ஆன்லைன் சூதாட்டத்தால் ஆயுதப்படை காவலர் துப்பாக்கியால் சுட்டு தற்கொலை… ஓராண்டு சாதனையில் இதுவும் ஒன்றா…? திமுகவை விளாசிய எடப்பாடி பழனிசாமி!!

Author: Babu Lakshmanan
7 May 2022, 6:46 pm
Quick Share

சென்னை – அம்பத்தூரில் பணியில் இருந்த ஆயுதப்படை காவலர் ஒருவர் துப்பாக்கியால் சுட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

சிவங்கை மாவட்டத்தைச் சேர்ந்த சரவணகுமார், ஆயுதப்படையில் பணியாற்றி வருகிறார். தற்போது, அவர் அம்பத்தூர் கள்ளிகுப்பம் பகுதியில் உள்ள மத்திய தொலைத்தொடர்பு பாதுகாப்பு அலுவலகத்தில் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்தார்.

அப்போது, திடீரென தான் கையில் வைத்திருந்த துப்பாக்கியால் தன்னைத்தானே சுட்டு காவலர் சரவணகுமார் தற்கொலை செய்துகொண்டதாகக் கூறப்படுகிறது.

இது தொடர்பாக தகவல் அறிந்த அம்பத்தூர் போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று விசாரித்து வருகின்றனர்.

அண்மையில் திருமணமான சரவணக்குமார் ஆன்லைன் சூதாட்டத்தால் பணத்தை இழந்ததால் இந்த முடிவை எடுத்ததாக தகவல் வெளியாகியுள்ளன.

இதனிடையே, உயிரைக் கொல்லும் ஆன்லைன் சூதாட்டம் குறித்த வழக்கில் கோட்டை விட்ட இந்த விடியா அரசு, உரிய தடை சட்டத்தை கொண்டு வராதது ஏன்? என்று தமிழக அரசுக்கு எதிர்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி கேள்வி எழுப்பியுள்ளார்.

இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள டுவிட்டர் பதிவில், “ஆன்லைன் சூதாட்டத்தால் அம்பத்தூர் ஆயுதப்படை காவலர் சரவணக்குமார் தற்கொலை செய்து கொண்ட செய்தி நெஞ்சை உலுக்குகிறது. உயிரைக் கொல்லும் ஆன்லைன் சூதாட்டம் குறித்த வழக்கில் கோட்டை விட்ட இந்த விடியா அரசு, உரிய தடை சட்டத்தை கொண்டு வராதது ஏன்?

இன்னும் எத்தனை உயிர் போகும் வரை காத்திருக்க போகிறீர்கள்? ஓராண்டு சாதனையில் இதுவும் ஒன்றா?,” என குறிப்பிட்டுள்ளார்.

Views: - 818

0

0