சசிகலாவுக்கு திடீர் வக்காலத்து ஏன்…? ஓ.ராஜாவின் முடிவு யாருக்கு சாதகம்…? அனல் பறக்கும் அரசியல் களம்!!!

Author: Babu Lakshmanan
5 March 2022, 6:58 pm
Quick Share

இபிஎஸ் என்ட்ரி

2016 டிசம்பர் மாதம் ஜெயலலிதாவின் மறைவுக்குப் பின்னர் முதலமைச்சராகும் எண்ணம் அவருடைய தோழியான சசிகலாவுக்கு திடீரென்று வந்தது. அவரை அதிமுக பொதுச் செயலாளராக நியமித்து ஆட்சிப் பொறுப்பை ஒப்படைக்கவும் முடிவு செய்யப்பட்டது.

இதற்கு அப்போது கடும் எதிர்ப்பு தெரிவித்து ஓ. பன்னீர் செல்வம் தனது முதலமைச்சர் பதவியை ராஜினாமா செய்தார். அதேநேரம் சொத்துக்குவிப்பு வழக்கில் 4 ஆண்டு சிறைத் தண்டனை பெற்றதால் சசிகலாவால் முதலமைச்சர் பதவியை ஏற்க முடியவில்லை.

இந்த நிலையில்தான் எடப்பாடி பழனிசாமி முதலமைச்சர் ஆனார். ஆனால் அவர் சசிகலாவால் தேர்வு செய்யப்பட்டவர் என்பதால் மூத்த தலைவரான ஓ பன்னீர்செல்வம் பலத்த எதிர்ப்பு தெரிவித்து 12 எம்எல்ஏக்களுடன் தனி அணியாக செயல்பட்டார்.

பிறகு டெல்லி பாஜக மேலிடம் தலையிட்டதால் ஓ பன்னீர்செல்வம் மீண்டும் அதிமுகவில் இணைந்து செயல்படத் தொடங்கினார். துணை முதலமைச்சராகவும் நியமிக்கப்பட்டார்.

சசிகலா முயற்சி

கடந்த ஆண்டு கர்நாடக சிறையிலிருந்து விடுதலையான பின்பு சசிகலா தீவிர அரசியலில் ஈடுபடுவார் என்று எதிர்பார்க்கப்பட்டது. அவர் அரசியலுக்கு வரவேண்டும் என்று அவருடைய அக்காள் மகனும், அமமுக பொதுச் செயலாளருமான டிடிவி தினகரன் அடிக்கடி கேட்டுக்கொண்டபோதிலும் சட்டப்பேரவைத் தேர்தலில் ஆர்வம் காட்டாமல் ஒதுங்கிக் கொண்டார்.

Sasikala - Updatenews360

அதேநேரம் 2019 நாடாளுமன்ற தேர்தல் 2021சட்டப்பேரவைத் தேர்தல், ஊரக மற்றும் நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் என தொடர்ந்து 4 தேர்தல்களில் அதிமுக தோல்வியை சந்தித்ததால் அதிமுகவினரிடையே ஒற்றுமை இல்லாததால்தான் இது ஏற்பட்டது என்று விமர்சித்து மறைமுகமாக மீண்டும் அதிமுகவிற்குள் நுழைந்து பொதுச்செயலாளர் ஆகிவிட வேண்டும் என்ற எண்ணம் சசிகலாவிடம் துளிர்த்தது.

ஓபிஎஸ் மனமாற்றம்

இப்படியொரு சிந்தனை வரக் காரணமே, ஓ பன்னீர்செல்வம்தான். அவ்வப்போது ஊடகத்தினர் எழுப்பும் கேள்விகளுக்கு அவர் பதிலளிக்கும்போது, சசிகலாவை அதிமுகவில் சேர்ப்பது பற்றி கட்சியின் பொதுக்குழுவில் விவாதிக்கப்படும் என்று கூறி, தன்னை சசிகலாவின் ஆதரவாளர் போல் காட்டிக் கொள்வார்.

இந்த நிலையில்தான் சசிகலாவை மீண்டும் கட்சியில் சேர்க்கவேண்டும் என்று கோரி தேனி மாவட்ட அதிமுக கூட்டத்தில் ஒரு தீர்மானம் மிக அண்மையில் நிறைவேற்றப்பட்டது. அதை கட்சியின் ஒருங்கிணைப்பாளர் ஓ பன்னீர்செல்வத்திடம் மாவட்ட அதிமுக நிர்வாகிகள் கொடுக்கவும் செய்தனர். இதேபோல அதிமுக முன்னாள் எம்எல்ஏக்கள் சிலரும் தங்களது கருத்துகளை ஊடகங்கள் மூலம் தெரிவிக்க தற்போது இது பெரும் விவாதப் பொருளாகிவிட்டது.

