தமிழகத்தை பின்னோக்கி தள்ளிவிடாதீர்கள்… கொஞ்சம் கவனம் செலுத்துங்க… தமிழக அரசுக்கு ஓபிஎஸ் வலியுறுத்தல்

Author: Babu Lakshmanan
25 January 2022, 1:08 pm
Stalin ops - updatenews360
Quick Share

சென்னை : தேசிய நெடுஞ்சாலைத்‌ திட்டங்களுக்கு முழு ஒத்துழைப்பு அளிக்கப்படுகிறதா என்பதை தொடர்ந்து கண்காணிக்க, தி.முக. அரசை வலியுறுத்துவதாக அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம் வலியுறுத்தியுள்ளார்.

இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது ;- இந்தியத்‌ திருநாட்டிலுள்ள மாநிலங்களின்‌ தலைநகரங்கள்‌, முக்கியத்‌ துறைமுகங்கள்‌, பெரிய தொழிற்சாலைகள்‌, சுற்றுலா முக்கியத்துவம்‌ வாய்ந்த இடங்கள்‌ ஆகியவற்றை இணைக்கும்‌ பணியினையும்‌, அதன்மூலம்‌ மக்கள்‌ தாங்கள்‌ விரும்பும்‌ இடங்களுக்கு குறைந்த நேரத்தில்‌ பயணிக்கவும்‌ தேசிய நெடுஞ்சாலைகள்‌ உதவுகின்றன. தமிழ்நாட்டில்‌ மட்டும்‌ கிட்டத்தட்ட 7,000 கிலோ மீட்டர்‌ நீளமுள்ள தேசிய நெடுஞ்சாலைகளின்‌ மேம்பாட்டுப்‌ பணி, விரிவுபடுத்தும்‌ பணி, பராமரிப்புப்‌ பணி போன்றவை மத்திய அரசின்‌ நிதி வாயிலாக மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

ஆனால்‌, இந்தப்‌ பணிகளை மேம்படுத்துவதில்‌ தமிழ்நாடு அரசின்‌ ஒத்துழைப்பு இல்லை என்று மத்திய சாலைப்‌ போக்குவரத்து மற்றும்‌ நெடுஞ்சாலைகள்‌ துறை அமைச்சர்‌ – தெரிவிப்பதும்‌, ஒத்துழைப்பு தருவதாக மாண்புமிகு முதலமைச்சர்‌ அவர்கள்‌ பதிலளிப்பதும்‌ அதிர்ச்சி அளிப்பதாக அமைந்துள்ளது.

அண்மையில்‌ மத்திய சாலைப்‌ போக்குவரத்து மற்றும்‌ நெடுஞ்சாலைகள்‌ துறை அமைச்சர்‌ அவர்கள்‌, தமிழ்நாட்டில்‌ எந்தெந்தவிதமான சாலைப்‌ பணிகள்‌ மேற்கொள்ளப்பட வேண்டும்‌ என்பதற்கான ஒட்டுமொத்த திட்டங்கள்‌ கூட தரப்படுவதில்லை என்றும்‌, தமிழ்நாடு அரசின்‌ அனுமதி பெறுவது என்பது மிகக்‌ கடினமாக இருப்பதாகவும்‌, இவையெல்லாம்‌ அதிகாரிகள்‌ மட்டத்தில்‌ தீர்க்கப்படவேண்டிய ஒன்று என்றும்‌, அதிகாரிகள்‌ அதுகுறித்து முடிவு எடுத்து
தெரிவிக்காததன்‌ காரணமாக அந்தப்‌ பணிகள்‌ எல்லாம்‌ நிறுத்தப்பட்டு உள்ளன என்றும்‌, இது’ குறித்து மாண்புமிகு முதலமைச்சர்‌, மாண்புமிகு அமைச்சர்‌ மற்றும்‌ தலைமைச்‌ செயலாளர்‌ ஆகியோரின்‌ கவனத்திற்கு எடுத்துச்‌ சென்றுள்ளதாகவும்‌ தெரிவித்ததோடு, தமிழ்நாடு அரசு ஒத்துழைப்பு கொடுக்கும்பட்சத்தில்‌ ஆயிரம்‌ கோடி ரூபாய்‌ மதிப்பிலான திட்டங்களை நடைமுறைப்படுத்தவும்‌, அனைத்துச்‌ சாலை மேம்பாட்டுப்‌ பணிகளை மேற்கொள்ள மத்திய அரசு உடனடியாக தயாராக இருப்பதாகவும்‌ தெரிவித்துள்ளார்‌.

மேலும்‌, கேரளா, கர்நாடகா, ஆந்திரப்‌ பிரதேசம்‌ மற்றும்‌ தெலுங்கானா போன்ற மாநிலங்களில்‌ பல்வேறு சாலைப்‌ பணிகளை மேற்கொள்ள அனுமதி வழங்கப்பட்டுள்ளதாகவும்‌, கேரள மாநிலத்தின்‌ முதலமைச்சர்‌ அவர்கள்‌ சாலைப்‌ பணிகளை மேற்கொள்வதற்கான சாதகமான முடிவுகளை உறுதியாக எடுப்பது மத்திய அரசுக்கு உதவிகரமாக இருப்பதாகவும்‌, இது கேரள மாநிலத்திற்கு நிறைய திட்டங்கள்‌ கிடைக்க வழிவகுத்துள்ளது என்றும்‌ கூறியுள்ளார்‌.

