழிலாளர்‌ வருங்கால வைப்பு நிதிக்கான வட்டிக்‌ குறைப்பை மறுபரிசீலனை செய்ய நடவடிக்கை எடுக்குமாறு மத்திய, மாநில அரசுகளை அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம் வலியுறுத்தியுள்ளார்.

இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது :- தொழிலாளர்களின்‌ உரிமைகளும்‌, நலன்களும்‌ எவ்வளவுக்கு எவ்வளவு பாதுகாக்கப்படுகிறதோ அவ்வளவுக்கு அவ்வளவு தொழில்‌ வளம்‌ பெருகும்‌ என்பதால்தான்‌, ‘தொழிலாளர்‌ வாழ்வு பாழ்‌ நிலமாக அல்லாமல்‌ பசுமையோடு பூங்காற்று வீசும்‌ தோட்டமாக இருக்க வேண்டும்‌’ என்றார்‌ பேரறிஞர்‌ அண்ணா அவர்கள்‌, தொழில்கள்‌ வளர வேண்டும்‌, தொழிலாளர்கள்‌ வாழ வேண்டும்‌ என்ற குறிக்கோளுடன்‌ செயல்பட்டால்‌, நாடு நிச்சயம்‌ வளர்ச்சிப்‌ பாதையில்‌ செல்லும்‌ என்பதில்‌ யாருக்கும்‌ மாறுபட்ட கருத்து இல்லாத இந்தச்‌ சூழ்நிலையில்‌, தொழிலாளர்களின்‌ நலன்‌ சற்று பாதிக்கப்பட்டிருப்பது அதிர்ச்சி அளிப்பதாக உள்ளது.

அண்மையில்‌, அசாம்‌ மாநிலத்தில்‌ நடைபெற்ற மத்திய அறங்காவலர்‌ குழுக்‌ கூட்டத்தில்‌, கடந்த இரண்டு ஆண்களாக நீடித்து வந்த தொழிலாளர்‌ வருங்கால வைப்பு நிதிக்கான வட்டி விகிதத்தை 8.5 விழுக்காட்டிலிருந்து 8.1 விழுக்காடாக குறைக்க முடிவு எடுத்துள்ளதாகவும்‌, இதற்கு மத்திய நிதி அமைச்சகம்‌ ஒப்புதல்‌ அளித்ததும்‌, இந்த வட்டிக்‌ குறைப்பு நடைமுறைக்கு வரும்‌ என்றும்‌ பத்திரிகைகளில்‌ செய்திகள்‌ வந்துள்ளன.

தொழிலாளர்‌ வருங்கால வைப்பு நிதி என்பது தங்களுடைய ஓய்வு காலத்திற்கு பயனளிக்கக்கூடிய நிதி என்பதை தொழிலாளர்கள்‌ நன்கு உணர்ந்துள்ள நிலையில்‌, அதன்மீதான வட்டி விகிதம்‌ நாளுக்கு நாள்‌ குறைந்து கொண்டே
வருவது தொழிலாளர்களை மிகுந்த சோகத்தில்‌ ஆழ்த்தியுள்ளது. 2015-16 ஆம்‌ ஆண்டில்‌ 8.8 விழுக்காடாக இருந்த தொழிலாளர்‌ வருங்கால வைப்பு நிதியின்‌ வட்டி விகிதம்‌ படிப்படியாக குறைந்து தற்போது 8.1 விழுக்காடு என்ற நிலைக்கு வந்திருக்கிறது.

மேற்படி வட்டிக்‌ குறைப்பு என்பது கடந்த 40 ஆண்டுகளுக்கு முந்தைய வட்டி விகிதம்‌ ஆகும்‌. அதாவது, 1977-78 ஆம்‌ ஆண்டில்‌ வருங்கால வைப்பு நிதிக்கான வட்டி விகிதம்‌ 8 விழுக்காடாக இருந்தது. கிட்டத்தட்ட அந்த நிலைக்கு தற்போது வட்டி விகிதம்‌ வந்துவிட்டது. சர்வதேச சூழ்நிலை, சமூகப்‌ பாதுகாப்பு மற்றும்‌ சந்தை நிலைத்தன்மை,
கொரோனா பாதிப்பு உக்ரைன்‌ போர்‌, அமெரிக்கா உள்ளிட்ட வளர்ந்த நாடுகள்‌ பணக்‌ கொள்கையில்‌ சிக்கனத்தைக்‌ கடைபிடிக்கும்‌ என்ற எதிர்பார்ப்பு ஆகியவற்றின்‌ அடிப்படையில்‌ வட்டி விகிதம்‌ குறைக்கப்படுவதாக கூறினாலும்‌, அரசின்‌ வருவாயைப்‌ பெருக்கவும்‌, செலவுகளை குறைக்கவும்‌, சிக்கனத்தைக்‌ கடைபிடிக்கவும்‌ பல வழிகள்‌ இருக்கின்ற நிலையில்‌, தொழிலாளர்‌ வருங்கால வைப்பு நிதிக்கான வட்டி விகிதத்தை குறைப்பது என்பது ஏற்கத்தக்கதல்ல. இதன்மூலம்‌ பாதிக்கப்படுபவர்கள்‌ 6 கோடியே 40 இலட்சம்‌ ஏழை, எளிய தொழிலாளர்கள்‌.

ஏற்கெனவே, கொரோனா பாதிப்பினால்‌ பல இன்னல்களுக்கு ஆளாகி, பண ரீதியாகவும்‌, மன ரீதியாகவும்‌ பல்வேறு துன்பங்களுக்கு தள்ளப்பட்டு, தற்போது ஓரளவு இயல்பு நிலைக்கு திரும்பிக்‌ கொண்டிருக்கும்‌‌ தொழிலாளர்களுக்கு இந்த வட்டிக்‌ குறைப்பு அறிவிப்பு பேரிடியாக உள்ளது. இந்த வட்டிக்‌ குறைப்பு நடவடிக்கை நிறுத்தப்பட வேண்டுமென தொழிலாளர்கள்‌ எதிர்பார்க்கிறார்கள்‌.

அவர்களின்‌ எதிர்பார்ப்பினை பூர்த்தி செய்ய வேண்டிய கடமை அரசுக்கு உண்டு. எனவே, தொழிலாளர்‌ வருங்கால வைப்பு நிதிக்கான வட்டிக்‌ குறைப்பினை மறுபரிசீலனை செய்ய உடனடி நடவடிக்கை எடுக்குமாறு மத்திய அரசைக்‌ கேட்டுக்‌ கொள்வதோடு, இதனை மத்திய அரசின்‌ கவனத்திற்கு நேரடியாக எடுத்துச்‌ சென்று, வலியுறுத்தி, தேவையான அழுத்தத்தை அளித்து, வட்டிக்‌ குறைப்பு நடவடிக்கையை மறுபரிசீலனை செய்ய நடவடிக்கைஎடுக்க வேண்டுமென தி.மு.க. அரசையும்‌ கேட்டுக்‌ கொள்கிறேன்‌, எனத் தெரிவித்தார்.

  • G.V. Prakash understood Sainthavi at the time of separation.. Affection blossomed during the divorce case பிரியும் நேரத்தில் சைந்தவியை புரிந்து கொண்ட ஜி.வி பிரகாஷ்.. விவாகரத்து வழக்கில் மலர்ந்த பாசம்!