இதனால் யார் பெரும் மகிழ்ச்சி அடைந்தார்களோ, இல்லையோ அமமுக பொதுச்செயலாளர் டிடிவி தினகரனுக்கு உற்சாகம் பீறிட்டது.

இதுபற்றி அவர் பேசும்போது, “தேனி மாவட்ட அதிமுக நிர்வாகிகள் கூட்டத்தில் என்னையும், சசிகலாவையும் கட்சியில் சேர்க்க வேண்டும் என்று வலியுறுத்தி பேசியிருக்கிறார்கள். இதேபோல ஒட்டுமொத்த அதிமுகவும் என்ன முடிவு எடுக்கிறார்கள் என்று பார்ப்போம்” என்று உணர்ச்சி ததும்ப தெரிவித்தார்.

ஓ. ராஜா நீக்கம்

இந்த நிலையில்தான் அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ பன்னீர் செல்வத்தின் சகோதரர் ஓ. ராஜா திருச்செந்தூர் சுப்ரமணிய சாமி கோவிலுக்கு சாமி தரிசனம் செய்ய சென்ற சசிகலாவை சந்தித்து பேசியிருக்கிறார். இதனால் அதிமுகவில் மீண்டும் தினகரனும், சசிகலாவும் சேர்த்துக் கொள்ளப்படுவார்கள் என்ற எதிர்பார்ப்பு அரசியல் வட்டாரத்தில் கிளப்பி விடப்பட்டுள்ளது.

இந்த நிலையில் சசிகலாவை சந்தித்துப் பேசியதற்காக ஓ பன்னீர் செல்வத்தின் சகோதரர் ஓ.ராஜா அதிமுகவில் அதிரடியாக இருந்து நீக்கப்பட்டுள்ளார்.

ஓபிஎஸ், இபிஎஸ் மீது காட்டம்

இதுதொடர்பாக ஓ.ராஜாவிடம் கேட்டபோது, “தேனி மாவட்ட அதிமுக சார்பில் நிறைவேற்றப்பட்ட தீர்மானத்தை ஓ பன்னீர் செல்வத்திடம் கொடுத்தபோது அதை அவர் வாங்கிக்கொண்டார். ஆனால் இப்போது அவரே என்னை நீக்கி இருக்கிறார். இப்படி பன்னீர் செல்வம் திடீரென்று ஏன் பல்டி அடிக்கிறார் என்று தெரியவில்லை.

என்னை நீக்க இவர்களுக்கு தகுதியில்லை, இவர்கள் என்ன ஜெயலலிதாவா ?
கட்சி நன்றாக இருக்க வேண்டும் என்பதற்காகத்தான் போய் சின்னம்மாவை சந்தித்தேன். காரில் நமது கட்சிகொடி கட்டி இருப்பவரைத் தானே சந்தித்தேன். வேறு யாரையும் இல்லையே?…

இபிஎஸ், ஓபிஎஸ் இருவரும் சேர்ந்து கட்சியை என்ன டெவெலப் செய்திருக்கிறார்கள். கடந்த 4 தேர்தல்களில் கட்சி தரைமட்டத்திற்கு வந்துவிட்டது. தொண்டர்கள் அனைவரும் சிரமப்பட்டு கொண்டிருக்கிறார்கள். சசிகலாவின் வருகையால் மட்டும்தான் கட்சியை காப்பாற்ற முடியும்.

இரட்டைக் குழல் துப்பாக்கியைப் போல ஓபிஎஸ், இபிஎஸ் செயல்பட்டு வருவதாக சொல்கிறார்கள். “இரட்டை குழல் துப்பாக்கி இல்லை, அவர்கள் தீபாவளி துப்பாக்கி – சுருள் கேப் போட்டு சுட்டுக்கொண்டிருக்க வேண்டியதுதான். இவர்களது பஞ்சாயத்தை தீர்க்கவே நேரம் போதாது. இருவரும் தனித் தனி குழு அமைத்து கட்சியை நடத்தி வருகின்றனர்.

ஒன்றாக செயல்பட சசிகலா அழைப்பு விடுத்தும் போக மறுக்கிறார்கள் என்றால் அதற்கு காரணம் பயம்தான். சசிகலா வந்தால் ஓபிஎஸ், இபிஎஸ் டம்மியாகி விடுவார்கள். அதனால்தான் அவரை உள்ளே விடக்கூடாது என இருக்கிறார்கள். தொண்டர்கள் இனியாவது சுதாரித்துக்கொண்டு இரட்டை தலைமை வேண்டாம் என்று சொல்லவேண்டும்” என ஆவேசமாக பொங்கியுள்ளார்.