மாண்புமிகு மத்திய அமைச்சர்‌ அவர்கள்‌ இந்த அளவுக்கு வருத்தப்பட்டு சொல்வதைப்‌ பார்க்கும்போது, தி.மு.க அரசு விழிப்புடன்‌ செயல்படவில்லையோ என்ற எண்ணம்‌ மக்கள்‌ மத்தியில்‌ எழுகின்றது. தமிழ்நாட்டின்‌ வளர்ச்சி என்பது மாநில அரசின்‌ நிதி, மத்திய அரசின்‌ வரிப்‌ பகிர்வு, மத்திய அரசின்‌ நிதியுதவி, வங்கிகளிலிருந்து பெறப்படும்‌ கடன்‌ அனைத்தையும்‌ உள்ளடக்கியது. இந்தச்‌ சூழ்நிலையில்‌, மத்திய அரசிடமிருந்து அதிக நிதியைப்‌
பெற்று தமிழ்நாட்டின்‌ வளர்ச்சிக்கான திட்டங்களை நிறைவேற்றுவதுதான்‌ தமிழ்நாட்டிற்கும்‌, தமிழக மக்களுக்கும்‌ நன்மை பயப்பதாகும்‌, அரசியலை புறந்தள்ளிவிட்டு தமிழ்நாட்டின்‌ வளர்ச்சிக்கு முக்கியத்துவம்‌ அளிக்க வேண்டும்‌.

அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக்‌ கழக ஆட்சிக்‌ காலத்தில்‌ மத்திய அரசுக்கு தமிழ்நாடு அரசின்‌ சார்பில்‌ முழு ஒத்துழைப்பு அளிக்கப்பட்டதால்‌ தான்‌, பல்வேறு சாலை வசதிகள்‌, சுகாதாரத்‌ திட்டங்கள்‌, ஒரேயாண்டில்‌ 11 மருத்துவக்‌ கல்லூரிகள்‌, மதுரையில்‌ எய்ம்ஸ்‌ மருத்துவமனை என பல்வேறு திட்டங்கள்‌ தீட்டிச்‌ செயல்படுத்தப்பட்டன. இதுதான்‌ கூட்டாட்சித்‌ தத்துவத்திற்கு சிறந்த எடுத்துக்காட்டு, அதைவிடுத்து, தமிழ்நாட்டிற்கான வளர்ச்சித்‌ திட்டங்களில்‌, தமிழக மக்களுக்கான வளர்ச்சித்‌ திட்டங்களில்‌ ஒத்துழைப்பு அளிக்காமல்‌ இருப்பது என்பது ஏற்றுக்கொள்ளக்‌ கூடியதல்ல. மாறாக கடும்‌ கண்டனத்திற்குரியது. இவ்வாறு செய்தால்‌, தமிழ்நாட்டிற்காக ஒதுக்கப்படுகின்ற நிதி மற்ற மாநிலங்களுக்கு பிரித்துக்‌ கொடுக்கும்‌ சூழ்நிலை உருவாகும்‌. இது தமிழ்நாட்டின்‌ வளர்ச்சியை, கட்டமைப்புகளை பின்னோக்கித்‌ தள்ளுவதற்குச்‌ சமம்‌.

மாண்புமிகு மத்திய சாலைப்‌ போக்குவரத்து மற்றும்‌ நெடுஞ்சாலைத்‌ துறை அமைச்சரின்‌ கருத்திற்கு பதிலளிக்கும்‌ வகையில்‌ கடிதம்‌ எழுதியுள்ள மாண்புமிகு முதலமைச்சர்‌ அவர்கள்‌ அனைத்துப்‌ பணிகளையும்‌ விரைவுபடுத்த தமிழ்நாடு அரசு ஒத்துழைக்கும்‌ என்று கூறியிருக்கிறார்‌. இது ஓரளவுக்கு ஆறுதலை அளிக்கிறது என்றாலும்‌, இதுபோன்ற விமர்சனங்கள்‌ வருவது தவிர்க்கப்பட வேண்டும்‌ என்றும்‌, மத்திய அரசுக்கு தொடர்ந்து ஒத்துழைப்பு
அளிக்கப்படுகிறதா என்பதை அவ்வப்போது கண்காணித்து தமிழ்நாட்டை முன்னேற்றப்‌ பாதையில்‌ அழைத்துச்‌ செல்ல வேண்டுமென்றும்‌ அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக்‌ கழகத்தின்‌ சார்பில்‌ மாண்புமிகு முதலமைச்சர்‌ அவர்களைக்‌ கேட்டுக்‌ கொள்கிறேன்‌, என தெரிவித்துள்ளார்.

Views: - 459

0

0