சசிகலா அலப்பறை

இதுபற்றி அதிமுகவின் மூத்த நிர்வாகிகள் சிலர் கூறும்போது, “புரட்சித்தலைவி அம்மா ஜெயலலிதா அவர்கள் உயிருடன் இருந்தபோது அவரை சசிகலா, தினகரன் குடும்பத்தினர் 32 பேர் ஆட்டிப் படைத்தனர். 1995-ல் வளர்ப்பு மகன் சுதாகரனின் திருமணத்தை மிக ஆடம்பரமாக நடத்தவேண்டும் என்று கோரிக்கை வைத்த சசிகலாவின் பேச்சை கேட்கப் போய்த்தான் சொத்துக்குவிப்பு வழக்கில் அம்மா அவர்கள் சிக்கிக்கொண்டார்கள்.

அதன்பிறகும் கூட மூன்று முறை ஜெயலலிதா தலைமையில் ஆட்சி தமிழகத்தில் அமைந்தபோதும் சசிகலா செய்த அலப்பறைகளுக்கு அளவே இல்லாமல் போனது. தனக்குத் தெரியாமல் கட்சியில் எதுவுமே நடக்கக் கூடாது என்ற மமதையில் அதிகாரம் செலுத்த தொடங்கினார். இது ஓ பன்னீர் செல்வத்தின் சகோதரர் ராஜாவுக்கு தெரியாத விஷயமல்ல.

யாருக்கு சாதகம்

இப்போதும்கூட சிறையில் சொகுசாக இருப்பதற்காக 2 கோடி ரூபாய் கர்நாடக சிறைத் துறை அதிகாரிகளுக்கு லஞ்சம் கொடுத்த வழக்கில் சசிகலா சிக்கியுள்ளார். இதில் குற்றம் நிரூபிக்கப்பட்டால் அவருக்கு நான்கு ஆண்டுகளோ,5 ஆண்டுகளோ சிறைத்தண்டனை கிடைக்க வாய்ப்பு உண்டு. ஏற்கனவே சொத்துக்குவிப்பு வழக்கில் 4 வருடம் சிறைத்தண்டனை பெற்றதுடன் 10 கோடி ரூபாய் அபராதமும் சசிகலா செலுத்தியிருக்கிறார்.

இந்த இருபெரும் நிகழ்வுகளும் சசிகலாவுக்கு கடைசிவரை பெரும் மைனஸ் பாயிண்ட் ஆகவே இருக்கும். அதனால் அதிமுகவில் அவரை சேர்த்துக் கொண்டால் அதை பிரச்சாரமாக முன்வைத்தே திமுக வெற்றியை தட்டிப் பறிக்கும் வாய்ப்பை பெற்று விடலாம். இதை ஓ. ராஜா புரிந்துகொள்ள வேண்டும்.

சசிகலா, தினகரன் கைகளில் அதிமுக சிக்கினால் கட்சி சின்னாபின்னமாகி விடும் வாய்ப்புகளே அதிகம். எதிர்க்கட்சித் தலைவராக உள்ள எடப்பாடி பழனிசாமியின் ஒற்றைத் தலைமையில் கீழ் அதிமுக செயல்பட வேண்டும். அப்போதுதான் கட்சித் தொண்டர்கள் மீண்டும் அதிமுக ஆட்சி அமையும் என்கிற நம்பிக்கையில் கடுமையாக உழைப்பார்கள்.

ஏனென்றால் அதிமுகவின் 90 சதவீத தொண்டர்கள், நிர்வாகிகள், தலைவர்கள் எடப்பாடி பழனிசாமியின் பக்கம்தான் இருக்கிறார்கள்.

5 வருடங்களுக்கு முன்பு ஜெயலலிதா சமாதியில் அமர்ந்து பன்னீர்செல்வம் தர்மயுத்தம் நடத்தியபோது. சசிகலா பற்றிய 10 சதவீத உண்மைகளைத்தான் இப்போது வெளிப்படுத்தி இருக்கிறேன். உரிய நேரம் வரும்போது மீதமுள்ள 90 சதவீத உண்மைகளையும் சொல்வேன் என்று கூறியிருந்தார்.

அப்படியென்றால் சசிகலாவால் அவர் எவ்வளவு தூரம் பாதிக்கப்பட்டிருக்கிறார் என்பதை புரிந்துகொள்ள முடிகிறது. எனவே கடந்த கால கசப்பான அனுபவத்தின் அடிப்படையில் தனது மனசாட்சிப்படி பன்னீர் செல்வம் நடந்துகொள்ள வேண்டும். எக்காரணம் கொண்டும் சசிகலாவையும், தினகரனையும் அதிமுகவில் மீண்டும் சேர்த்துக் கொள்ளக்கூடாது” என்று அந்த நிர்வாகிகள் கொந்தளித்தனர்.

அதிமுகவின் மூத்த நிர்வாகிகள் வைக்கும் வாதத்திலும் நியாயம் இருக்கத்தான் செய்கிறது!

Views: - 831

0

0